தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் @ விமர்சனம்

review
review
தெரிஞ்சுதானே டான்ஸ் ஆடறாங்க .

டிரிப்பிள் வி ரிக்கார்ட்ஸ் சார்பில் வினோத் வசந்த்  தயாரிக்க, அவரது சகோதரர் விஜய் வசந்த் மற்றும் ரஸ்னா இணையராக நடிக்க கே.ராமு எழுதி இயக்கி இருக்கும் படம் தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் . தெரிந்து கொண்டு  போய் ரசிக்கும் அளவுக்கு இருக்கிறதா படம்? பார்க்கலாம் !

அம்மா அப்பாவை ஏமாற்றி காசு பிடுங்கி ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு அண்ணனின் செல்போனை திருடி அதை வைத்து லவ் பண்ண முயலும் வெட்டி ஆபிசர் கார்த்திக்குக்கும் (விஜய் வசந்த்) , வீட்டின் ஒரே செல்லப் பிள்ளையாக– தூக்கம் வரும்போது எழுந்து சென்று ஃபேன் சுவிட்சை ஆஃப் செய்யக் கூட ,  படுத்தபடியே நீளமான குச்சியை பயன்படுத்தும் முழு சோம்பேறி பெண்ணான காயத்ரிக்கும் (ரஸ்னா)……… பஸ் ஸ்டாப்பில் பார்த்து காதல் வருகிறது.

காயத்ரியை அவளது அம்மா (ராஜலட்சுமி) தனது தம்பி சூரிய பிரகாஷுக்கு (பவன்) திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கும்போது , காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிடுகிறது.  கொடைக்கானல் மலையின் நடு பள்ளத்தில் உள்ள பூம்பாறை என்ற ஊருக்கு செல்ல கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருவரும் இருக்கும்போது , காயத்ரியின் தாய் மாமன் சூர்யா அவர்களை பிடிக்கிறான் . ”எங்களை பிரித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று காதலர்கள் இருவரும் சொல்கின்றனர் .

” நீங்க திட்டமிட்டபடியே போங்க . இருபது நாள் ஒரே வீட்டில் தங்கி சொந்தக் காசில் உழைச்சு சாப்பிடனும். இருபது நாள் கழிச்சு வரும்போதும் உங்க காதல் மாறாமல் இருந்தால் நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். சண்டை போட்டுட்டு வந்துட்டா எனக்கும் அவளுக்கும்தான் திருமணம். அப்புறம் நீ வந்தா கொன்னுடுவேன். இந்த இருபது நாளில் உன் கை அவ மேல படக் கூடாது ” என்று நாயகனிடம் சொல்லி காதல் ஜோடியை அனுப்பி வைக்கிறான் முறை மாமன்

review
காதல் லைன் தெரியுதா?

சேர்ந்து வாழ கொடைக்கானல் பூம்பாறைக்கு வந்த காதல் ஜோடி ஒரே வீட்டில் தங்குகிறது . நாள் முழுக்க கேரட் வயலில் வேலை செய்தாலும் கார்த்திக்கால் நூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை. காயத்ரிக்கோ சமையல் செய்ய , துணி துவைக்க , வீட்டு வேலை செய்ய .. எதுவும் தெரியவில்லை . பத்து நாளைக்கான மளிகை சாமானை அவன் கடன் வாங்கிக் கொண்டு வந்தால் அதை எல்லாம் ஒரே நாளில் அரைகுறையாக சமைத்து வீணடிக்கிறாள் .

இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு சலிப்பு கோபம் ஆத்திரம் எரிச்சல் வந்து பத்தே நாளில் “தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்”என்று சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து சென்னை வருகிறார்கள். காயத்ரி முறை மாமனோடு போகிறாள் . இருவரும் பிரிகிறார்கள். காயத்ரிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.

அதே நேரம் கார்த்திக் காயத்ரி இருவருக்கும் கொடைக்கானல் வாழ்க்கையில் தாங்கள்   செய்த தவறுகள் புரிகின்றன. காதலிப்பவர்களை அவர்களுக்கு இருக்கும் குறைகளோடும் ஏற்பதுதான் காதல் என்பது புரிகிறது. இப்போது மீண்டும் இணைந்தால் அவர்கள் மிக அற்புதமான காதல்ஜோடியாக வாழ்வார்கள். ஆனால் அவர்களுக்கு அது சாத்தியப்பட்டதா என்பதுதான் இந்தப் படம் .

review
பேக் கிரவுண்டே தெரியாம….

இந்நேரம் உங்களுக்கு தோன்றி இருக்குமே .. கதை ரொம்ப நல்லா இருக்கே என்று . உண்மை . ஆனால் கதை மட்டும் !

படத்தின் ஆரம்பப் பாடலின் இசையில் ஒரு ஏனோதானோ.!விஜய் வசந்தின் நடனத்தில் ஒரு தானோ ஏனோ ! எந்த ஒரு ஸ்டெப்பையும் ஃபினிஷ் பண்ணாமல் ஆடி இருக்கிறார் விஜய் . இந்த அலட்சியம் முதல் பாதி முழுக்க கொடி கட்டிப் பறக்கிறது .

கார்த்திக்கின் அம்மாவாக வரும் உமா பத்மநாபனின் இழுவை பேச்சு முதற் கொண்டு முதல் பாகம் முழுக்க ஒரு நாடகத் தன்மையோடு விட்டேத்தியாக நகர்கிறது . எந்தக் காட்சியிலும் ஒரு முழுமை , செய் நேர்த்தி , மெனக்கெடல் இல்லை. காயத்ரி ஒரு முழு சோம்பேறி என்பதை பதிய வைத்ததை மட்டுமே இந்தப் பகுதியில் பாராட்ட முடிகிறது.

review
கண்ணாடிக்குள்ள தெரியுதா?

இரண்டாம் பகுதியில் பிரச்னை வெடிப்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் விதத்தில் சில பல காட்சிகளில் வெடிச்சிரிப்பை இயக்குனரும் நாயகன் நாயகியும் சேர்ந்து உருவாக்குகிறார்கள். குறிப்பாக ரஸ்னாவின் அப்பாவித்தனமான நடிப்பு நன்றாக ஸ்கோர் செய்கிறது இங்கே .

பிரிந்த பிறகு இருவரும் தங்கள் தவறுகளையும் தனது துணை தியாகம் செய்த விசயங்களையும் உணர்வது அருமையான திருப்பம் . ஆனால் அதற்கான காட்சிகளில் ஆழம் கம்மி என்றால் சொன்ன விதமும் பழமை.

கதாநாயகன் பேசும்போது எல்லாம் கொந்தளித்துப் போய் “இவனை ஒரு அடியாவது நான் அடிச்சுக்கிறேன்ணே ” என்று முறைமாமனிடம் கெஞ்சும் அடியாள் புன்னகைக்க வைக்கிறார்.

தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்…….காதல் தெரியுது ; ஆனா காதலிக்க தெரியல.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →