
வெகுஜன ரசிகர்களை கவர்கிற மாதிரி படத்துக்கு பெயர் வைப்பது நிஜமாவே ரொம்ப்ப்ப்ப்ப முக்யம்! அதில் அனாயாசமாக ஜெயித்து இருக்கிறார் , தயாரிப்பாளராக ஆகி இருக்கும் நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார் . முன்னொரு காலத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர் ..
வனிதா பிலிம் புரடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வனிதா தயாரிக்க, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் படத்தின் பெயர் எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் .
ராபர்ட், பவர் ஸ்டார், பிரேம்ஜி , தயாரிப்பாளர் வனிதா, ஐஸ்வர்யா, நிரோஷா , ஷார்மிளா, சுவாதி அர்ச்சனா, நிம்மி என்று ஏகப்பட்ட பேரிளம் பெண்கள் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்க, நடிகர் ராம்ஜி எந்த நடிகரும் நடிக்கத் தயங்கும் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறாராம். அதே போல நகைச்சுவை நடிகர் பாண்டுவும் . ஆங் !
படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் மறைந்த தன் அம்மா மஞ்சுளாவின் படத்துக்கு மாலை சார்த்தி விளக்கேற்றி கண்ணீரோடு பேச ஆரம்பித்த வனிதா ” என் அம்மாவின் ஆன்மா இப்போ இங்கதான் இருக்கும் . என்னை பார்த்து பெருமைப் படும். எங்கப்பா இங்க என்னை வாழ்த்த வந்திருக்கலாம் . ஆனா வரல. பரவால்ல அது பத்தி நான் பேச விரும்பல ” என்று பழைய குடும்பப் பிரச்னைகளை சற்றே தொட்டுவிட்டு படத்தைப் பற்றி பேசினார்

“ராபர்ட் டைரக்ஷன் ஆசைல ஒரு கதையை என் கிட்ட சொன்னபோது, எனக்கு அது திருப்தியா இல்ல. அதுல அவருக்கு ரொம்ப வருத்தம். ‘இன்னும் நல்ல கதையா உன்னால பண்ண முடியும். பண்ணு’ன்னு சொன்னேன் . ஒரு நாள் ஃபிரண்ட்ஸ் கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது விளையாட்டா அவர் சொன்ன ஒரு கரு ரொம்ப நல்லா இருந்தது. அதை அப்படியே டெவலப் பண்ணி, நல்லா வந்த போது ‘எனக்கு சினிமா உலகில் இருக்கும் நண்பர்கள் மூலம் சில விசயங்களில் படத்துக்கு என்னால உதவ முடியும்’னு சொன்னேன் . உடனே ராபர்ட் ‘இவ்வளவு விசயங்களை நீ செய்ய முடியும்னா நீயே தயாரிப்பாளர் ஆயிடு’ன்னு சொன்னார் . முதல்ல அதிர்ச்சியா இருந்தது . அப்புறம் நம்பிக்கையா களம் இறங்கி படத்தை முடிச்சுட்டோம் ” என்றார் .
படத்தின் இசை ஸ்ரீகாந்த் தேவா . இந்தப் படத்துக்காக பெயரை ஸ்ரீ என்று சுருக்கிக் கொண்டு இருக்கிறார் . அது மட்டுமின்றி ஸ்ரீ மியூசிக் என்ற பெயரில் ஆடியோ கம்பெனி ஆரம்பித்து இந்தப் படத்தின் பாடல்களை சொந்தமாக வெளியிடுகிறார் ஸ்ரீகாந்த் தேவா….ஸாரி, ஸ்ரீ !
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது பாதியில் உள்ளே நுழைந்த ஸ்ரீயின் அப்பாவும் இசையமைப்பாளருமான தேவா மைக்கைப் பிடித்ததும், ” இங்க உள்ள பேனர்ல எல்லாம் ஸ்ரீ மியூசிக்னு போட்டு இருக்கு . ஆனா என் பையன் மியூசிக் கம்பெனி ஆரம்பிச்சு இருக்கறதே பதினஞ்சு நிமிஷம் முன்னாடிதான் எனக்கு தெரியும் . உலகம் எவ்வளவு வேகமா போயிட்டு இருக்கு பாருங்க ” என்று பேசி… வாழ்த்தினார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி இன்று இயக்குனராகவும் ஹீரோவாகவும் வந்திருப்பது பற்றி நெகிழ்வாக பேசிய ராபர்ட் “என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியாத இரண்டு நபர்கள் என் அப்பா ஆண்டனி .அப்புறம் வனி” என்று வனிதா விஜயகுமாரை குறிப்பிட்டுப் பேசினார் .

நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறிய ராபர்ட்டின் அப்பா ” ஏம்பா .. அம்மா பேரை சொல்லாம விட்டுட்டியேப்பா … ” என்று கூற , “என்ன பண்றது …” என்ற மாதிரி ஏதோ சொன்னார்.ராபர்ட் பக்கத்தில் வந்த வனிதா என்ன என்று ராபர்ட்டை கேட்க ஒன்றும் இல்லை என்று வனிதாவை சமாதானப்படுத்தினார் ராபர்ட் .
சரி பாட்டும் டிரைலரும் எப்படி இருக்கிறது. ?
சந்திரபாபுவை ஞாபகப்படுத்தும் பாடல் எடுக்கப்பட்ட விதத்தில் அசத்துகிறது. மற்ற பாடல்களில் குண்டு , ஒல்லி, குட்டை நெட்டை, என்று பல்வேறு ரக பெண்கள் பெண்மணிகள் அதிர அதிர ஆடுகிறார்கள் .