கமலுக்கும் பாடலுக்கும் அவ்வளவு இணக்கம் உண்டு . சின்ன வயசில், தான் நடித்த முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திலேயே ‘அம்மாவும் நீயே…. அப்பாவும் நீயே….’ என்று முழுப் பாட்டுக்கும், முகம் இளக வாயசைத்தவர் அவர்.
பிறகு பருவகாலம் படத்தில் ”ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்ற பாட்டில்தான் தனக்காக தானே தனது முதல் பாடலை பாடினார் .
அதன் பின்னர் கமலுக்காக கமல் பாடுவது என்பது அவரது அன்றைய சினிமா வேலைகளில் ஒன்றானது . இந்த நிலையில் ஒ மானே மானே என்ற படத்தின் நடிகர் மோகனுக்காக பொன் மானை தேடுதே என்ற பாடலை ஒரு பின்னணிப் பாடகர் என்ற நிலையில் இருந்து மட்டுமே கமல் பாடியது அன்று மிகப் பெரிய பெருந்தன்மையான செயலாக கொண்டாடப் பட்டது. அதன் பின்னர் அஜீத் நடித்த உல்லாசம் தனுஷ் நடித்த புதுப்பேட்டை போன்ற பல படங்களில் பின்னணிப் பாடகராக மட்டும் கமல் இருந்தார் .
ஒரு பக்கம் தனுஷ் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாட , ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் இருந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு பாடி வருகிறார் சிம்பு .
ஆனால் கமல் இன்றும் இந்த வகையில் மேற்படி இளம் ஹீரோக்களுக்கு இணையாக ஓடிக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் அட்டகாசம்.
திரிஷ்யம் படத்தின் ஷூட்டிங் வேலைகளில் இருக்கிற இந்த நேரத்திலும் ஒரு படத்தில் பின்னணிப் பாடகராக மட்டும் ஒரு பாடல் பாடி இருக்கிறார் கமல் .
விஜே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் வில்வாகிரீஷ் என்ற புது இயக்குனரின் இயக்கத்தில் கவுரவ் ஹீரோவாக நடிக்க சுந்தரமூர்த்தி என்பவர் இசையில் உருவாகும் ‘அவம்’ என்ற படத்தில் கமல் பாடிய பாடல் அண்மையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. (அவம் என்றால் தாழ்மையான என்று பொருள்)
ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்தபடி சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில், அவனுக்கு ஏற்படும் ஒரு பெண்ணுடனான சந்திப்பு, எதிர்பாராத பல நிகழ்வுகளை அவனது வாழ்வில் கொண்டு வருகிறது.
அப்படி ஒரு மேஜிக்கான சூழ்நிலையில் வரும் பாடலுக்கு ஒரு மேஜிக்கான குரல் வேண்டும் என்ற நிலையில் கமலுக்கு கோரிக்கை போக , பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.
குரலில் இருக்கும் மேஜிக் படத்திலும் இருக்கட்டும் !