ஸ்ரீ புவால் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் சுசில் குமார் , உஷா ஆகியோர் தயாரிக்க, அப்புக்குட்டி, பிரதிக், கோலிசோடா நாயுடு , மைம் கோபி, சதுரங்க வேட்டை ராம்ஸ்,
இமான் அண்ணாச்சி சம்பத் ராம், வழக்கு எண் முத்துராமன் ஆகியோர் நடிக்க , புது முகம் அக்ஷதா கதாநாயகியாக நடிக்க, செ.ஹரி உத்ரா இயக்கி இருக்கும் படம் தெரு நாய்கள் .
தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது விவசாய நிலங்களுக்கிடையில் எரிவாயு குழாய் பதிப்பதுதான் படத்தின் கதையாம்
இது பற்றிப் பேசும் இயக்குனர் ஹரி உத்ரா “கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு எரிவாயுவை கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமித்து ,
அதில் குழாய்களை பதிக்க நிலங்களை ஆக்கிரமித்துவிட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றன.
ஆனால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாய மக்கள் மட்டுமே இதை எதிர்த்து இன்று வரையிலும் போராடி வருகிறார்கள்.
கெயில் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு ஒரு பக்கம் சொன்னாலும், நீதிமன்றமே இதற்குத் தடை போட்டாலும்
வேறு, வேறு வழிகளில் இதற்கான வாய்ப்புகளை கெயில் நிறுவனமும், அரசுகளும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது பற்றிய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.
இதேபோல் மத்திய, மாநில அரசுகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் இந்தப் படத்தில் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறோம்.
கார்ப்பரேட் அரசியலின் வளர்ச்சி… சமுதாயத்தின் வீழ்ச்சி’ என்ற கருத்தை இப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை நாசமாக்கும் எரிவாயு குழாய் பதிப்புக்காக, ஒரு கார்ப்பரேட் நிறுவனம்,
ஒரு அரசியல்வாதியை கைக்குள் போட்டுக்கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அவற்றுக்கு எதிராக விவசாய மக்கள் நடத்தும் போராட்டமும்தான் இப்படத்தின் கதை.
அதே சமயம் இத்திரைப்படத்தில் மற்ற படங்களை போலவே காதலும், இளைஞர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் இணைந்தே இருக்கும்.
இதன் படப்பிடிப்பை மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் நடத்தி முடித்துவிட்டோம்.
தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இசையையும், மே மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறோம்…” என்கிறார்
நல்லதை சொல்றிங்க . சந்தோசம்.. நல்லா சொல்லுங்க . அது முக்கியம்