டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவரும் திரிஷா அல்லது நயன்தாரா படத்தின் இணை தயாரிப்பாளருமான வெடிக்காரன் பட்டி சக்திவேல்,
தனது சகோதரர் விஜயனுடன் சேர்ந்து தயாரிக்க, அறிமுக நாயகன் தமிழ் (பசங்க பாண்டி ) — கயல் ஆனந்தி இணையராக நடிக்க,
கே எஸ் ரவிகுமார், பால சரவணன், யோகி பாபு , லிவிங்க்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, ஜெயப் பிரகாஷ், தளபதி தினேஷ் ஆகியோர் உடன் நடிக்க,
கோடம்பாக்கம் , ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்நாத் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம் ‘
“சந்தியா என்ற இளம்பெண் மற்றும் அவள் தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளைத் தேடி சுற்றி நடக்கும் படம் இது
ஓர் அடைமழை மாதத்தில் தொலைந்து போன அவளது செருப்புகளைத் தேடி, குடையுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறான் கித்தான் என்ற இளைஞன்
முப்பது நாட்கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் கித்தான் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்தப் படம் .
செருப்பைக் கண்டு பிடிக்கும் கித்தானின் முயற்சி வெற்றி பெற்றதா? செருப்பு சந்தியாவை அடைந்ததா ?
கித்தானையும் சந்தியாவையும் அந்த செருப்புகள் என்ன செய்தன என்பதை நகைச்சுவையாகவும் சுவாரஸ்யத்துடனும் சொல்லி இருக்கிறோம் .
படத்தின் கதைக் களம் புதுச்சேரி மற்றும் கடலூர் . சென்னை கடலூர் பாண்டிச்சேரியில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது ” என்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்
தயாரிப்பாளர் சக்திவேல் ” நான் முருங்கைக் காய் விவசாயம் மற்றும் வியாபாரத்தில் சம்பாதித்தேன் . அந்தப் பணத்தில்தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன் .
எனவேதான் கம்பெனிக்கு டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளேன் . ( வெளைஞ்சது வித்தது எல்லாம் இங்கிலீஷ் முருங்கைக்காய் போல ). இது காமெடி கலந்த கண்ணியமான படம்
திரிஷா அல்லது நயன்தாரா படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த பாவத்துக்கு பரிகாரமாக இந்தப் படம் இருக்கும்” என்கிறார் .
இதுக்கு பிராயச்சித்தமா இன்னொரு படத்தை எடுக்கும் நிலை வராமல் இருக்கட்டும் முருங்கையாரே !






