MJD புரொடக்ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரிக்கும் புதிய படம் “திரைக்கு வராத கதை”
மம்முட்டி , மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கிய துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் இது.
கொஞ்சம் இடைவெளி விட்டு நதியா நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் இனியா, ஈடன், கோவைசரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
M.G.குமார் இசை, பின்னணி இசை அரோல் கொரோலி . ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கர். வசனம் துரைப்பாண்டியன். பாடல்கள் தமிழமுதன், பரிதி, சக்திகிருஷ்ணா. ஸ்டண்ட் மாஃபியா சசி.
படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் .. பெண்கள் .. பெண்களே ! ஒரு காட்சியில் கூட ஆண்கள் இல்லை.
கேரக்டராக மட்டும் இல்லை .. எதாவது கும்பலில்… எங்கோ தூரத்தில் நடந்து போகிற யாரோ ஒரு நபர் .. இப்படிக் கூட ஆண்கள் யாரையும் பார்க்க முடியாதாம்
படத்தின் கதை ?
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவிகள் சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது.
இதன் பின்னணியில், த்ரில்லர் சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த படமாக உருவாகியிருகிறது “திரைக்கு வராத கதை”
இந்த நிலையில் ‘படத்தில் நதியா , இனியா இருவரும் லெஸ்பியன் எனப்படும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர் .
அதனால் படத்தின் பல காட்சிகளை சென்சார் வெட்டி விட்டது ‘ என்று செய்திகள் வர, இது தொடர்பாக விளக்கம் அளிக்க, பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு .
மனம் விட்டுப் பேசிய இயக்குனர் துளசிதாஸ் ” நான் பிறந்தது கேரளா என்றாலும் , என் தாய் மொழி மலையாளம் என்றாலும், என்னை உருவாக்கிய மண் இந்த கோடம்பாக்கம் மண்தான். நான் உருவானது இங்கேதான் .
நான் மிகவும் நேசிக்கும் நடிகர்கள் பிரேம் நசீரும் சிவாஜி சாரும்தான் .
சிவாஜி சாரை பார்க்க வந்து ஏ வி எம் ஸ்டுடியோவில் வாட்ச் மேனிடம் அடி கூட வாங்கி இருக்கிறேன் .
அப்படி ஒரு நாள் வாட்ச் மேனிடம் தப்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களோடு உள்ளே போய் அவர் முகம் பார்த்து மகிழ்ந்து அந்தப் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கினேன் .
நான் வாங்கிய முதல் சம்பளம் அதுதான் .
அன்று ஏ வி எம் ஸ்டுடியோவில் இருந்து எடுத்துக் கொண்டு போன மண்ணை என் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறேன் .
என் வாழ்க்கை வரலாற்றை நான் மலையாளத்தில் எழுதி வருகிறேன் . அதன் பெயரே ‘கோடம்பாக்கத்துடே மண்ணு’ என்பதுதான்
சிவகுமார் சார் நடித்த வீட்டைப் பார் நாட்டைப் பார் என்பது முதல் தமிழ்ப் படம் . அதன் பிறகு இப்போதுதான் தமிழில் படம் எடுத்து உள்ளேன் .
அப்படிப்பட்ட நான் தமிழில் ஒரு தப்பான படத்தை எடுப்பேனா ?
இந்தப் படத்தில் சென்சார் ஓரிரு இடங்களில் கட் கொடுத்தனர் . அது ஆபாசத்துக்காக அல்ல . மது பாட்டில்களின் பெயர் . ஒரு ஊசி மருந்தின் பெயர் இவைகளையே . கட் செய்தனர் .
இந்தப் படத்தில் பெண் ஓரினச் சேர்க்கை பற்றிய விஷயம் உண்டு . ஆனால் அந்தப் பழக்கத்துக்கு ஆளானால் இங்குள்ள சூழலில் அது எவ்வளவு ஆபத்துகளுக்கு வழி வகுக்கும் என்றுதான் சொல்லி இருக்கிறேன் .
அதன் மூலம் பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை தருகிறேன் .
இது எல்லா பெண் குழந்தைகளும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ” என்றார்
தயாரிப்பாளர் K.மணிகண்டன் பேசும்போது
” இது மிக கண்ணியமான படம் .இயக்குனர் மிக சிறப்பாக எடுத்துள்ளார் . படம் கண்டிப்பாக வெற்றி பெறும். எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது ” என்றார் .
தீபாவளிக்கு திரைக்கு வருகிறது , இந்த திரைக்கு வராத கதை !