நதியா , இனியா ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கிய துளசி தாஸ் இயக்கி இருக்கும் படம் திரைக்கு வராத கதை . வந்தது எதுக்கு ? பார்க்கலாம் .
திரைப்படப் படிப்பு படிக்கும் மாணவிகள் குறும்படம் எடுக்க ஒரு மலைவாசஸ்தலத்துக்குப் போகின்றனர். நடிக்க வர வேண்டிய நடிகை வராத நிலையில்,
வழியில் சந்தித்த பெண்ணை (ஈடன்) நடிக்க வைக்கின்றனர் . அவள் மிக சிறப்பாக நடிக்கிறாள்.
அவள் விடைபெற்றுக் கிளம்பிப் போன பிறகுதான் தெரிகிறது அவள் பல மாதத்துக்கு முன்பே செத்துப் போனவள் என்று ! எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் படத்தில் அவள்,உருவம் ஆவியாக தெரிகிறது.
அதோடு குறும்படத்தில் நடித்த கதாநாயகியின் (இனியா) மீது அந்த ஆவி வந்து எல்லாரையும் மிரட்டுகிறது .
செத்துப் போன பெண் தற்கொலை செய்து கொண்டதாக கேஸ் முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது தோண்டப்பட , அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது .
பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் (நதியா) கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க .. அப்புறம் என்ன கொட்டாவிதான் .
சும்மா ஒரு பம்மாத்து படம் .
இனியா, நதியா, ஆர்த்தி, கோவை சரளா எல்லோருமே படு செயற்கையாக நடித்து படம் பார்ப்பவரை கொல்கிறார்கள்.
உருப்படியாக புதிதாக ரசிக்கும்படி ஒன்றும் இல்லை .
இப்படி ஒரு கதையை ஆண்களே இல்லாமல் பெண்களை மட்டும் வைத்து எடுப்பதற்கு என்ன அவசியம்? அதுவும் கதை திரைக்கதையில் ஒரு மாப்பிள்ளை கேரக்டர் முக்கியப் பங்கு வகிக்கும்போது?
பைக்கில் வந்து செயின் திருட முயன்று பயங்கரமாக சண்டை போடுவது கூட பெண்களேதானாம் . ஸ்ஸ்ஸ் சப்பா …. முடியல !
துளசிதாஸ் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர் . ஆனால் தமிழில் இப்படி ஒரு நாடகத்தமான அரைவேக்காட்டுப் படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கல சாமி .
திரைக்கு வந்திருக்க தேவையில்லாத கதை !