ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , நயன்தாரா , ஸ்ரீதிவ்யா , விவேக் நடிப்பில் ,
‘இதற்குத் தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி இருக்கும் படம் காஷ்மோரா
தீபாவளி விருந்தாக வரும் அக்டோபர் 28 அன்று வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
“படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் எக்கச்சக்கம் . வேறு எந்த யூனிட்டாக இருந்தாலும் படம் பொங்கலுக்குத்தான் வந்திருக்கும் .
நாங்கள் ஓய்வே இல்லாமல் வேலை பார்த்து படத்தை தீபாவளிக்கு கொண்டு வருகிறோம் ” என்றார் வி எஃப் எக்ஸ் மேர்பாரவையாளர் ஸ்டாலின் சரவணன்
“இயக்குனர் கோகுலின் இயக்கமும் கார்த்திக்கின் நடிப்பும் இந்தப் படத்துக்கு பெரும்பலம்” என்றார் ஒளிப்பதிவாளர் ஒம்.
நடிகர் விவேக் பேசும்போது
” சத்தியம் அது நிச்சயம் என்ற படத்தில் நான் சிவகுமார் சாரின் மகனாக நடித்தேன் . இந்தப் படத்தில் கார்த்திக்குக்கு அப்பாவாக நடித்தேன் .
இந்தப் படத்துக்காக கார்த்தி மிகவும் கஷ்டப்பட்டார் . படத்தில் வரும் ராஜ் நாயக் கேரக்டருக்காக அதிகாலை மூன்று மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்த்தால் அவர் மேக்கப் முடிய மணி இரண்டு ஆகும் .
இரண்டு மணி நேரம்தான் நடிக்க முடியும் . அதற்குள் மேக்கப் உருக ஆரம்பித்து விடும் . வேகமாக நடிக்க வேண்டும் . நன்றாகவும் நடிக்க வேண்டும் . அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து உள்ளார் ” என்றார் .
இயக்குனர் கோகுல் தனது பேச்சில்
” நான் கற்பனையில் யோசித்ததை தனது நடிப்பால் பல மடங்கு கார்த்தி உயர்த்தினார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர பிரபு அல்லாமல் வேறு யாராக இருந்தாலும் இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்காது ” என்றார்
கார்த்தி பேசும்போது
“நான் இந்தப் படத்தில் நடித்த போதுதான் கமல் சார் விதம் விதமான மேக்கப்பில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பது புரிந்தது .
நயன்தாரா ஒரு மகாராணியாக அந்தக் கேரக்டரை விரும்பி நடித்தார் . படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார் . ஸ்ரீ திவ்யாவும் அப்படியே .
இன்னொரு முக்கியமான விஷயம் . இந்தப் படத்தை பாகுபலியோடு ஒப்பிடுகிறார்கள் . அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை . படத்தில் வரும் வரலாற்றுப் பாத்திரம் அரை மணி நேரம் மட்டுமே வரும் .
மற்றது எல்லாம் நிகழ்காலக் கதைதான் . எனவே பாகுபலிக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தமே இல்லை ” என்றார் .
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தன் பேச்சில்
” கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முழு உழைப்பையும் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம் .
படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ” என்றார்