சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மவுன குரு தயாரிக்க , கிருஷ்ணா, சரண்யா, ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் ராம்நாத் என்பவர் இயக்கி இருக்கும் படம்
தனது சகோதரி (கஸ்தூரி) வேறு சாதி ஆணை கல்யாணம் செய்து கொண்டு போனதை அவமானமாக எண்ணி ஊரில் இனி காதல் கல்யாணமே நடக்கக் கூடாது என்று முடிவு செய்த, ராயர் ( ஆனந்தராஜ்) என்ற ஆள் படை கொண்ட கோபக்கார பெரிய மனுஷனுக்கு அதே போன்ற எண்ணம் கொண்ட ஓர் இஸ்லாமிய நண்பர் ( மனோகர்)
அந்த ஊருக்கு வந்து தங்கி மியூசிக் டீச்சராக இருக்கும் இளைஞன் (கிருஷ்ணா) ஒருவனின் நண்பன் , அந்த இஸ்லாமியரின் மகளை காதலிப்பதாக எண்ணிப் பின் தொடர்ந்தால், ஒரு நிலையில் காதலிப்பது நண்பனும் இல்லை . இஸ்லாமியரின் மகளும் இல்லை என்பது தெரியவருகிறது . யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்ற உண்மை ராயரை கொந்தளிக்க வைக்க, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்.
இதற்கிடையே காதலர்களைக் கண்டால் அந்த இடத்திலேயே கல்யாணம் செய்து வைக்கும் கட்சி நடத்தும் நபராக மொட்டை ராஜேந்திரன்.
எல்லாம் சேர்ந்து இரண்டு மணி நேரம் இருபது நிமிடம் கதற அடிக்கிறார்கள் .
எண்பது தொண்ணூறுகளில் வந்த இரண்டாம் நிலைப் படங்கள் போன்ற ஒரு மேக்கிங்.
பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . வாய் மட்டுமின்றி கண் , காது , மூக்கு, என்று நவ துவாரங்கள் வழியாகவும் ஒருவர் பேசிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ?
அது கூடப் பரவாயில்லை. பேசுவது ரசிக்கும்படியாக இருந்தால் கூடப் பரவாயில்லை .
ஒரு பூவுக்கு நூறு கல் என்று உங்கள் மேல் வீசிக் கொண்டே இருந்தால் அதை பூத்தூவல் என்றா சொல்வீர்கள். கல்லால அடிக்கிறாங்க சார் என்றுதானே கதறுவீர்கள்.
அப்படித்தான் அத்தி பூத்தாற்போல ஒரு ஜோக் கேட்பதற்கு அளவில்லா வெட்டிப் பேச்சுகள் எனும் கற்களிடம் அடி வாங்க வேண்டி இருக்கிறது .
நீண்ட இடைவேளைக்குப் பிறகு புன்னகை அரசி கே ஆர் விஜயாவைப் பார்ப்பது மகிழ்வான விஷயம். ஆனால் புன்னகை அரசி என்ற வார்த்தையை கே ஆர் விஜயாவுக்கே புரியாத வகையில் உச்சரிக்கிறார் கிருஷ்ணா .
சரண்யா உற்சாகமாக நடிக்கிறார் .
கொஞ்ச காட்சிகளே வந்தாலும் கஸ்தூரி நடிச்சுக் குவிச்சு இருக்கார். திரைக்குள் அவர் குவிக்கிற மண்ணு திரைக்கு எதிரில் உட்காந்து படம் பாக்கற நம்ம மேல தெறிக்குதுன்னா பாத்துக்குங்களேன் .
மற்றபடி வெள்ளைத் தோல் பெண்களை ரோஸ் பவுடர் கரைசலில் முக்கி எடுத்துக் காய வைத்து குட்டையான உடை போட்டு குறுக்கே மறுக்கே காடு கரை கண்மாய் எல்லாம் ஓட விட்டால் வெற்றிப் படம் வந்து விடும் என்று யாரோ இவர்களுக்குத் தப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ராயர் பரம்பரை .. ரம்பச் சிறை , கடைசி அரை மணி நேரத்துக்கு முன்பு வரை