டூரிங் டாக்கீஸ் @ விமர்சனம்

touring 4

ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் திருமதி ஷோபா சந்திரசேகரன் தயாரிக்க,இசைஞானி இளையராஜாவின் இசையில்…

சட்டத்தின் குறைபாடுகள் , ஊழல்  மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக சாட்டையடிப் படங்களை கொடுத்து புரட்சி இயக்குனர் என்று பாராட்டப்படும் எஸ் .ஏ. சந்திரசேகரன் எழுதி இயக்கி இருப்பதோடு,  முதன் முதலில் கதை நாயகனாக துள்ளலோடும் களம் இறங்கி இருக்கும் படம் டூரிங் டாக்கீஸ்.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் படத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு கதை இடைவேளைக்கு பிறகு ஒரு கதை என்று இரண்டு கதைகளை கொடுத்து இருந்தார் . அந்தப் படும் ஒரு  நாவல்டி தன்மையோடு இருந்தது .

ஆனால் இந்த டூரிங் டாக்கீஸில் எஸ் ஏ சந்திரசேகரன் இடைவேளைக்கு முன்பு ஒரு கதை இடைவேளைக்கு பின்பு ஒரு கதை என்று கொடுத்திருக்கும் இரண்டு கதைகள் .. அதன் மூலம் ஏற்படும் உணர்வுக் கொந்தளிப்புகள்…

நாலு படம் பண்ணி ஏ சி கார் ஏறி விட்டாலே படைப்புப் பணி சலித்துப் போகிறது பலருக்கு .

ஆனால் இரண்டு தலைமுறையாக தமிழ் சினிமாவை கலக்கி விட்டு ஒரு ஒய்வு எடுத்துக் கொண்ட நிலையில் மீண்டும் சிங்கமென சிலிர்த்துக் கொண்டு எஸ் ஏ சந்திரசேகரன் கிளம்பி இருக்கிறார், இந்தப் படத்தில் — கூடவே  அசால்ட்டான நடிப்பையும் வழங்கக் கூடிய  இயல்பான நடிகராகவும் !

அவர் ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள் கொடுத்து இருக்கிறார். ஆக, நாமும் ஒரே கட்டுரையில் இரண்டு விமர்சனங்களாகத்தான் எழுத முடியும் . சரிதானே சார் ?

ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஓர் அழகிய வட  இந்தியப் பெண்ணை காதலித்து,  கல்யாணக் கனவுகள் கண்டு கலந்து உண்டு உயிர்த்து ,  பெண்ணின் பெற்றோர் ஏற்காத நிலையில் ரகிசய திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ,விஷயம் அறிந்த பெண்ணின் பெற்றோரால் அந்தக் காதல் பிரிக்கப்பட்டு …

சட்டென ஒரு நாளில் மீண்டும் எங்கோ வட இந்தியாவுக்கே போய் விட்ட தனது காதல் தேவதையை,  அடுத்து ஐம்பது ஆண்டுகள் விடாமல் தேடும் முதிய காதலன் கதாபாத்திரத்தில் எஸ் ஏ சந்திரசேகரன். .

 ஏராளமான சொத்துகள் இருந்தும்  இன்னொருத்தியை மணக்க மனம் இல்லாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தபடி,  எப்போது வேண்டுமானாலும் உயிர் போகலாம் என்ற அளவுக்கான உடல் நலக் குறைபாட்டுடன் இருந்த போதும்,  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட காதலியை தொடர்ந்து தேடும் தீவிரக் காதலன் !

அவளைப் பார்க்காமல் இந்த உயிர் போகாது  என்ற – காதல் தந்த — நம்பிக்கையில் உற்சாகமாக இலகுவான தனித் தனமையோடு அவளைத் தொடர்ந்து  தேடுகிறார்.

கடைசியில் அவள் சிம்லாவில் இருப்பதாக தகவல் தெரிந்து அங்கே போகிறார் . உடல்நிலையும் மோசமாகிறது . இனி எப்போது வேண்டுமானாலும் உயிர் போகலாம் என்ற நிலைமை..

 தனது காதலியைக் கண்டு பிடித்து சாவதற்குள்  ஒரு முறையாவது  பார்க்க முடிந்ததா? இல்லையா?

ஆமெனில் நடந்தது என்ன? இல்லையெனில் நடந்தது என்ன?

– என்பதே முதல் கதை .

touring 2

மனசின் இளமையாலும் உடலின் உற்சாகத்தாலும் அந்த 75 வயது முதியவர் கதாபாத்திரத்தை அட்டகாசமாக செய்து இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன் . செயற்கையாக இல்லாத அவரது எளிய சிரிப்புகள் மூலம்,  இளைய தலைமுறைக்கும் பிடிக்கும்படி நடித்து இருக்கிறார்.

காதல் கதையில் சம்பவங்கள் என்று பார்த்தால் எல்லாமே நமக்கு பழகியவைதான். புதிதாக ஒன்றும் இல்லை . 

என்றாலும் இயக்குனர் அதை சொன்ன விதம்…  சிறு துளி பெருவெள்ளம் என்பது போல, ஒவ்வொரு காட்சியிலும் துளித்துளியாய் உணர்வுகளை கோர்த்து கிளைமாக்சில் ஒட்டு மொத்த உணர்வுகளையும் ஒரு சேரப் பாய்ச்சி,  கனமான கிளைமாக்ஸ் கொடுத்து தனது அனுபவ முத்திரையை இயக்குனராக மீண்டும் பதித்து இருக்கிறார் .

இயக்கம் என்பது வெறுமனே கதை சொல்வது மட்டுமல்ல , ஒரு மெல்லிய சரடு  போன்ற கதையையும் கூட  இயக்கத்தால் எப்படி சுவையாக படைப்பது என்று காட்டி இருக்கிறார் .

முதியவரின் சமீபத்திய தேடலை நிகழ்காலம் , அதாவது 2014 என்று எடுத்துக் கொண்டால்,  ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்றால் 1964 ஆண்டைக் குறிக்கிறது . கிட்டதட்ட காதலிக்க நேரமில்லை படம் வந்த காலக்கட்டம் அது . அதை மனதில் வைத்து ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய காதல் பிளாஷ்பேக் காட்சிகளை காதலிக்க நேரமில்லை ஸ்டைலில் ஒரு பீரியட் படம் போல எடுத்து இருந்தால் இன்னும் ஜொலித்திருக்கும் இந்தக் கதை.

அதே போல ஐம்பதாண்டுகளுக்கு முண்டு நடக்கும் பிளாஷ்பேக்கில் ஒரு காட்சியில்.,  காதலி ”எனக்கு எயிட்ஸ் இருக்கு” என்று கூறுவது கால வழு!  அப்போது எயிட்ஸ் நோய் கிடையாதே.

ஆனாலும் என்ன…. கதை முடியும் போது ஒரு கனமான காதல் சோகத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு மெல்லிய வலி தந்து   மனதில் நிலைக்கிறது முதல் படம் .

இடைவேளைக்கு பிறகு வரும் இரண்டாவது கதை ஆரம்பித்து  சில நிமிடங்கள் வரை சத்தியமாக எதிர்பார்க்க முடியாது… இனிமேல் இருக்கிறது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரனின் விஸ்வரூபம் என்பதை !

முதல் கதையில் பூ வைத்தவர்,  இரண்டாவது கதையில் தீ வைக்கிறார் . புரட்சித் தீ !

தான் பலமுறை பாய்ந்து படர்ந்து நீள ஆழ அகலம் பார்த்த அதே சமூகச் சாடல் களத்தில் மீண்டும் ஓர் அதிரடி . அதே நேரம் ‘ என்னவோ,  இதுவரை இப்படி ஒரு சமூக அக்கறைப் பின்னணியில் படமே எடுத்தது இல்லை’  என்பது போலவும்… ‘இப்போதுதான் முதல் தடவை எடுக்கிறேன் ‘ என்பது போலவும் அப்படி ஓர் ஆவேசம் !

touring 5

கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து,  தன்னையும் தனக்கு பிறகு பத்து வருடம் கழித்துப் பிறந்த தங்கையையும் அநாதையாக்கி விட்டு , அம்மா அப்பா இருவரும் இறந்து விட்ட நிலையில் , தன தங்கைக்கு தாயுமானவளுமாக மாறி வாழும் ஓர்  இளம் பெண் !

விளையாடும் போது ஊசலாடும் தன் தங்கையின் காலில் ஒரு கொலுசு இல்லாததில் மனம் வாடி, தன் கல்யாணத்துக்கு என்று அம்மா வைத்து விட்டுப் போயிருந்த தாலியை விற்று,  தங்கையின் காலுக்கு கொலுசு போடும்  பாசம் அவளுக்கு 

மணல் கொள்ளையை தட்டிக் கேட்கும் தாசில்தாரை அந்த மணல் படுகையிலேயே குழி தோண்டிப் புதைப்பது முதற்கொண்டு,  தாழ்த்தப் பட்டவர்கள் பள்ளிக்கூடத்துக்கு படிக்கக் கூட கூடாது என்று தடுக்கும் வரையில் அனைத்து வித அராஜகங்களையும் செய்யும் ஜாதி வெறி பணவெறி அதிகார வெறி என்று அனைத்து அநியாய வெறிகளும் கொண்ட ஒரு குடும்பம் மற்றும் அதே போன்ற ஒரு கூட்டத்தின்  முன்னால்,  தொடர்ந்து வீழ்த்தப்பட்ட  மக்களாகவே இருக்கிறார்கள் அந்த தாழ்த்தப்பட்ட மக்கள்.
 
தீண்டாமை தீட்டால் பள்ளிக் கூடத்தில் படிக்கும் தங்கையும் அவள் மீது அன்பு காட்டும் அந்த ஜாதி வெறி வீட்டின் சிறுமியும் பிரிக்கப்படுவதோடு , ஒரு நிலையில் பள்ளியில் படிக்கும் உரிமையும் தாழ்த்தப்பட்ட தங்கக் கொலுசுகளுக்கு மறுக்கப்படுகிறது .

தட்டிக் கேட்ட அந்த சிறுமியை அந்த  ஜாதி வெறி பிடித்த அராஜகர்கள் தூக்கிக் கொண்டு போய் கரும்பாலையில் ரோஜாசாறு பிழிவது சீரழித்து சிதைத்துக் கொன்று,  கயிற்றில் கட்டி தூக்குப் போட்டுக் கொண்டது போலத்  தொங்க விடுகிறார்கள் .

தனது வாழ்வே இடிந்தது போல ஒடிந்து போகும் அந்தத்  தாயுமானவளுக்கு,  ஒரு தொலைக்காட்சி நிருபர் ஜோடியின் உதவி கிடைக்க, தன் தங்கையை சீரழித்த வீட்டுக்குள் மீண்டும் வேலைக்காரியாகப் போகும் அந்த இளம்பெண் , குற்றவாளிகளையும் அந்த நிலையிலும் தன்னை போகப் பொருளாக்க முயலும் அந்த வீட்டுக் கிழவனையும் பழிவாங்க முயல ..

அவளால் அது முடிந்ததா? எனில் எப்படி பழி வாங்கினாள்?  முடியவில்லை எனில் நடந்தது என்ன? அந்த வீட்டில் இருந்து அவளாவது மானத்துக்கும் உயிருக்கும் இழப்பு இல்லாமல் மீள முடிந்ததா ?

– என்பதே இரண்டாவது கதை .

touring 1

நடிப்பு, திரைக்கதை, காட்சிகள்,  ஒளிப்பதிவு , ஷாட்கள், ஒட்டுமொத்த இயக்கம் , டைரக்டோரியல் டச், உத்தி, கிளைமாக்சின் யதார்த்த நியாயம் என்று எல்லா விதத்திலும் குறையின்றி,  குன்றின் மேல் விளக்காக  கம்பீர ஒளி வீசுகிறது , இந்த இரண்டாவது படம் .

நாயகியாக நடித்து இருக்கும் சுனு லக்ஷ்மி…. அடேயப்பா ! உற்சாகம் , கண்ணீர் , சோகம் , அமைதி, வஞ்சம் , இயலாமை , பாசம் , வேகம் என்று பல்வேறு உணர்ச்சிகளுடன் சகல பிரேம்களிலும் பொங்கிப் பிரவகிக்கிறார். மிக அருமையான நடிப்பு.

முதல் கதையில் சிம்லா , அங்கே இங்கே என்று பல வட இந்திய ஊர்களில் அலைய வேண்டிய நிலையில்,  ஷாட்கள் விசயத்தில் அடக்கி வாசித்திருக்கும் இயக்குனர் , இந்த இரண்டாவது கதையில் கேமராவை வெறி படித்து விளையாட வைக்கிறார் . உதாரணம் நாயகியை தொலைக்காட்சி நிருபர் சந்திக்கும் காட்சியின் ஆரம்பம்!

செத்துப் போன கிழவனின்  பிணம் முன்பு நாயகி போடும் அந்த ஆவேச அதகள குத்தாட்டம்….

அடடா! காலம் காலமாகவே தாழ்த்தப்பட்ட பெண்களிலும் தாழ்த்தப்பட்டவர்களான,   தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண்களின் வெடித்துக் கிளம்பும் ஆங்கார ஓங்காரத்தின் வெற்றி ரீங்காரமாகவே ஒலிக்கிறது . படைப்பாளியின்  மனசு பிடரி சிலிர்க்கும் சிங்கம் போல, கம்பீரமாக வெளிப்படும் அற்புதமான காட்சி அது .

கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் பெண் மனசுக்கென்று பெரும்பாலும் பேதம் இருப்பதில்லை என்பதை உணர்த்தும் அந்த கிளைமாக்சுக்கு முந்தைய காட்சி… ஜாதித் துவேஷத்தை வளர்க்காமல்  நல்லவர்களை கூனிக் குறுக வைக்காமல், பொறுப்புணர்ந்து இயக்குனர் பயணித்திருக்கும் கண்ணியமான காட்சி.

அவ்வளவு கனகச்சிதமான கிளைமாக்ஸ் அதை இயக்குனர் எடுத்திருக்கும் விதம்,  சாதாரணக் காட்சியைக் கூட வன்முறையைத் தூண்டும் வகையில் எடுப்போருக்கான வழிகாட்டி .

காதல் படத்திற்கு மயிலிறகால் வருடி  மனதைப் பிசைந்தும் , புரட்சிப் படத்துக்கு ரத்தத்தை கொதிக்க வைக்கும் ரசவாதம் செய்தும் பெரும்பலமாக இருக்கிறது இசைஞானி இளையராஜவின் இசை . அவர் இசையே இரண்டு படங்களுக்கும் யானை பலம் தருகிறது .

முதல் படமாக காதல் கதையையும் இரண்டாவது படமாக சமூக அக்கறைக் கதையையும் வரிசைப் படுத்திய விதத்தில் மந்தகாச வெற்றிப் புன்னகை புரிகிறார் இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகரன் .

டூரிங் டாக்கீஸ் … தேன் ஊறும் சுனையும்  எரிமலைக் குழம்பு நதியும்

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
எஸ் ஏ சந்திரசேகரன் , இளையராஜா, சுனு லக்ஷ்மி ,தயாரிப்பாளர் ஷோபா சந்திர சேகரன் , ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரெஜேஷ்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →