காமெடி செண்டிமெண்ட் ஆக்ஷன் மூன்றையும் தில்லாக, விதம் விதமாகக் கலந்த வகையில், திருடன் போலீஸ் மூலம் மனம் கவர்ந்த இயக்குனர் கார்த்திக் ராஜு.
அவரது இயக்கத்தில் அதே படத்தைத் தயாரித்த அதே கெனன்யா பிலிம்ஸ் ஜே. செல்வகுமார் தயாரிப்பில், திருடன் போலீஸ் நாயகன் தினேஷ் மற்றும் பாலசரவணன் ஆகியோர நடிக்க ,
நந்திதா, சரத் லோகேஷ்வா , திலிப் சுப்பராயன், ஸ்ரீமான் , ஜான் விஜய் , சாயா சிங்க ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் உள்குத்து .
நாகர்கோவில் மீனவர் வாழ்க்கைப் பின்னணியில் அட்டகாசமான ஆக்ஷன் படமாக இதை கார்த்திக் ராஜ் உருவாக்கி இருக்கிறார் .
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட சிறு முன்னோட்டம், முன்னோட்டம் மற்றும் பாடல்களில் இருந்தே அது தெரிகிறது .
காதல் , நகைச்சுவை , அதிரடி ஆக்ஷன் நிறைந்த காம்போவாக முன்னோட்டம் இருக்க, பாடல்கள் இனிமை .
நிகழ்ச்சியில் பேசிய பலரும்த யாரிப்பாளர் செல்வகுமாரின் நட்பு ரீதியான குணத்தையும் இயக்குனர் கார்த்திக் ராஜுவின் படைப்பாற்றலையும் பாராட்டிப் பேசினார்கள் .
நடிகை நந்திதா பேசும்போது ” அட்டைக்கத்தி படத்தில் நானும் தினேஷும் சேர்ந்து நடித்தோம். அதன் பிறகு மீண்டும் அந்த காம்பினேசன் அமையவில்லை .
அதை இந்தப் படத்தில் அமைத்துக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜுவுக்கும் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கும் நன்றி . கார்த்திக் ராஜு சிறப்பாக படத்தைக் கொடுத்து உள்ளார் .
முழுக்க முழுக்க பெண் குரலில் எனக்கு ஒரு பாடல் கொடுத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு நன்றி ” என்றார் .
நடிகர் பால சரவணன் தனது பேச்சில் ” திருடன் போலீஸ் படத்தில் நடித்த சமயம் , இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே எனக்கு இந்த கேரக்டர் இருக்கிறது என்பதை கார்த்திக் ராஜு சொன்னார் .
அப்படியே கொடுத்தார் . அவரது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடித்துள்ளதாக நம்புகிறேன் ” என்றார்
தினேஷ் பேசும்போது ” கார்த்திக் ராஜ் – செல்வகுமார் காம்பினேஷனில் உருவான திருடன் போலீஸ் படத்தில் நடித்த போதே இந்தப் படம் முடிவு செய்யப்பட்ட ஒன்று .
இப்போது திரையை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. நடிகர்களிடம் வேலை வாங்குவதில் இயக்குனர் ரஞ்சித் போலவே கார்த்திக் ராஜுவும் வல்லவர் .
இது வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை ” என்றார் .
இயக்குனர் கார்த்திக் ராஜு தனது பேச்சில் ” கிராஃபிக்ஸ் ஃபீல்டில் இருந்து விரும்பி சினிமாவுக்கு வந்தவன் நான்.
அப்போது பத்திரிக்கையாளர் ரவி ஷங்கரை சந்தித்து சினிமா பிரமுகர்களை அறிமுகப்படுத்தச் சொல்வேன் . அவரும் பல பேரை அறிமுகம் செய்து உதவினார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமாரும் நானும் ஒன்றாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தோம். பிறகு அவர் வேறு தொழிலில் ஈடுபட்டு வளர்ந்தார் .
எனது சினிமா ஆர்வம் பார்த்து செல்வகுமாரே படம் தயாரிக்க வந்தார் . அப்படித்தான் யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே நான் இயக்குனர் ஆனேன் .
இப்போது இரண்டாவது படத்திலும் இணைந்து இருக்கிறோம் .
இந்தப் படத்தில் எனக்கு அமைந்த டெக்னீஷியன்கள் நடிகர்கள் அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது .
குறிப்பாக தினேஷ் … படத்தின் முதல் இரண்டு ரீல்களில் பால சரவணன்தான் ஆக்கிரமித்து இருப்பார் . அதுபோல மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளில் அவர் பங்களிப்பே அதிகம் இருக்கும் .
திரைக்கதைக்கு இது எல்லாம் தேவை என்பதை உணர்ந்து தினேஷ் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது பாராட்டுக்குரியது .
படத்தில் பனிரெண்டு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன . அவற்றை வித்தியாசமான களங்களில் பார்ப்பீர்கள் \
இந்த பாடல்களை ஆன் லைனில் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுக் கொடுத்து இருக்கிறார். அது இப்போது வைரல் ஆகிக் கொண்டு இருக்கிறது . அவருக்கு நன்றி ” என்று கூறியவர்,
தொடர்ந்து , ” நந்திதா பேசும்போது முதன் முதலாக அவருக்கு பெண் குரலில் முழு பாட்டு கொடுத்ததாக கூறினார் . ஏங்க .. கதாநாயகிக்கு பெண் குரலில்தான் பாட்டு கொடுக்க முடியும் .
பின்ன ஆண் குரல்லயா கொடுக்க முடியும்?” என்று ஜோக் அடித்து கலகலக்க வைத்தார் .
நன்றி உரையாற்றிய தயாரிப்பாளர் செல்வகுமார்
” இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பிலும் ஒரு நாள் கூட நான் ஸ்பாட்டுக்கு வராதது ஆச்சர்யமாக உள்ளது என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள் .
டைரக்டர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்த பின்னர் அவரை நம்பி விடுவேன். அது என் பழக்கம் . அவர் நடிகர்களை சக டெக்னீஷியன்களை நம்புவார் . அதுதான் சரி
ஒரு டைரக்டரை நியமித்து விட்டு ஒவ்வொரு விசயத்திலும் அவரை எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .
அப்படி கேட்க ஆசை வந்தால் நானே டைரக்ட் செய்து விட வேண்டும் . அதுதான் முறை ” என்றார் .
உள்குத்து வெற்றி பெற வாழ்த்துகள் !