கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் .சசிகுமார் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க ,
வேல ராமமூர்த்தி, நிகிலா விமல், மு.ரா, ஆகியோர் நடிப்பில் , அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கி இருக்கும் படம் கிடாரி .
இந்தக் கிடாரி சண்டியரா ? பசுமாடா ? பார்ப்போம் .
சாத்தூரின் ஒரு பகுதியில் ஆட்டுக்கார சந்து என்ற சிறு சந்தின் இருபக்கமும் அங்காளி பங்காளி வீடுகள்தான் . அங்கே பெரிய தலை கொம்பையா பாண்டியன் ( வேல ராமமூர்த்தி ).
ஆட்டு சந்தை உள்ளிட்ட சில தொழில்களோடு அடிதடி , கட்ட பஞ்சாயத்து , சொத்து வில்லங்கங்களில் தலையிட்டு பலம் காட்டிக் காசு பறிப்பது என்று சகல செயல்களிலும் ஈடுபடும் கொம்பையவுக்கு
அதே போன்ற வேலைகளில் ஈடுபடும் பல எதிரிகள் உண்டு . யார் யாரை போட்டுத் தள்ளுவது என்ற போராட்டம், வஞ்சகம் , துரோகம் என்று எல்லா வித செயல்பாடுகளும் உண்டு .
அவர்களிடம் இருந்து கொம்பையா பாண்டியனைக் காப்பாற்றுவது விசுவாசம் மிக்க இளைஞனான கிடாரி (சசிகுமார்) . பாண்டியனின் இறந்து போன நண்பனின் மகன்
பாண்டியனின் மகன் உடையநம்பிக்கும் (வசு மித்ர) கிடாரிக்கும் வீட்டில் யாருக்கு முக்கியத்துவம் என்ற வகையில் ஈகோ யுத்தம் . இதை எதிரிகள் சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர் .
ஒரு நிலையில் கொம்பையாவுக்கும் அவரது மகனுக்குமே முட்டிக் கொள்கிறது .
இந்த நிலையில் கொம்பையா பாண்டியனை சிலர் குத்திக் குற்றுயிராக்க , செய்தது யார் என்று கிடாரி தேட, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
மேக்கிங்கில் நேட்டிவிட்டியை அட்டகாசமாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன் . படம் முழுக்க மண் சார்ந்த முகங்கள் தேர்வு அபாரம .
வண்டி வரும் வண்டி வரும் பாடல் வரிகள் , இசை , நடனம் படமாக்கல் என்று எல்லாமே . அவ்வளவு ஃபிரஷ் ஆக , மண் மணத்துடன் மனதைக் கொள்ளை கொள்கிறது
இந்தப் படத்தின் உச்சக் கட்ட சிறப்பு அந்த பாடல்தான் . சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்
வழக்கமான அதிரடி ஆக்ஷன் கிராமத்து ஹீரோவாக சசிகுமார் . குறை சொல்ல ஒன்றும் இல்லை . கொம்பையா பாண்டியனாக கொட்டி முழக்குகிறார் வேல.ராமமூர்த்தி,
நாயகி நிகிலா ரசிக்கும்படி சில காட்சிகளிலும் செயற்கையாக சில காட்சிகளிலும் நடித்துள்ளார் . அம்மா , மதனி கதாபாத்திரத்துக்கு நல்ல நடிகையர் தேர்வு .
எனினும் பார்த்துச் சலித்த கதை, பல படங்களில் வந்த காட்சிகள், மாறாத சசிகுமார் கேரக்டர், என்று அடிப்படைக் கதையில் புதுமை இல்லாதது சோர்வு தட்டுகிறது .
நிறைய பிளாஷ் பேக் வருவது டெக்னிகலாக தப்பில்லைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் புதுசு புதுசாக வரும் கேரக்டர்கள் ,புதுப் புதுக் கதைகள் வருவது பின்னடைவே .
ஒரு நேரம் வரை எஸ்டாப்ளிஷ்மென்ட் செய்து முடித்து விட்டு அப்புறம் டாப் கியரை போட வேண்டாமா பங்காளிகளா ?
கிளைமாக்சும் காமா சோமா ரகம் . திரைக்கதையில் தெளிவும் வலிவும் இல்லை . கொம்பையா பாண்டியனை குத்தியது யார் என்ற கேள்விக்கு கிளைமாக்ஸ் விடையாக ,
விசுவாசத்தின் உச்சமாக இருந்த கிடாரிதான் குத்தினான் என்று தில்லாகச் சொல்லி அதற்கு நியாயமான ஒரு கதையை சொல்ல என்ன பயம் ?
அதை விட்டுவிட்டு சம்மந்தி சம்மந்தம் இல்லாமல் குழப்புகிறார்கள் .
கிடாரி…. நோஞ்சான்