மு. ராமசாமி, நாசர், புகழ் மகேந்திரன், பவுலின் நடிப்பில் மஹிவர்மன் இயக்கி இருக்கும் படம்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி (மு.ராமசாமி) மீது பக்கத்து ஊர் உயர்சாதி குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் , செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு வந்து மோதி கையை உடைத்து தீக்காயப்படுத்தி விடுகிறான் . அதற்கான நிவாரணம் கேட்கச் சொல்லி அவரைத் தூண்டி விடும் உள்ளூர் உயர் சாதி ஆட்களும் அவர்களுடன் முரண்படும் பக்கத்து ஊர் ஆட்களும் சாதி ஆணவத்தோடு எப்படி இந்த சலவைத் தொழிலாளி குடும்பத்தை பந்தாடுகிறார்கள்.
ஒரு நிலையில் ஆதே சாதி ஆணவம் காரணமாக ஒன்று சேர்ந்து எப்படி அந்தக் குடும்பத்தை கையறு நிலைக்கு கொண்டு வருகிறார்கள் . இதில் கோர்ட்டுகளில் வாய்தா வாய்தா என்று போட்டு எப்படி ஏழை மக்களை அலைக்கழித்து சீரழிக்கிறார்கள் என்பதே இந்தப் படம் .

படத்தின் எளிமையும் யதார்த்த இயல்பும் கவர்கிறது.
சாதி காரணமாக ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் (புகழ் மகேந்திரன்) – ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் (பவுலின் ஜெஸ்ஸிகா) காதல் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை வலிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். அருமை .
கிராமங்களில் ஏழைகள் பாட்டளிகளுக்கு இடையே கூட சாதி ஆணவம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதை அதிரும்படி சொல்கிறார்கள்
எளிய குரல்களில் வரும் பாடல்கள் கவர்கின்றன. கிராமத்து முகங்கள் சிறப்பு. ஆனால் இன்னும் சிறப்பான நடிப்பை வாங்கி இருக்கலாம்
மிக நல்ல விசயம் சொல்லும் படம். ஆனால் தொழில் நுட்ப நேர்த்தியோ கலை நேர்த்தியோ இல்லாத உருவாக்கம் .
ஒரு வணிக சினிமாவுக்கு கருத்து மட்டுமல்ல…. உத்தியும் முக்கியம்.
என்ன சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.
ஒரு காட்சி படத்தின் ஆரம்பத்தில் வந்தால் எப்படி எந்த கால அளவில் சொல்ல வேண்டும்.
அதுவே இடைவேளைக்குப் பின்னாலும் கிளைமாக்ஸ்க்கு முன்பாகவும் வந்தால் எந்த நீளத்தில் சொல்ல வேண்டும் என்ற தெளிவும் அறிவும் முக்கியம்
சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடும் படத்துக்கு பாய்வும் ஓட்டமும் முக்கியம்.
எனினும் கடைசி காட்சி கலங்கடிக்கிறது