சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க ஜீவா, காஷ்மீரா பர்தேசி, பிரக்யா நக்ரா, வி டி வி கணேஷ் நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கி இருக்கும் படம்.
தன் மகள்கள் இருவரையும் (காஷ்மீரா பர்தேசி, பிரக்யா நக்ரா) துபாயில் செட்டில் ஆகி இருக்கும் மலையாளிகளுக்கு திருமணம் செய்து வைத்து நல்லபடியாக வாழவைக்க வேண்டும் என்பதற்காக பாலக்காட்டில் இருந்து கோவை வந்து குடும்பத்தோடு வீடு எடுத்துத் தங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் ஒரு மலையாளி ( சித்திக்).
அந்தப் பெண்களில் இளையவளுக்கு (பிரக்யா நக்ரா) அதே தெருவில் குடியிருக்கும் ஆசிரியரின் (கே எஸ் ரவிகுமார்) மகனான தமிழ் இளைஞன் (ஜீவா) மேல் காதல் வருகிறது. ஆரம்பத்தில் அவன் அதை ரசித்தாலும் ஒரு நிலையில் அவனுக்கு மூத்த பெண் மீது (காஷ்மீரா பர்தேசி,) உண்மைக் காதல் வருகிறது . அவளும் ஏற்கிறாள்.
இளைஞனின் நண்பரான ஓர் அரசியல்வாதி (வி டி வி) கணேஷ் வயாகரா போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்துபவர் . அவரது தவறான ஆலோசனைகளால் காதல் ஜோடிக்குள் சண்டையும் பிறகு சமாதானமும் வருகிறது . பெண்ணின் அப்பாவுக்கு ஒரு நிலையில் விவரம் தெரிந்து அவர் காதல் ஜோடியைப் பிரிக்க முயல என்ன நடந்தது என்பதே படம்.
காமெடியும் காம நெடியும் பின்னிப் பிணைந்த காட்சிகள் படம் முழுக்க .
உறுத்தாதவர்கள் ரசிக்கிறார்கள் . உறுத்தப்படுபவர்கள் நெளிகிறார்கள். வெளியே கண்டித்து விட்டு ரகசியமாக ரசிக்கிறார்கள் சிலர் .
ஆனால் அதையும் மீறி காட்சிகளை துவங்கி முடிப்பதில் அசத்துகிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன் . மேலே சொன்னதற்கும் அப்பாற்பட்டு ரசனையான வசனங்களும் படத்தில் உண்டு . உங்களுக்கு எது பிடிக்குதோ அதை ரசிச்சுட்டு போங்க என்று சொல்லாமல் சொல்கிறார்
நாயகன் கதாபாத்திரத்தில் அவ்வளவு உற்சாகமாக உத்வேகமாக அழகாக வெகு இயல்பாக நடித்து அசத்தி இருக்கிறார். எஸ் எம் எஸ் படத்தில் பார்த்த அதே எனர்ஜி . மிக இயல்பாக அவர் பேசி நடித்து இருப்பதைப் பார்க்கும்போது நாம் பார்ப்பது ஒரு சினிமாவின் காட்சிகள் அல்ல. நிஜ சம்பவம் என்று உணரும் அளவுக்கு சம்பவம் செய்கிறார் ஜீவா . அவர் நடிப்பதைப் பார்க்கப் பார்க்க நமக்கும் அந்த உற்சாகம் தொத்திக் கொள்கிறது . லவ்லி . முக்கியமாக பெண் வேடத்தில் அஸ்ஸ்ஸ்ஸ்சத்தல் . ( ஆனால் என்ன…… அந்த அடிவயிற்றில் தெரியும் ஆண்தன்மை முடியை ஷேவ் செய்து இருக்கலாம் . அதிக பட்சம் ஒரு மாதத்தில் முளைத்து விடும் . முளைக்கும்போது சில நாட்கள் லேசாக அரிக்கும் . அவ்வளவுதான்)
காஷ்மீரா தோற்றத்தில் அசத்த பிரக்யா நக்ரா நடிப்பில் மனம் ஈர்க்கிறார்.
விடிவி கணேஷ் வழக்கம் போல் வருகிறார் அல்லது வாழ்கிறார்.
சக்தி சரவணின் ஒளிப்பதிவு தன் பங்குக்கு ஒரு பக்கம் மயக்குகிறது .
நாயகனின் அப்பாவின் முன்னாள் காதலி அவரைப் பார்க்க வீட்டுக்கு வந்திருக்கும் வேளையில் சமையல் அறையில் நாயகனும் அம்மாவும் பேசிக் கொள்ளும் காட்சியில் இயக்குனரின் கைக்கு ஒரு மான சீக மோதிரம் அணிவிக்கப்படுகிறது . அம்மாவாக நடித்து இருக்கும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பும் குரல் நடிப்பும் அந்தக் காட்சியில் அபாரம் .
தவிர இந்தப் படத்தில் மலையாளிகளை அவமானப்படுத்தி இருப்பதாக சிலர் ஊன்றிக் கவனிக்காமல் கொந்தளிக்கிறார்கள். உண்மையில் இயக்குனர் மலையாளிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார் . தமிழ் இளைஞர்களுக்குத்தான் ‘வெட்டியாகப் பொழுதைக் கழிக்காதீர்கள்’ என்று மறைமுகமாக அறிவுரை கூறுகிறார் .
குறிப்பாக டெல்லி அரசியலையும் நம்மவர்களின் டெல்லிக்கான அரசியலையும் அறிவுப்பூர்வமாக விமர்சித்து புரிஞ்சவன் பிஸ்தா என்று சிரிக்கிறார் சந்தோஷ்.
என்ன பிரச்னை என்றால் சின்னச் சின்னக் காட்சிகளை செதுக்கியவர்கள் அடிப்படையில் கதை என்று சின்சியரான ஒரு விஷயம் கூட இல்லாமல் விளையாட்டுக்கு விளையாடி இருக்கிறார்கள் . ஒரு நல்ல கதையோடு இப்படி காட்சிகளை செதுக்கி அமைத்து இருந்தால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.இப்போது படம் கரண்ட் கனெக்ஷன் வாங்காமல் வீடு முழுக்க அழகழகான விதம் விதமான கலர் கலரான சீரியல் பல்பு அலங்காரம் அமைத்த மாதிரி இருக்கிறது. . மின்சாரம் முக்கியம் அல்லவா? எனினும் காமெடிதான் அவர்கள் ஒற்றை நோக்கம் என்றால் அந்த வகையில் படக் குழு ஜெயித்து இருக்கிறது .
‘கதை எல்லாம் வேணாம் என்ன பண்ணியாவது சின்சியரா சிரிக்க வச்சா போதும்’ என்பவர்களுக்கு வரலாறு முக்கியம் பொருத்தமான படம்