ஆனால் அவர் உண்மையில் தங்கை அல்ல ; கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து தாதாவின் கல்யாண ஆசையால் கொண்டு வரப்பட்டவர் என்பது தெரிய வர, கல்யாண நிச்சயதார்த்த சமயத்தில் தப்பிப் போகும் ஸ்ரீதிவ்யாவுடன் விக்ரம் பிரபுவும் சேர்ந்து கொடைக்கானல் போக…
இருவரும் ஓடிப் போனதாக முடிவு செய்யும் தாதா அவர்களை துரத்திப் போய் ஸ்ரீதிவ்யாவை இழுத்துக் கொண்டு வர, கல்யாண மணடபத்தில் தகராறு நடக்க, ஹீரோவின் நண்பர்கள் வட்டத்தில் இருந்த ஒருவன் சர்வதேச தீவிர பயங்கரவாதி என்று தெரியவர, சூரி மனித வெடிகுண்டாக நடிக்க ,
இதற்கு மேல் கதை என்னன்னு கேப்பீங்க…? கேப்பீங்க…? கேப்பீங்க…?
தொலைக்காட்சி சேனல்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை . காக்கா டிவி , மண்ணு டிவி, குருகுரு டிவி , கட்டதொரை டி வி என்று சில சேனல்களுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள் .
பதமஸ்ரீ பத்மபூஷன் பத்ம பிரியா விருது என்று ஒரு வசனத்தை டப்பிங்கில் சேர்த்து இருக்கிறார் சூரி .
நடிகை மீனாட்சி ஒரு கவர்ச்சிப் பாடலுக்கு ஒரு டான்ஸ் ஆடுகிறார் —- அவ்வளவு டயர்டாக .. பாவமாக … பரிதாபமாக ! வயகாரா போட்டவனுக்கு கூட வறண்டு விடும் ஆசை !
ஒவ்வொரு காட்சியும் மணிக்கணக்காக ஓடுகிறது . ஒரு லொக்கேஷனில் ஆரம்பித்தால் அங்கிருந்து சாதரணாமாக வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். உதரணமாக அந்த டாஸ்மாக் காட்சி .
ஒரு இளம் ஜோடிக்கான கதையின் திரைக்கதையில் கதாநாயகி வருவதற்கே படம் துவங்கி 35 நிமிஷம் ஆகிறது.
இப்படியாக திரைக்கதைதான் குடிகாரன் மிதித்துப் போட்ட கோகோ கோலா டின் மாதிரி கன்னா பின்னாவென்று நெளிந்து கிடக்கிறது என்றால் வசனமும் வளவள கொழ கொழ !
காமெடி என்பதெல்லாம் வேறே பாஸ் !
சும்மா பூ வைக்காதீங்க !
தாதாவின் தங்கை என்று சொல்லப்பட்ட பெண், தாதாவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக மேடைக்கு வரும் காட்சியில் விக்ரம் பிரபு சாதரணமாக நிற்க , அவர் கூட இருக்கும் நண்பர் (டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாடியாக வருபவர் ), தான் மட்டும் கிளிசரின் போட்டுக் கொண்டு நடித்துக் குமிக்கிறார் .
இன்று வந்த இன்ப மயக்கம் என்ற தேனினும் இனிய பழைய பாடலுக்கு ஸ்ரீதிவ்யா நடனம் ஆடுகிறார், அந்த பாடலுக்கான உணர்வில் கொஞ்சம் கூட முகத்தில் இல்லை . இந்த கூத்தில் “நடிகர் திலகம் இல்லையின்னு வருத்தப்படாதே . நல்லா நடிக்க பொண்ணு பொறந்திருக்கா மறந்துவிடாதே” என்று ஒரு பாடல் வேறு .
விக்ரம் பிரபுவை உள்ளுக்குள் பிடிப்பது போலவும் வெளியே பிடிக்காதது போலவும் நடிக்கும் ஸ்ரீதிவ்யா அதற்காக படம் முழுக்க ஒரே மாதிரி ஏராளமான தடவை உதட்டை கடித்தபடி புன்னகைத்துக் கொண்டேஏஏஏஏஏ….. இருக்கிறார் . ஷூட்டிங் முடிஞ்ச உடனே டாக்டர்கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்டியாம்மா?
சரி அந்த நடிப்புப்படி மனசுக்குள்ளாவது அந்தப் பொண்ணுக்கு காதல் இருக்கிறதா என்றால் வீட்டுக்கு வந்த பிறகு தாதாவிடம் ஹீரோ பற்றி பேசும்போது ”அவனுக்காக எல்லாம் நான் அவன் கூட போகல” என்று , பொய்யாக அல்ல — சீரியசாகவே சொல்கிறார் ஸ்ரீதிவ்யா. என்னமமோ போடா மாதவா .
ஸ்ரீதிவ்யாவின் பிளாஷ்பேக்கில் ஏதாவது உருப்படியாக சொல்வார்கள் என்று நம்ப்ப்பப்ப்ப்ப்பி ஏமாற வேண்டி இருக்கிறது . அதிலும் தாதாவின் கந்து வட்டி விவகாரமே வருகிறது .
கச்சேரியில் பாடகர் பாடும்போது, பெண்கள் வரிசையில் சில பெண்கள் கால்களால் தாளம் போடும் டி.ராஜேந்தர் காலத்துக் காட்சி…. இந்தப் படத்திலும் உண்டு .
தமிழ்நாட்டில் இருந்து கேரள பாலக்காட்டுக்கு கள்ளத்தோணியில் வந்தான் என்று ஒரு வசனம் . உலகத்திலேயே யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் ?
வில்லனுடனான அறிமுகக் காட்சியிலேயே வில்லன் உயிரை ஹீரோதான் காப்பாற்றுகிறான்.
விளைவு ? இரண்டாம் பகுதியில் வில்லனால் ஹீரோவுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பாப்பாக்களுக்கு கூட பயம் வராது . எனவே ஜான் விஜய்யின் உருட்டல் மிரட்டல்கள் கோமாளிக் கூத்தாகவே முடிகின்றன .
கமர்ஷியல் சினிமாவுக்கு பர்ஃபெக்ட் லாஜிக் தேவை இல்லை . ஆனால் ஒரு so called லாஜிக் .. அதாவது லாஜிக் மாதிரி ஒரு தோற்றம் தேவை . ஆனால் இந்தப் படத்தில் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை …. ம்ஹும், டன் என்ன விலை என்று கேட்கிறார்கள்
அடடா …! எதையுமே பாராட்டாமல் எப்படி ஒரு விமர்சனத்தை முடிப்பது ?
சரி… வாங்க தேடுவோம் .
ஆங்…!
நடிகர் திலகத்தின் படங்களின் பெயரை வரிசைப்படுத்தும் பாடல் முதற்கொண்டு படத்தில் பாடல் வரிகள் மிக நன்றாக இருக்கின்றன . (ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாத நேரங்களில் அந்த பாடல்கள் வருவதும் பொருத்தமில்லாத நடன அசைவுகளும் சலிப்பாக்குகின்றன. இடைவேளை முடிந்த பிறகு உடனே அப்படி ஒரு பாடல் காட்சியை போட்டு “இப்ப முடிஞ்சா எழுந்து போங்க பாப்போம் ..” என்று ரசிகர்களை பார்த்து வன்மமாக சிரிக்கிறார்கள். )
இரண்டு நிமிடம் 16 நிமிஷம் ஓடும் படத்தில் சூரி மூன்று தடவையும் சிங்க முத்து இரண்டு முறையும் ஜான் விஜய் ஒரு முறையும் சிரிக்க வைக்கிறார்கள் .
ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார் .
விக்ரம் பிரபு அசத்தலாக இருக்கிறார் .
ஆனால் இந்தக் கதையை எப்படி சொன்னார்கள் ? தயாரிப்பு மற்றும் ஹீரோ தரப்பில் யார் ஒகே செய்தார்கள்?.இந்த மாய மந்திரம் எல்லாம் எப்படி நடக்குது ? அந்த சிதம்பர ரகசியம்தான் புரியல.
சினிமா எங்கேயோ போய்க் கொண்டு இருக்கும்போது இன்னமும் இப்படிப்பட்ட படங்கள் .
மொத்தத்தில் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி இருக்கும்
வெள்ளைக்கார துரை……
oh god forgive them . they dont know what they do ! (ஆண்டவரே ! அவர்களை மன்னியும் .அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை )