சுஹாசினியின் இளமையை(?) வர்ணித்த (!) ஆர். பார்த்திபன்

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள  ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில்
வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.   ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன்,நைனார் ஆகியோர் எழுதியுள்ளனர்.கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம்.அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா  நடைபெற்றது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் என். கோபிகிருஷ்ணன் பேசும் போது,”இன்று இங்கே போக்குவரத்து நெரிசல், வெயில், மெட்ரோவால் சாலை நெருக்கடி போன்றவற்றைக் கடந்து வந்திருக்கிறீர்கள். நன்றி. இந்தப் படமும் பல நெருக்கடிகளைக் கடந்துதான் உருவாகியுள்ளது.நான் கேட்டவுடன் இப்படத்தில் வரலட்சுமி , ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் என ஒவ்வொருவராக வந்து இணைந்தவுடன் படத்தின் அளவு பெரிதாகிவிட்டது. இது சின்ன படம் என்றாலும் நல்ல கதையுள்ள படம்.” என்றார்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் பிரகாஷ் மோகன்தாஸ் பேசும்போது,”இது இந்தியப் பின்னணியிலான எங்கள் முதல் திரைப்பட முயற்சி .இதற்கு முன்பு ஹாலிவுட் பின்னணியில் செய்திருக்கிறோம். இங்குள்ள பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்தது மறக்க முடியாத அனுபவம் .அதற்குக் காரணம் தயாரிப்பாளர் கோபி அவர்கள் தான். அரை மணி நேரத்தில் அனைவரையும் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். இரண்டு டேக் கூட வாங்காமல் அனைவரும் சரியாக நடித்துக் கொடுத்தார்கள். அவர்களின் நடிப்பைப் பார்த்து வியப்பாக இருந்தது..கதைதான் அரசன் என்பார்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அது தெரியும் .” என்றார்.

நடிகர் இயக்குநர் யூகி சேது பேசும்போது,”இந்தப் படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் அழைத்த போது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு சென்றேன். ஏதாவது சொல்லி நட்பு முறிந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி போட்டது மாதிரி அழகாக எடுத்திருக்கிறார்கள். பொதுவாக  நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்குப் பிடிக்காது .இதில் பார்க்கும்படி எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் முகங்களைச் சரியான படி பயன்படுத்தியிருந்தார்கள்.  

 
ஒரு படம் எடுக்கும் போது எது தேவையில்லை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவற்றை விலக்க வேண்டும். அப்படி தேவையானதை மட்டும் எடுப்பது சிரமம். அப்படி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் .’வின்டர் லைட் ‘என்ற படத்தில் முகங்களைச் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி முகங்களை இதில் சரியானபடி பயன்படுத்திருக்கிறார்கள்.

எஸ்கிமோ மக்களுக்குத் தான் வெள்ளை நிறத்தின் 17 ஷேட்ஸ்களைத் தெரியும் என்பார்கள். அப்படி இருட்டின் பல ஷேட்ஸ் தெரிந்தவர்கள் பி சி ஸ்ரீராம் சார். அவரிடம் இருந்து வந்தவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்  .இருட்டை எப்படிப் பார்க்க முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.

சத்தியஜித் ரே என் ஒரு குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் பேசிய  ஆங்கிலத்தைப் பார்க்கும்போது அது எந்த நாட்டு ஆங்கிலம் என்று புரியாதபடி இருக்கும். அப்படி இதில் ஜாக்கிரதையாக வரலட்சுமி ஆங்கிலம் பேசி உள்ளார்.

பார்த்திபன்’ கவிதை பாட நேரமில்லை ‘என்கிற என் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான்கு பேரில் ஒருவராக நடிக்க முடியாது என்று விலகிவிட்டார் .தன் பாதையில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்.இங்கே வந்திருக்கும்  சுஹாசினியின் நடிப்பின் நுணுக்கங்கள் சாதாரணமானதல்ல.படம் நன்றாக வந்திருக்கிறது”என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் பத்திரிகையாளர் சித்ரா லெட்சுமணன் பேசும்போது,”இந்தப் படத்தின்  தயாரிப்பாளரான கோபிகிருஷ்ணன்  நட்புக்கு இலக்கணமாக இருப்பவர். அவரிடம் எனக்குப் பிடித்த வை இரண்டு விஷயங்கள். ஒன்று நட்பு. அவரது நட்பின் வலை மிகப் பெரியது .அதில் ஒரு சிறிய பகுதியைத்தான் இந்த படக்குழுவினர் மூலம் நாம் இங்கே பார்க்கிறோம்.அடுத்தது நிர்வாகத் திறமை. அவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் மிகச் சரியாகச் செய்து விடுவார். இதில் நடித்திருக்கும் வரலட்சுமி தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இப்போது பிரபலமாக இருக்கிறார். அவர் தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார். இளையவர்கள் என்றாலும் இப்படத்தை  நன்றாகத் திட்டமிட்டு எடுத்துள்ளார்கள் .அதனால் தான் 23 நாட்களில் இந்த படத்தை எடுக்க முடிந்தது. அனைவரிடம் நன்றாக நடிப்புத் திறனை வெளிக்கொணந்து உள்ளார்கள்” என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் கிருஷ்ணா  சங்கர் பேசும்போது ,”என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த நண்பர்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபி அவர்களுக்கு நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார்.

இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள் .இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள்.இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து  அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர் கண் கலங்கினார்கள்.நீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள்.

இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள்  கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.

எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க  முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன்.

என் உதவி இயக்குநர்கள் இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பு  சாதாரணமல்ல.18 மணி நேரம் படப்பிடிப்பு என்றால் மூன்று மணி நேரம் அதற்கு பின்பும் வேலை பார்த்தோம் .அந்த அளவிற்கு எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள். இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும் “என்றார்.

நாயகனும் தயாரிப்பாளருமான பிரகாஷ் மோகன் தாஸ் பேசும்போது,”இது எங்கள் முதல் இந்திய சினிமா முயற்சி. இதற்கு முன்பு அங்கே ஹாலிவுட்டில் செய்திருக்கிறோம் .இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடிக்க வைப்பது எங்களுக்கு வியப்பாகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பைச்  சாத்தியப்படுத்தியதற்கு கோபி சார் அவர்களுக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் நாங்கள் அவர்களின் நடிப்பைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டே இருந்தோம். ஒருவரும் இரண்டாவது டேக் வாங்காமல் நடித்துக் கொடுத்து அசத்தினார்கள்.  திரைப்படத்திற்கு கதை தான் அரசன் என்பார்கள் அது இந்த படத்தைப் பார்த்தால் புரியும் ” என்றார்.

நடிகை சுஹாசினி பேசும்போது,”இங்கே என்னைப் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். அதில் இரண்டு விஷயம் உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம்  நாம் சரியாகச் செய்ய வேண்டுமே,  நாம் ஏதாவது சாதித்திருக்கிறோமா சாதிக்க வேண்டுமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் வரும். இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இப்போது ரீல்ஸ்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் மறந்து விட்டது. கறுப்பு இருந்தால் தான் வெள்ளைக்கு அழகு. இங்குள்ள தயாரிப்பாளர் கோபியை நான் எப்போது அழைத்தாலும் என் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வருவார். எனது ‘நாம்’ தொண்டு நிறுவனத்திற்கும் சென்னை திரைப்பட விழா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்.

நான் அடிக்கடி நிறைய படங்களில் வந்தால் சலித்து விடும் .எனவே தேர்ந்தெடுத்து செய்கிறேன் .இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டது எப்படி தெரியுமா?

என் இருபதுகளில் லட்சுமி அவர்கள் நடித்த படத்தின் ரீமக்காக இருந்தால் நான் தைரியமாக ஒப்புக்கொண்டு நடிப்பேன்.அப்படி தமிழில் வந்த ‘சிறை’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்கள் மட்டுமல்ல கன்னடத்தில் அவர் நடித்த படங்களின்  தெலுங்கு ரீமேக்கிலும் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லி ஆறு நாட்கள் என்றவுடன் முடியாது என்று மறுத்தார்  என்று கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது . அவர் ஓகே செய்த கதை என்கிற  அடிப்படையில் இதை ஒப்புக்கொண்டு நடித்தேன்.

இப்போதெல்லாம் ஒரு நடிகர் 12 பேர் இல்லாமல் படப்பிடிப்பு கிளம்புவதில்லையே. நான் தனி ஒருவராகத்தான் சென்று நடித்தேன். அதனால் பலருக்கும் தொந்தரவு குறைவு. படப்பிடிப்பில் மற்றவர் நடித்த காட்சிகளை நான் வேடிக்கை பார்த்தேன். என்னுடன் நடித்த சுருதி ஹரிஹரன்  ஒத்திகை என்று என்னை  தொந்தரவு செய்து கொண்டிருந்தார் .இதில் நாங்கள் ஜாலியாக இருந்தோம் .

வீடுகளில் திருமண விழாக்களைப் பார்த்தால் பலருக்கும் பதற்றமாக இருக்கும் .ஆனால் ஒரு நாள் படப்பிடிப்பு என்பதே ஒரு திருமண விழாவிற்குச் சமமாகும் . படப்பிடிப்பு என்பதே தினம் தினம் திருமண விழாதான். அவ்வளவு கலாட்டாவாக இருக்கும். இந்த படப்பிடிப்பிலும் பல்வேறு கலாட்டாக்கள் நடந்தன .

இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தில் எனது வயதின் பலம் புரிந்தது .எங்களுடன் பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நமது கேமரா மேன் சைலன்ஸ் என்று ஒரு சத்தம் போட்டார் .அனைவரும் அமைதியானார்கள். வேலை கூட பார்க்காமல் அமைதியானார்கள். அப்புறம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இப்படி இந்தப் படத்தில் பல்வேறு ருசிகரமான அனுபவங்கள் இருந்தன” என்றவரிடம்,” உங்கள் இளமையின் ரகசியம் என்ன ?”என்று கேட்டபோது, “நீங்கள் கண்ணாடி போடாமல் என்னைப் பார்ப்பது தான் காரணம்” என்றார்.

நடிகை வரலட்சுமி பேசும்போது,”முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை .நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள ஆனா என்ற அமெரிக்க நடிகையுடன் நான்  நடித்தேன். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் அவருடன் நடிப்பது சவாலாக இருந்தது போட்டி போட்டு நடித்தேன்.

எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். இங்கு வந்திருக்கும் பார்த்திபன் சார் எழுத்துக்கு நான் ரசிகை . படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் “என்றார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசும்போது, “இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று  யூகிக்க முடியாத புத்திசாலி.இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’  தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம்  “இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?”என்று. ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள்தான் தமிழில் இருந்தது .

‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.

எனது ‘இரவின் நிழல்’ படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும்.  ஆனால் அதில் வரலட்சுமி சரியாகச் செய்து  பிரமாதமாக நடித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் நடிப்பதாக அறிந்தேன். தயாரிப்பாளர்கள் நடிக்க மட்டுமே சிலர் படம் எடுப்பார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை.

 இங்கே சுஹாசினி அவர்களைப் பார்க்கும்போது, அவரது  அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர்  சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது.  28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல்.ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள்” என்ற போது , சுஹாசினி குறிப்பிட்டு தனக்கு 63 வயது என்றார்.

” ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *