ரஞ்சனி தயாரிப்பில் கயல் ஆனந்தி, ஆர் கே சுரேஷ் , ரூசோ ஸ்ரீதரன், பேபி நக்ஷத்ரா நடிப்பில் ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கணவன், மனைவி , சிறுமியான மகள் என்று வாழும் குடும்பம் . ஒரு தீவிரவதியைச் சுட போலீஸ் படை சிதற்றிய குண்டு ஒன்று , கணவனைத் துளைக்க அவன் இறக்க, குடும்பம் அனாதையாகிறது .
கணவனையும் தீவிரவாதி என்று போலீஸ் சொல்லி விடுகிறது . (படத்தில் இதைப் புரிந்து கொள்ள ஏராளமான அறிவு வேண்டும்)
வறுமை சூழ்கிறது. கணவனுக்கு கடன் கொடுத்த தாதா சிறுமியான மகளைக் கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு, ” இரண்டு நாளில் பணம் தராவிட்டால் உன் மகளை பம்பாயில் விற்று விடுவேன்” என்று மிரட்ட,
விலைமாது ஆகிறாள் அந்தப் பெண் ( கயல் ஆனந்தி) .
முதன் முதலாக வரும் கஸ்டமர் ஒரு சைக்கோ (ஆர் கே சுரேஷ்)
மருத்துவக் கல்லூரிக் காலத்தில் ஒருதலையாகக் காதலித்த பெண் தற்கொலை செய்து கொள்ள, அந்தப் பெண்ணின் பிணத்தோடு உறவு கொண்டு அதுவே பழக்கமாகி , பெண்களை அழைத்துப் போய் கொன்று உறவு கொள்ளும் சைக்கோவாக ஆகி விடுகிறான் அவன்.
அவனிடம் இந்தப் பெண் சிக்கிக் கொள்ள, விஷயம் அறிந்த போலீஸ் , தம்மால் கணவனை இழந்த பெண் என்ற குற்ற உணர்ச்சி மட்டும் பரிவோடு அவளைக் காப்பாற்ற முயல , நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
உண்மையில் நல்ல கதை . ஆனால் அதை திரைக்கதை வசனமாக எழுதத் தெரியாமல் எழுதி எடுக்கத் தெரியாமல் எடுத்து படம் பார்ப்போரையும் சைக்கோவிடம் சிக்கிய நபராக நடுங்க வைக்கிறார்கள் .
முதல் பதினைந்து நிமிடம் ஒரு நல்ல படத்தைப் பார்க்கிறோம் என்ற நம்பிகையைக் கொடுத்தது . அப்புறம்தான் “நம்புவியா?.. நம்புவியா… ? என்று இரக்கம் இல்லாமல் அடித்தார்கள்
கணவன் இழந்தால் பார்க்க கண்ணியமான வேலைகள் இல்லையா?
தாதா மிரட்டினால் அவள் போலீசிடம் போகாதது ஏன்?
இவ்வளவு இரக்கப்படும் போலீஸ் போனால் உதவாமல் இருக்குமா? என்று கேள்விகள் ஒரு பக்கம்
தவிர ஈர்ப்பான மேக்கிங், எழுத்து எதுவும் இல்லாத படம்.
இன்றைக்குப் பார்த்தலும் அசத்துகிற சிகப்பு ரோஜாக்கள் படம் வந்த ஊரில் இதெல்லாம் தேவையா ஞாயமாரே?