ஒரு தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் ”நான் தமிழ் தெலுங்கு என்று இரு மொழிப் படங்கள் மூணு எடுக்கறேன் . இந்திப் படம் ரெண்டு எடுக்கறேன் .
சீனா , ஜப்பான் , ஹாங்காங் மொழிப்படங்களில் தயாரிப்பாளராக இணையறேன் . நம்ம படங்களை கொரியா தாய்லாந்து மொழிகளில் எடுக்கறேன் ” என்று சொல்லிக் கொண்டே ஏ ஏ ஏ… போனால் எப்படி இருக்கும்?
அதையே கேள்வியாகக் கேட்டால் ”சரியான திட்டமிடல் இருந்தால் அதற்கேற்ற டீம் இருந்தால் அது ரொம்ப சுலபம்தான்” என்று ஜஸ்ட் லைக் தட் சிரிக்கிறார் அந்த அசகாய பிளான் தயாரிப்பாளர் பி. ஜான் சுதிர்
“ஆந்திராவில் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் நான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜான் சுதிர் ,
இந்திய விவசாயப் பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வருபவர் ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.
2௦13 ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க “ ஏமோ குர்ரம் எகரா வச்சு “ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்.
அதற்கு பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி, சர்ச்சைக்குரிய விக்கி டோனர் ஹிந்திப் படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.
” சிறந்த கலைஞர்களை கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு என்பதால் தமிழ் படங்களை தயாரிக்க முடிவு செய்தேன்” என்று கூறும் ஜான் சுதிர்,
அதன்படி ரவி பார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்க ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ என்ற பெயரில் தமிழிலும் “ மல்லி பிரேமிஸ்தே “ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார்.
தெலுங்கில் பரத் நேரடியாகக் கால் பதிக்கும் படம் இது.
உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் பாகுபலியை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஒன்று விட்ட சகோதரர் இசை அமைப்பாளர் மரகத மணி.
மரகதமணியின் சொந்தத் தம்பியான எஸ்.எஸ்.காஞ்சி என்பவரின் இயக்கத்தில், அதே மரகதமணி இசையில் “ ஷோ டைம் “ என்ற பெயரில் தெலுங்கிலும்,
“ காட்சி நேரம் “ என்ற பெயரில் தமிழிலும் ஒரு படைத்துத் தயாரித்து வருகிறார்.
இதற்கு முன்பு ராஜ மௌலி இயக்கிய பல படங்களின் இந்த எஸ் எஸ் காஞ்சியின் பங்களிப்பு உண்டாம்.
அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில்
தமிழ் , தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதன் துவக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதுக்கு அப்புறம்தான் வருகிறது அயல்நாட்டு சமாச்சாரம் .
காஞ்சனா 2 படத்தை கொரியா, சைனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார்.
ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்ய, உரிமை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.
“உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறேன். இந்தியக் கலைஞர்களைக் கொண்டு வெளி நாடுகளிலும்,
வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை வைத்து இந்தியாவிலும் படங்களைத் தயாரிக்க இருக்கிறேன். இவற்றில் அனிமேஷன் படங்களும் அடங்கும் ” என்கிறார் ஜான் சுதிர்
ஜாக்கிஜான், டோனிஜா ஆகியோருக்கு ஜான்சுதிர் நண்பராம் .
இணை தயாரிப்பாளரான கிரண்
“சீனா முதலிய அயல்நாடுகளில் இருந்து நல்ல படங்களை இங்கே ரீமேக் செய்யும் திட்டம் உள்ளது . இது தவிர சீன நிறுவனங்களுடன் சேர்ந்து குறும்படம் தயாரிக்க்கவும்
அது தொடர்பான ஒரு போட்டியை ஆசிய அளவில் நடத்தவும் திட்டம் உள்ளது . தொடர்ந்து அப்படி உருவாகும் படங்களை பார்க்க செல்போன் ஆப் ஒன்று உருவாக்கும் திட்டமும் இருக்கிறது ” என்கிறார் .
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ,
எல்லாம் நல்ல படியா நடக்கட்டும் !






