ரைட்டர் @ விமர்சனம்

இயக்குனர் ரஞ்சித், அபையானந்த் சிங்,, பியுஷ் சிங், அதிதி ஆனந்த் தயாரிப்பில் சமுத்திரக்கனி, இனியா, மகேஸ்வரி, லிசி  , ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி எம் சுந்தர், கவிதாபாரதி , மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி, லாயர் லேமுவேல், லக்கி குமார், திலீபன் நடிப்பில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் எழுதி இயக்கி இருக்கும் படம் ரைட்டர் . 

அதிகாரமற்ற அடிமையாய் இருப்பது அவலம்.  அதிகாரம் உள்ள இடத்தில் இருந்தும் அதிகாரமற்ற அடியாளாக இருப்பது அவமானம் என்பதை….  காவல்துறையில் உள்ள ரைட்டர்கள், மற்றும் சாதாரண கடைநிலைக் காவலர்கள் படும் பாட்டை வைத்து சொல்ல வந்திருக்கும் அத்திப் பூப் படம் இந்த ரைட்டர் . 

இன்னும் சில மாதங்களில் பணி ஒய்வு பெற இருக்கிற – ரெண்டு பொண்டாட்டிக்கார –  போலீசில் இருந்தும் யாரையும் அடித்துக் கொடுமை செய்திருக்காத ரைட்டர் தங்கராஜ் (சமுத்திரக்கனி ).

காவல் துறையினருக்கு இருக்கும் ஓய்வொழிச்சல் இல்லாத பணிச் சுமை காரணமாக  ஏற்படும் பல உடல் மற்றும் மனப் பிரச்னைகள் தீர, 

எட்டு மணி நேர வேலை  மற்றும் போதிய விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போலீஸ் சங்கம் கேட்டுப் போராடும்  காவலர்களில் ஒருவரான தங்கராஜ், 

அதன் காரணமாக தண்டனை இடமாற்றலாக திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார் . 

அங்கு தகுதிக்கும் அனுபவத்துக்கும் முரணாக , புதிய காவலர்கள் செய்ய வேண்டிய பாரா என்கிற காவல் பணிக்கு  அனுப்பபடுகிறார் . அப்படி அனுப்பப்பட்ட நிலையில் அப்பாவி இளைஞன் ஒருவனை (ஹரி கிருஷ்ணன்) காரணம் சொல்லாமல் கைது செய்து அடைத்து வைத்திருக்கும் உயர் அதிகாரிகள் , அவனுக்கு விவரம் சொல்லாமலே சில   வெற்றுத் தாள்களில் கையெழுத்துப்  போடச் சொல்லி அவனை அடித்துக் கொடுமை செய்வதைப் பார்த்து மனம் இரங்குகிறார் . 

ஒரு நிலையில் பணி நிமித்தம் மேலதிகாரிகளின் கட்டளைப்படி அவர் செய்த ஒரு செயலே , அவரையும் அறியாமல் அந்த இளைஞனுக்கு எதிராக பயன்படுத்தபப்டுவது கண்டு அதிர்கிறார்  .

அவனை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சியில் அவனுக்கு அவருக்கும் ஒரு தொடர்பு இருப்பது புரிகிறது . அதன் பின்  இன்னும் உத்வேகமாக அவனைக் காப்பாற்ற முயல,  நடந்தது என்ன என்பதே ரைட்டர் . 

நிஜமாகவே போலீசில் பணியாற்றிய ஒருவர் அல்லது  ஒரு பரபரப்பான போலீஸ் ஸ்டேசனை நாள் கணக்கில் கூர்ந்து கவனித்த ஒருவரால்தான்  எழுத முடியும் என்று வியக்கும் அளவுக்கு விரியும் காட்சிகளே படத்தின் பெரும்பலம் . 

அந்த அளவுக்கு  போலீஸ் ஸ்டேசன் சூழல், போலீசார் பணி, அவர்களுக்குள் நடக்கும் குதறல் சண்டைகள், குமுறல்கள், வெளியே கம்பீரமாக பார்க்கப்படும் பல  காலவலர்கள்  உள்ளே மேல் அதிகாரிகளால் சந்திக்கும் அவமானங்கள் , ஒருவருக்கு ஒருவர் செய்யும் நண்டு வேலைகள்,  மரியாதையற்ற பேச்சுகள், இதயம் இல்லாத  உயிரிகளா இவர்கள் என்று கேட்க வைக்கும் அவர்களது செயல்பாடுகள் என்று … 

ஆழ்ந்து உயர்ந்து விரிந்து பரந்து பறந்து கொண்டே போகிறது திரைக்கதை . 

அதற்கு இணையாக,  ஒரு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞனின் லட்சியம் மிக்க வாழ்வு, வறுமை, பாசத்தைக் கூட அதட்டிக் காட்டும் உறவுகள் , அதன் விளைவுகள், கண்ணீர், ரத்தம் என்று இது இன்னொரு பரிமாணம். 

இரண்டும் சேரும் புள்ளியும் அதன்  விளைவுக் கோலமுமாக  இதயத்தை கனக்க வைத்து முடிகிறது ரைட்டர்  . 

ரைட்டர் தங்கராஜ் கதாபாத்திரத்தில் அவர் இதுவரை நடிக்காத வகையில்  ஆழ்ந்து ஊறி அற்புதமாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி .  கண்கள் அதிகம் பேசும் கதாபாத்திரம் . மிக சிறப்பாக  நடித்திருக்கிறார் . சமுத்திரத்தில் ஒரு புதிய பரிமாண ஆறு கலந்திருக்கிறது.

அதே போல ஒன்றும் புரியாத  குழப்பத்தில் இருந்து கையறு நிலைக்குப் போகும் கதாபாத்திரத்தில்  அசத்தி இருக்கிறார் ஹரி கிருஷ்ணன் .

இவர்களுக்கு இடையே யதார்த்தமான சர வெடிக்  கமெண்டுகளில்  சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது,  மேற்குத் தொடர்ச்சிமலை ஆண்டனியின் கதாபாத்திரமும் நடிப்பும் . 

சாதி காரணமாக பணி மறுக்கப்பட்டு வேலு நாச்சியாராக குதிரையில் பொங்கி எழும் கதாபாத்திரத்தில் இனியா, அமைதியான மூத்த மனைவியாக லிசி, படபட பட்டாசு இரண்டாம் மனைவியாக மகேஸ்வரி, சிறப்பான நடிப்பு . 

கடல் போல பாசம் கொண்ட பாமரத்தனமான அண்ணன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் சுப்ரமணிய சிவா . 

அதிரடியான வடக்கத்திய போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் மிரள வைக்கிறார் . 

நேர்மையான வக்கீலாக ஜி எம் சுந்தர், கயமை தடித்துக் களிம்பேறிய மனம் கொண்ட போலீஸ் அதிகாரியாக கவிதா பாரதி, நாளைய   நல்ல போலீசின் பிரதிநிதியாக திலீபன்  அனைவரும்  சிறப்பான நடிப்பு.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவில், கொக்கு பறந்தமரும் குளம் அழகின் அச்சாரம் என்றால் அந்த சிறை அறையின் இருண்மையோ ஓலத்தின் உச்சமாக கண்கள் வழியே இதயத்துக்குள் நுழைகிறது . 

சின்ன கேப் கிடைத்தால் அதற்குள்   ஒரு இசைத் துணுக்கை சொருகி ஒரு கதைத் திருப்பத்தை சொல்ல முயல்கிறது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை . (தேவகுமாருக்கு காவலாக  ராஜாவுடன் சேர்ந்து குடித்து விட்டு இரவு படுத்த தங்கராஜ் காலை எழும்போது, சற்றே திறந்த கதவின் வழியே பரவும் வெளிச்சத்தை கேமரா  நகர்வு கடக்கும்போது , ஒரு பிட்டைப் போட்டு தேவ குமார் தப்பி விட்டானோ என்று எண்ண வைப்பது ஓர் உதாரணம்)

அடி அடி பாட்டின் மெட்டு, இசை , குரல்கள், அந்த வெம்மையான டோன், நடனம் , படமாக்கல் , பின்புலம் என்று… அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது . அது எல்லாவகையிலும் முழுமையான பாடல் . 

அடுத்தடுத்து சின்னதும் பெருசுமாக – ஏகப்பட்ட விவரணைகள் உள்ள காட்சிகளை   சிறப்பாக தொகுத்து படத்தின் வேக ஓட்டத்துக்கு காரணமாகிறார் படத் தொகுப்பாளர் மணிகண்டன் சிவகுமார் .

ராஜாவின் கலை இயக்கம் யதார்த்தத்துக்கு மிக அருகில் நம்மை தோளில் கை போட்டு அழைத்துப் போகிறது .

இத்தனை வருடம் துறையில் இருந்து குப்பை கொட்டிய தங்கராஜுக்கு போலீஸ் என்ன என்ன எல்லாம் செய்யும்  என்று தெரியாதா? புதிதாக  வேலைக்கு சேர்ந்திருக்கும் அறிவழகன் காட்ட வேண்டிய அதிர்ச்சி ரியாக்ஷன்களை எல்லாம் தங்கராஜ் காட்டுவது சரியா என்பது உட்பட,  சில பல கேள்விகள் எழாமல் இல்லை . 

அடிப்படையில் போலீசின் பணிச்சுமை  பற்றிப் பேசும் கதையைக் கொண்டிருக்கும் படம் , முரணாக திரைக்கதையில் முழுக்க முழுக்க காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமாக நடவடிக்கைகளை நக்கல் நையாண்டி, சீரியஸ் என்று எல்லா வகையிலும் உரித்து உப்புக்கண்டம் போடுகிறது.  எனவே இந்தத் திரைக்கதையில் வெகு ஜன மனோபாவத்தின் பொதுப் புத்தி   தங்கராஜ்களுக்காக எந்த அளவு பரிதாபப்படும் என்ற கேள்வி எழுகிறது   சில இடங்களில் look தவறுகளும் கூட இருக்கின்றன . 

ஆனால் படத்தின் நோக்கத்தில் இருந்து பெரிதாக விலகாமல் திரைக்கதை செய்யும் கம்பீரப் பயணமும் விவரணை செறிந்த ஃபிரேம்களும் உயிர்ப்பான படமாக்கலும்,  மேலே  சொன்ன விசயங்களை வைத்து    எஃப் ஐ ஆர்  போட விடாமல் நம்மை தடுக்குதுய்யா..

ரைட்டர் ….  முக்கிய அத்தியாயம் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *