ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரிக்க, அருண் விஜய் , பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, போஸ் வெங்கட் நடிப்பில் ஹரி இயக்கி இருக்கும் படம் .
இறந்து போன முதல் மனைவிக்கு மூன்று மகன்கள் ராமச்சந்திரன் ( சமுத்திரக்கனி), சிவச் சந்திரன் ( போஸ் வெங்கட்) ஜெயச்சந்திரன் ( சஞ்சீவ்), இரண்டாவது மனைவி ( ராதிகா) வழியே ஒரு மகன் ரவிச்சந்திரன் ( அருண் விஜய்) என்று வாழும் பெரிய மனிதர் பி ஆர் வீரபாண்டியனுக்கும் (ராஜேஷ்) ,
அவரிடமே தொழில் கற்று பிறகு அவருக்கே இறால் தொழில் உள்ளிட்ட விசயங்களில் போட்டியாளரான சமுத்திரம் ( ஜெயபாலன்) அவரது இரண்டு மகன்கள் லிங்கம் மற்றும் பாண்டி (இரு வேடம் ராமச்ச்திர ராஜு) ஆகியோருக்கும் பெரும்பகை .
பாண்டி, செய்த தவறுக்காகக் கொல்லப்பட்டாலும் , கொலை நடக்க தானும் ஒரு காரணம் என்ற வகையில் ரவிக்கு ஒரு சிறு அனுதாபம் உண்டு .
ஆனால் ஜெயிலில் இருந்து வரும் லிங்கம் வீரபாண்டியன் குடும்பத்தை ஒழிக்கப் பகை கொண்டு அலைகிறான் .
இந்த சூழலில் ராமச்சந்திரன் மகள் ஒரு இஸ்லாமிய இளைஞனைக் காதலித்து அவனோடு ஓடிப் போக , முதல் மனைவியின் சாதி வெறி பிடித்த மகன்கள் காதல் ஜோடியை ஆணவக் கொலை செய்யத் தேட, ரவி அதைத் தடுக்க, ரவியையும் அவன் தாயையும் அவமானப்படுத்தி ஒதுக்குகின்றனர் மூத்த பிள்ளைகள்..
வீரபாண்டியன் மரணத்தில் கூட ரவிக்கும் அவன் அம்மாவுக்கும் கூட மரியாதை இல்லை .
ஒரு நிலையில் தனது மகளான காதல் ஜோடி, ரவி , அவன் அம்மா ஆகியோரைக் கொல்ல , ராமச்சந்திரன் லிங்கத்துடனேயே கூட்டணி அமைக்க, நடந்தது என்ன என்பதே படம் .
அதிரடியாக நடித்து அசத்துகிறார் அருண் விஜய்.
யோகி பாபு நகைச்சுவை மட்டுமின்றி சீரியசான கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
மண்டபம், பாம்பன் பாலம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கச்சத் தீவு, கடல் பரப்பு என்று லொக்கேஷன்கள் சும்மா அள்ளுகிறது . கோபிநாத்தின் ஷாட்களும் ஒளிப்பதிவும் அருமை
நீண்ட நெடிய ஒரே ஷாட்களில் எடுக்கப்பட்டு இருக்கும் சண்டைக் காட்சிகள் அதிரடி .
ஜி வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்க, பார்க்க இனிமை .
வழக்கமான ஹரி படம் என்றாலும்
கூட்டுக் குடும்பம் ஒரு சகோதரனின் பிள்ளைகள் மீது மற்ற சகோதரர்கள் காட்டும் அன்பு அக்கறை . பதிலுக்குப் பிள்ளைகள் காட்டும் மரியாதை, பயம், உறவுக் கண்ணிகளின் பலம் ,
சாதி மதம் கடந்த காதலுக்கு ஆதரவு, பெண்ணியம் , மத நல்லிணக்கம் , சாதி வெறிக்கு எதிரான கருத்து இவைகளை சொல்லும் வகையில் படம் பாராட்டுக்குரியது.
