வெங்கட் ரெட்டி தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, உடன் உபாசனா , பாலா, ராஜன் கிருஷ்ணமூர்த்தி, சம்ராகினி, துரைராஜ் நடிப்பில் சந்தீப் சாய் எழுதி இயக்கி இருக்கும் படம் யாரோ . டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் இந்தப் படத்தை வெளியிட்டு இருக்கிறார்
ஒரு பெரிய பங்களாவில் தனியாக வசிக்கும் இண்டஸ்ட்ரியல் டிசைனிங் இளைஞன் ஒருவனுக்கு அவனது வீட்டில் யாரோ அத்து மீறுவது போல தெரிகிறது . பின் அதுவே பேய் போல தெரிகிறது .
பங்களாவை யாரோ அவனிடம் இருந்து அபகரிக்க முயல்வது போலவும் அதற்கு தன்னிடம் எப்போதும் எரிந்து எரிந்து விழும் இளம் பெண் மேலதிகாரியும் காரணமாக இருக்கிறார் என்றும் நம்புகிறான்.
அலுவலக நண்பன் ஒருவன் , எதிர்பாராமல் நண்பராகக் கிடைத்த ஒரு சில்லுண்டி தாதா , உணர்வுப் பூர்வமாக அவனை விரும்பும் ஓர் இளம்பெண் ஆகியோர் மூலம் விடை காண முயல்கிறான்.
என்ற ஒரு கதையை நம்மை நம்ப வைத்து இறுதியில் எதிர்பாராத ஒரு மாத்தி யோசி உத்தியிலான கதையை சொல்லி அசத்துகிறார் இயக்குனர் சந்தீப் சாய் வாழ்த்துகள்
காதலி குறித்த டுவிஸ்ட்டும் அருமை . படமாக்கலிலும் கவர்கிறார் இயக்குனர் .
படத்தின் யானை பலம் ஜோஸ் பிராங்கிளின் கொடுத்திருக்கும் அட்டகாசமான் இசை . படத்தை அப்படி தூக்கி நிறுத்துகிறது . இசை .
கே பி பிரபுவின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு . மோகன மகேந்திரனின் கலை இயக்கமும் சிறப்பு .
உற்சாகமாக நடித்துள்ளார் வெங்கட் ரெட்டி உபாசனா அழகு . சம்ராகினி மிரட்டுகிறார்.
என்ன பிரச்னை என்றால் அந்த கடைசி நேர எதிர்பாராத திருப்பமே போதும் அதுவரை என்ன வேண்டுமானாலும் சீன் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவு காரணமாக ஒரு மெல்லிய கொடு போல் பலவீனமாகப் போய் விட்டது திரைக்கதை .
அதுவும் இல்லாமல் குறைந்த பட்ச நியாய தர்மம் இல்லாமல் படம் முடியும் விதம் வேறு ஏற்புடையதாக இல்லை
இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இன்னும் பரபரப்பான சம்பவங்கள் இன்னும் கொஞ்சம் அதிரடி, திகில்,திரில், ஹாரர் , ஹீரோ கேரக்டருக்கு இன்னும் நியாயம் , ஒரு நல்ல ஃபினிஷிங் என்று…
எல்லா வகையிலும் இன்னொரு கியர் போட்டு இருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் .
எனினும் வித்தியாச விரும்பிகள் அவசியம் பார்க்கலாம்