விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க ரவீணா ரவி மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் துப சரவணன் இயக்கி இருக்கும் படம்.
அநியாயம் செய்யும் குற்றவாளிகளை தட்டிக் கேட்க நல்லவர்கள் தயங்குவதாலும், குற்றவாளிகளை காப்பாற்ற ஆட்கள் இருப்பதாலுமே குற்றங்கள் பெருகுகின்றன . எனவே தவறுகளை தயங்காமல் தட்டிக் கேட்கத் தயங்காதே தண்டிக்கவும் தயங்காதே என்ற அருமையான கருத்தை சொல்லும் படம் .
ஆனா சொன்னவிதம்தான் படத்தில் காட்டப்படும் அநியாயங்களுக்கு இணையான அநியாயம்
போலீஸ்காரராக இருந்தும் குற்றவாளிகளுக்கும் மேலதிகாரிகளுக்கும் பயந்து ஒதுங்கிப் ;போகிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்து போலீஸ் வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கிற அநியாயங்களை தட்டிக் கேட்கும் குணம் உள்ள நபரின்( விஷால்) தங்கையே(ரவீணா) ஒரு ரவுடியின் டார்ச்சருக்கு ஆளாகிறாள்.
இன்னொரு பெண்ணை சுகித்தவனே அவன் நண்பர்களிடம் தெரிவிக்க அவர்களும் தங்களுக்கும் கேட்டு வற்புறுத்துகின்றனர் .
சுற்றுச் சூழலைக் கெடுக்கும் பேக்டரிக்கு எதிராக ஒருவர் போராட அவரை வீழ்த்த நிர்வாகம் போராடுகிறது .
இந்த மூன்று விசயங்களும் ஒரு புள்ளியில் குவிய அப்புறம் என்ன ஆனது என்பதே இந்தப் படம் .
விஷால் கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார் . அவர் மட்டும் ! . சண்டைக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார் சில சமூக அக்கறை வசனங்களை ரசித்துப் பேசுகிறார்
கலைஞர் கருணாநிதி, மோடியை நினைவு படுத்தும் சிறு கதாபாத்திரங்களை உலவ விட்டதை ரசிக்க முடிகிறது
வசனம் சில இடங்களில் நன்றாக இருக்கிறது . யோகி பாபு எப்போதாவது சிரிக்க வைக்கிறார் . யுவன் சங்கர் ராஜா ஒகே .
படம் பார்த்து முடித்த உடனேயே ஒரு முக்கால் மணி நேர படத்தை வெட்டித் தள்ள கையும் மனசும் பரபரக்கிறது .
கதையின் தேவையையும் தாண்டிய அதீத நீளம், செக்கு மாடு போல சுற்றும் திரைக்கதை , செயற்கையான வசனங்கள் , நேர்த்தி இல்லாத நாடகத்தனமான காட்சிகள், தேவையே இல்லாத கதை டிராக்குகள், குழப்பமான கதாபாத்திரங்கள் , ஒரு காட்சி படத்தின் எந்த இடத்தில் வருகிறது என்பதற்கேற்ப அதை சொல்லும் திறன் இன்மை, உணர்ச்சிகரமாக நடிக்கிறேன் என்ற பெயரில் ஓவராக கொட்டி நடித்துக் கொல்பவர்கள் (எழுத்துப் பிழை அல்ல) , அகோரமான எக்ஸ்பிரஷன்கள் மூலம் கனவில் பயந்து அலற வைப்பவர்கள், நேர்த்தி இல்லாத ஒளிப்பதிவு, சோடையான படத் தொகுப்பு என்று இன்னும் சொல்லிக் கொண்டே போக இன்னும் நிறைய இருக்கிறது . போதும்
நாலு ஃபைட் ரெண்டு பில்டப் சீன் இவற்றில் மயங்கி விடுவதை விஷால் நிறுத்த வேண்டும் . திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டும்.
நல்லது சொல்வது மிக உயர்ந்த விஷயம். ஆனால் அதை ஒழுங்காக சொல்வது முக்கியம் . இல்லை எனில் நல்லது சொல்வதே தப்பு என்ற கருத்து உருவாக்கி விடும் . இது முதலுக்கே மோசம் ஆகி விடும் . சமூக அக்கறை உள்ள து. ப.சரவணன் போன்ற இளம் இயக்குனர்கள் இதில் கவனம் வேண்டும் .