வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே ஜே கணேஷ் தயாரிக்க, சேயோன், சக்தி மித்திரன், ராஜலக்ஷ்மி, சமர் , அமர்நாத் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் குரு.சோமசுந்தரம் , சுபத்ரா ஆகியோர் நடிப்பில் தரணி ராசேந்திரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
யா என்றால் தெற்கு. யாத்திசை என்றால் தென் திசை .
கி பி ஏழாம் நூற்றாண்டில் வடதமிழ்நாடு பல்லவ அரசாக இருக்க தென் தமிழ்நாடு பாண்டிய அரசாக இருக்கிறது. மாமன்னன் ரணதீரப் பாண்டியனுக்கு (சக்தி மித்ரன்)எதிராக சேரர், சோழர், வேளிர் மன்னர் ஐவர், மற்றும் சிறு சிறு இனக் குழுக்கள் சில யாவும் சேர்ந்து போர் தொடுக்க ,
ரணதீரப் பாண்டியனாக சக்தி மித்திரன்
அந்தப் போரில் மேற்படி சிறு சிறு இனக் குழுக்கள் பெரிதாக பாதிக்கப்படுகின்றன . அதில் ஒன்று எயினர் என்ற இனக் குழு .
பாண்டியப் படையால் காட்டுக்குள் துரத்தப்பட்ட அந்த இனக் குழு , அதுவரை இரும்பை வைத்து தொழில் செய்து சிறப்பாக இருந்த நிலை போய், காட்டுக்குள் கற்கால முறைப்படி கல் , மரம் இவற்றின் உதவியால் தங்களைக் காத்துக் கொண்டு வாழும் நிலைக்குப் போகின்றனர. அவர்களுக்கு ரணதீரப் பாண்டியன் மேல் தீராத கோபம் ஏற்படுகிறது. அந்த எயின இனத்தில் பிறக்கும் கொதி என்ற இளைஞன் (சேயோன்) அந்த இனக்குழுவுக்கு தலைவன் ஆகி பாண்டியனை வீழ்த்தி மீண்டும் தங்கள் மண்ணை மீட்டு முன்பு போல் சிறப்பாக வாழ லட்சியம் கொள்கிறான் .
‘கொதி’யாக, சேயோன்
அதற்காக சோழர்கள், சேரர்கள், வேளிர் மன்னர்கள் , சக இனக் குழுக்கள் , குறுங் குழுக்கள் இவற்றின் ஆதரவைத் திரட்டுகிறான் . சோழ தேசத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு சோழ அரண்மனையிலும் அமர்ந்து ஆட்சி செய்யும் பாண்டியனை வீழ்த்த , களம் இறங்குகிறான்.
இதற்கிடையில் பல்லவர் காலத்தில் தமிழகத்துக்குள்ளும் தேவதாசி வழக்கத்தைக் கொண்டு வந்த ஆரியர்கள் பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் கூட அதை தொடர்கிறார்கள் . இதுவும் கொதிக்கு பிடிக்கவில்லை.
பாண்டியனை தோற்கடித்து தங்கள் மண்ணை மீட்க புலி போலப் போராடும் கொதியின் விடுதலை தாகம் என்ன ஆனது என்பதே இந்த யாத்திசை.
போற்றுதலுக்குரிய பாராட்டுகள் படத்தை எழுதி இயக்கி இருக்கும் தரணி ராசேந்திரனுக்கு !
இயக்குனர் தரணி ராசேந்திரன்
வரலாற்றில் இடம் பெற்று இருக்கும் நிஜமான பாண்டிய மன்னன் ரணதீரப் பாண்டியன் பெயரை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு கதாபாத்திரம் அமைத்து அன்றைய சூழலுக்கு ஏற்ப நம்பகத்தன்மையோடு கூடிய கதாபாத்திரங்கள் , சூழல்கள் காட்சிகள் அமைத்து அற்புதமாக எழுதி கொண்டாடத்தக்க படமாக்கலைத் தந்து இயக்கி இருக்கிறார் தரணி ராசேந்திரன்.
ஒரு நிலையில் நாட்டுக்குள் இருந்து காட்டுக்குள் போய்விட்ட எயினர் பழங்குடிகளின் மொழி, நாட்டுப் பகுதியில் இருக்கும் பாண்டிய நாட்டு மக்களின் பேச்சு மொழி அளவுக்கு நவீனம் ஆகி இருக்காது என்ற அறிவார்ந்த பார்வையோடு, அந்தக் கால பழைய தமிழ் வார்த்தைகளை வைத்து ஒரு காலகட்டப் பழந்தமிழை மீட்டு எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் .
வரலாற்று சினிமாக்களில் இதுவரை காட்டப்பட்ட ஜிகினா உடை கோமாளித்தனத்தை தவிர்த்து, வெப்பம் நிறைந்த தமிழகத்தில் அந்தக் கால அரசர்கள் முதற்கொண்டு மக்கள் வரை அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் எப்படி இருக்கும் , அதிலேயே எயினர்கள், பெரும்பள்ளி எனப்படும் மார்பு மிக்க வீரர் கூட்டம் இவர்களின் ஆடை அணிகலன்கள் எப்படி வித்தியாசப்படும் என்பதை எல்லாம், ஒருவித மேதமைத் தன்மையோடு பகுத்து உணர்ந்து உண்மைக்கு நெருக்கமாக அவற்றை படைத்து பயன்படுத்தி சரித்திரம் படைத்து இருக்கிறார் தரணி ராசேந்திரன்
இன்றைய நவீனக் கருவிகள் உலகின் எல்லா பகுதிகளிலும் ஆக்கிரமித்து விட்ட நிலையில் பின்புலத்தில் அது எதுவும் இல்லாமல் ஒரு ஷாட் எடுப்பது கூட கஷ்டம் என்ற சூழலில் முழு படத்தையும் அப்படி எடுத்து முடிக்க பாரிய உழைப்பும் அறிவும் வேண்டும் . அவருக்கு அது இருக்கிறது . இது போன்ற படத்துக்கு சரியான நடிக நடிகையரை கண்டு பிடிப்பதும் மிகக் கடினம் . பெண் கதாபாத்திரங்களின் உடல் வாகு, நடனம் மொழி உச்சரிப்பு ஆகிய விஷயங்கள் அவ்வளவாக திருப்தி தரவில்லை என்றாலும் ஆண் கதா பாத்திரங்களுக்கான நடிகர் தேர்விலும் வேலைவாங்கியதிலும் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். லொக்கேசன்கள் தேர்வு எல்லாம் அற்புதம்
இவை மட்டுமின்றி இந்தத் திரைக்கதையின் மூலம் ஈழம் அழிக்கப்பட்ட விதத்தை தரணி ராசேந்திரன் மறைபொருளாக புரியச் சொல்லி இருக்கும் விதம் அபாரம்.
யாத்திசை என்றால் தென் திசை . நமக்கு தெற்கே இருப்பது ஈழம்.
பாண்டிய அரசன் பெயர் ரணதீரன் . இலங்கை சிங்களவர்களுக்கும் ரணதுங்க , ரணவீர என்ற பெயர்கள் உண்டு . சோழத்தின் நீட்சியே ஈழம் . இந்தப் படத்தில் எயினர் இனம் , ரணதீரனிடம் தன் மண்ணை இழந்து காட்டுக்குள் ஓடியது போலத்தான் ஈழ மக்கள் தன் மண்ணை இழந்து வவுனியா காட்டுக்குள் ஓடினார்கள் .
எயினர் இனத் தலைவன் கொதி சோழர்கள் ஆதரவோடுதான் தன் மண்ணை மீட்க போர் தொடுக்கிறான் .ஆனால் ஒரு நிலையில் சோழர்களால் உதவ முடியாமல் போகிறது . அது போல ஈழப் போராட்டத்துக்கு ஆதார சுருதியே தமிழ்நாடுதான். ஆனால் ஒரு நிலையில் தமிழகம் தொடர்ந்து உதவ முடியாமல் போனது.
எயினர் இனத்துக்கும் அதன் தலைவன் கொதிக்கும் முக்கிய சூழலில் கிடைக்க வேண்டிய பல உதவிகள் கிடைக்கவில்லை . அது போல விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் முக்கிய சூழலில் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கவில்லை . அதேநேரம் ரணதீரனுக்கு பெரும்பள்ளிகள் போன்ற சக்தி வாய்ந்த இனக் குழுக்களோடு திருமண உறவு அமைந்து அதன் மூலம் அவனுக்கு பெரும்படை கிடைக்கிறது .
ரணதீரப் பாண்டியனுக்கு பெண் கொடுத்து பெரும்படை யும் உடன் அனுப்பும் பெரும்பள்ளி தலைவி ( சுபத்ரா)
அதே போல இலங்கைக்கு அரசியலில் இந்தியாவுடன் மட்டுமல்ல இந்தியாவின் எதிரி நாடுகள் என்று கூறப்படுகிற பாகிஸ்தான் , சீனா போன்ற நாடுகளுடன் அரசியல் கள்ள உறவு ஏற்பட்டு , இந்த மூன்று நாடுகள் மட்டுமின்றி மேலும் சில நாடுகள் ஒன்று சேர்ந்து இலங்கைக்கு உதவ , ஒரு நியாயமான சுதந்திரப் போராட்டம் வீழ்த்தப்பட்டது.
இந்தப் புரிதலோடு பார்த்தால்தான் இந்தப் படத்தின் சிறப்பு விளங்கும். .
இயக்குனருக்கு அடுத்த பாராட்டுக்கு உரியவர் படத்தின் தயாரிப்பாளர் கே ஜே கணேஷ்.
தயாரிப்பாளர் கணேஷ்
இப்படி ஒரு படத்தை தயாரிக்க துணிவும் உணர்வும் அறிவும் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது .
சேயோன், சக்தி மித்ரன் இருவரும் முறையே கொதியையும் , ரணதீரப் பாண்டியனையும் கண் முன் நிறுத்துகிறார்கள் . அவ்வளவு அற்புதமான் தோற்றப் பொருத்தம் மற்றும் ஆவேச நடிப்பு.
எயினப் போர் வீரன் துடியாக வரும் சமர் படம் பார்க்கும் ரசிகர்களையும் தன் நடிப்பால் ஆவேசப்பட வைக்கிறார் .
துடியாக மிரட்டும் சமர்
கொஞ்ச நேரமே வந்தாலும் பெரும்பள்ளி தலைவியாக வரும் சுபத்ரா பெண்மையின் கம்பீரம். அடையாளமே தெரியாத தோற்றத்தில் எயினப் பூசாரியாக குரு சோமசுந்தரம் கேரக்டருக்குள் கரைந்து நிற்கிறார் .
தேவரடியார் பெண்களாக வரும் ராஜ லட்சுமியும் வைதேகி அமர்நாத்தும் மொத்தத்தில் பாராட்டும்படி நடித்துள்ளனர் . எயினர் இன வீராங்கனையாக வரும் பெண் ஒருவர் அசத்துகிறார் . ரண தீரப் பாண்டியன் படைக்கும் கொதி ஆட்களுக்கும் காட்டுக்குள் நடக்கும் சண்டையிலும் ஒரு பெண் வாய் பிளக்க வைக்கிறார் .
காடு, மலை, கடந்து ஆறு, அருவி நுழைந்து வெக்கை, குளிர்ச்சி குடித்து நகரும் அகிலேஷ் காத்த முத்துவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம் . காட்சியின் களத்தையும் பின்புலத்தையும் உணர வைக்கும் ஒளிப்பதிவு .
பாடல்கள் பலன் தரவில்லை என்றாலும் பின்னணி இசையில் காட்சிக்கு தரக் கூட்டல் செய்யும் அளவுக்கு ராஜ ஒலி எழுப்புகிறது சக்கரவர்த்தியின் இசை.
போர்க்களக் காட்சிகளில் மகேந்திரன் கணேசனின் படத் தொகுப்பு மிக சிறப்பு. ரவிகுமார் ஆனந்தராஜின் வி எஃப் எக்ஸ் பாரட்டுக்குரியது
ரஞ்சித் குமாரின் கலை இயக்கத்தையும் , சுரேஷ் குமாரின் ஆடை வடிவமைப்பையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் செய்திருப்பது இது வரைக்குமான வரலாற்றுப் படங்களின் ஜிகினா மேலாடைகளை உரித்து எறிந்து விட்டு உண்மையை அணிந்து நிற்கும் அழகுச சாதனை .
ஓம் சிவா பிரகாஷின் சண்டைக் காட்சிகள் அமைப்பு நாம் பார்ப்பது சினிமா அல்ல ; கிபி ஏழாம் நூற்றாண்டின் நிஜ சம்பவம் என்று உணரவைத்து நம்மையும் களத்தில் ஒருவராக உள்ளே நிறுத்தி உருண்டு புரளச் செய்கிறது . கொண்டாடத்தக்க பங்களிப்பு .
ரவிகுமாரின் காட்சிப் படிம வடிவமைப்பு சரவணன் தர்ம பிரகாஷ் ஆகியோரின் ஒலி வடிவமைப்பு யாவும் படத்துக்கு ஒரு சிறப்பான உயரத்தைத் தந்திருக்கின்றன.
எயினர்கள் பேசிக் கொள்ளும்போது அதைக் கேட்டுக் கொண்டே கீழே வரும் இன்றைய தமிழ் மற்றும் ஆங்கில சப் டைட்டில்களை படிப்பதில் படித்துப் புரிந்து கொள்வதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது . படத்தில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு . திரைக்தை இன்னும் சிறப்பாக, சும்மா பட்டையைக் கிளப்பி இருக்க வேண்டும்.
எனினும் மேலே சொன்ன பல சிறப்புகளோடு, ஒரு கதையின் மூலம் இன்னொரு விசயத்தை உணர்த்துதல் என்ற உத்தியின் மூலம் இந்தப் படம் உலக சினிமாவின் திரைக்கதை உத்திகளுக்கே புது உயரத்தைத் தந்துள்ளது .
மொத்தத்தில் யாத்திசை – காவியத் திசை , கம்பீரத்தின் இசை
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462