எமகாதகி @ விமர்சனம்

நைசத் மீடியா ஒர்க்ஸ் சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரிக்க, கணபதி ரெட்டியின் இணை தயாரிப்பில் , ரூபா கொடுவாயூர் , நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் , ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா நடிப்பில் ராஜேந்திரன் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கி இருக்கும் படம். 
 
தீப்பாஞ்சு அம்மன் இருக்கும் ஓர் ஊர் . கோவில் திருவிழா சமயத்தில் அம்மனின் வைரக்கிரீடத்தை  திருடி அடகு வைத்திருக்கிறான், ஊர்த் தலைவரின் ( ராஜூ ராஜப்பன்) மகன் (சுபாஷ் ராமசாமி)  . அப்பாவுக்கு தெரியாத இந்த விசயத்தில் கிரீடத்தை மீட்டு திருவிழாவுக்குள் வைத்து விட அவன் முயல்கிறான் .
 
தலைவரின் அம்மா,  வீட்டில் உள்ள ஒரு அறைக் கதவைத் திறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்கிறார் . மீறித் திறக்கிறார்கள். 
 
ஊர்த் தலைவரின் மகள் ( ரூபா கொடுவாயூர்) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞனை (நரேந்திர பிரசாத்) காதலிப்பது தலைவருக்கு தெரிய வருகிறது . 
 
மனைவியுடன் (கீதா கைலாசம் ) சண்டை போட்டு அவர் அடிக்க, தட்டிக் கேட்ட மகளையும் அடித்து விடுகிறார் தலைவர் . 
 
மறுநாள் மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். 
 
கோவில் திருவிழா துவங்குவதற்குள் பிணத்தை எடுக்க நினைக்க, எத்தனை பேர் முயன்றும் பிணத்தை வெளியே தூக்கி வர முடியவில்லை. 
 
பிணம் கட்டிலோடு எழுந்து நிற்க , பார்ப்பதற்கு கருவறையில் இருக்கும் தீப்பாஞ்சு அம்மன் மாதிரி இருக்கிறது . 
 
மரணத்துக்கு காரணம் என்ன? அப்பாவிடம் அடி வாங்கிய கோபத்துக்கு மகள் செய்து கொண்ட வேலையா?
 
வைரக் கிரீட விவகாரமா? பாட்டி தடுத்த கதவைத் திறந்ததா? ஆணவக் கொலையா?  இல்லை வேறு எதுவுமா? என்பதே படம் . 
 
ராவான கிராமப் படம். அந்த எளிமை இந்தப் படத்தின் பலம் . 
 
ரூபா கொடுவாயூர்  வெள்ளித்திரைக்கு ஏற்ற அழகி . நல்ல நடிப்பு . மகளாக, காதலியாக,  பிணமாக,  அம்மனாக… அழகாக ஸ்கோர் செய்கிறார் . 
 
அண்ணனாக நடித்து இருக்கும் சுபாஷ் ராமசாமி கவனிக்க வைக்கிறார் . 
 
சஸ்பென்சை யூகிக்க விடாமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் . பாராட்டுகள். 
 
அம்மன் கடைசியில் அம்மா மேல் விழுந்து அமைதியாகும் ஷாட் நெகிழ்ச்சி . 
 
எனினும் களமும் சூழலும் நன்றாக இருக்கிறதே ஒழிய காட்சிகள் பெரும்பாலும் பலவீனமாக இருக்கின்றன. . ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரிடம்  இப்படி ஒரு சிச்சுவேஷன் சிக்கி இருந்தால் பின்னிப் பெடல் எடுத்திருக்கலாம் 
 
இயக்கமும் ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பும் ஆரம்பக் காட்சிகளில் சவ சவ . 
 
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ரொம்ப நல்லா இருக்கு . அல்லது ரொம்ப மோசமா இருக்கு, 
 
பின்னணி இசையில் ஜெசின் ஜார்ஜ் கவனிக்க வைத்தாலும் ஓவர் ரிபிட்டேஷன் . ஜோசப் பாபினின் கலை இயக்கமும் கவனிக்க வைத்தலும் தெலுங்கு வாடை அதிகம். 
 
பல கேரக்டர்களுக்கு யதார்த்த முகங்களைப் போட்டு இருப்பது சில இடங்களில் பலமாகவும் பல இடங்களில் பலவீனமான நடிப்பால் பலவீனமாகவும் இருக்கிறது . 
 
கிளைமாக்சில் சஸ்பென்ஸ் இருந்தாலும் கடைசியில் சொல்லப் படும் காரணம் குழப்பமோ குழப்பம் . 
 
மொத்தப் படமும் ஒரு சிறுகதை போல மட்டுமே இருப்பதும் குறைபாடு . 
 
எமகாதகி என்று பெயர் வைக்கும் அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது? ஒரு நல்ல பெயர் வீணாகி இருக்கிறது . இயக்குனர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் . அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் . வசனம் எழுதிய  ராஜேந்திரன் சொல்ல வேண்டாமா?
 
 எமகாதகி…..  சோப்ளாங்கியும் இல்லை. ஜாலக்காரியும் இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *