சினிமாவில் நடிப்பதற்கு நீண்ட இடைவெளி விட்டாலும் இன்றும் காமெடி சேனல்கள் , முகநூல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் செல்வாக்கோடு திகழ்பவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி . ஆளுமை , நையாண்டி அதோடு சமூகக் குற்றங்களுக்கு எதிரான அவரது தொடர் சாடல் இவையே இப்படி அவரை தலை முறைகளைத் தாண்டி கொண்டு போகிறது .
அப்படிப்பட்ட கவுண்டமணி நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் 49 ஓ படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழாவே இரண்டரை மணிநேர நகைச்சுவை திருவிழாவாக மாறிப் போனது
கவுண்டமணியை வாழ்த்திப் பேச அவரது ஆரூயிர் நண்பரான சத்யராஜும், ஆதர்ச சீடரான சிவகார்த்திகேயனும் வந்திருந்தனர். தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரனின் அன்புக்கு பாத்திரமான ஈழத் தமிழ்ப் பாடகர் தேனிசை செல்லப்பா இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார் . எனவே செல்லப்பா அய்யாவும் வந்திருந்தார்
இவர்களுடன் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்கத்து நிர்வாகிகள் !
“கவுண்டமணி சினிமாவுக்கு வந்து 39 வருடம் ஆன நிலையில் இந்த 49 ஓ படம் வருது .அதனால இந்த முதல்ல இந்த 39க்கு ஒரு ஓ போடுங்க ” என்று துவங்கிய சித்ரா லட்சுமணன் ” கவுண்டமணி மாதிரி புரடியூசரை மதிக்கிற — சொன்ன தேதிக்கு சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் வர்ற — வந்துட்டா பேக்கப் சொல்றவரை கிளம்பிப் போகாத நடிகர் யாருமே இல்லை . அவரைப் பார்த்து இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும் ” என்றார் .
தேனிசை செல்லப்பா பேசும்போது ”
அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகே ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் இருக்கிறது. ஒரு நாள் நாங்கள் கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ நகைச்சுவையை பார்த்து சிரித்து கொண்டிருந்தோம் . அதைப் பார்த்து வியந்த அந்த வெள்ளைக்காரக் குடும்பம் காரணம் கேட்டது . நாங்கள் அந்த காட்சியை ஆங்கிலத்தில் விளக்கினோம் .
மறுபடியும் அந்தக் காட்சியை ஓட விட்டபோது அந்த வெள்ளைக்காரக் குடும்பம் கவுண்டமணியின் நகைச்சுவை நடிப்பைப் பார்த்து அப்படி சிரித்து மகிழ்ந்தது . மொழிகளைக் கடந்தது அவரது நகைச்சுவை நடிப்பு ” என்றார்
தான் கவுண்டமணியின் தீவிர ரசிகன் என்று சொன்ன சிவகார்த்திகேயன் ” அவர் படங்களைப் பார்த்து ரசித்து சிரித்து வளர்ந்ததால்தான் எனக்குள்ளும் காமெடி வந்தது ” என்றார் . கவுண்டமணியை முதன் முதலில் சந்தித்த அனுபவம் முதற்கொண்டு நிகழ்ச்சி பாடல் வெளியீட்டுக்கு வந்தது முதல் கவுண்டமணி அடித்த ஜோக்குகளை எல்லாம் சொல்லி அரங்கை சிரிக்க வைத்தார் .
கவுண்டமணியோடு பல படங்களில் காமெடியில் வெளுத்து வாங்கிய சத்யராஜ் பேச்சு அரங்குக்குள் ஒரு நகைச்சுவை பூகம்பத்தையே ஏற்படுத்தியது ” வீரநடை என்ற படத்தில் நானும் கவுண்டமணி அண்ணனும் நடிச்சுட்டு இருந்தோம் . அப்போ எனக்கு வேற படம் எதுவும் இல்ல .
ஒரு நாள் சாயங்காலம் ஒரு டைரக்டர் என்கிட்ட கதை சொல்ல வர்றதா சொல்லி இருந்தார் . அன்னிக்கு ஈவினிங் வீரநடை ஷூட்டிங் முடிஞ்ச உடனே நான் டைரக்டர்கிட்டயும் கவுண்டமணி அண்ணன்கிட்டயும் ‘நான் சீக்கிரம் கிளம்பறேன். ஒரு கதை கேட்டு ஒகே பண்ணனும்’னு சொன்னேன் .
உடனே கவுண்டமணி அண்ணன் சொன்னாரு ‘ஏம்பா .. இப்ப நீ போய் அந்தக் கதையைக் கேட்டு, நல்ல இல்லன்னா நடிக்க முடியாதுன்னு சொல்லப் போறியா ? உன் கையில வேற படமே இல்ல . அந்தக் கதை எவ்வளவு குப்பையா இருந்தாலும் ஒத்துக்கிட்டு நடிக்கத்தான் போற .
டைரக்டர் வந்த உடனே , பாதியில் அவரு போய்டக் கூடாதுன்னு ஆள உள்ள விட்டு கதவைப் பூட்டிக்கிட்டுதான் கதை கேட்கப் போற… இதுக்கு எதுக்கு இவ்வளவு பந்தா?’ன்னு சொல்ல எங்களால சிரிச்சு மாளல ” என்று ஆரம்பித்து கவுண்டமணி பற்றி சத்யராஜ் சொன்ன ஒவ்வொரு விசயமும் நகைச்சுவை பூகம்பம்தான் .
இப்படி எல்லோரும் நகைச்சுவையாகப் பேச, கவுண்டமணி மாடுலேஷனில் மட்டும் நகைச்சுவை ஏற்றி படு சீரியசான- அவசியமான விசயங்களைப் பேசினார்
“இந்தப் படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்கிட்ட வந்து கதை சொன்னார். ஒரு வருஷமா அலைஞ்சார். நான் ஒரு நாள் அவர்கிட்ட, ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க’ன்னு சொன்னேன்.. ‘ ஆறடி தாய்மடித்திட்டம்’னு ஒரு விஷயம் சொன்னார் . ‘இது போதும் . நான் நடிக்கிறேன்’னு ஒத்துக்கிட்டேன்
தயாரிப்பாளர் ‘டாக்டர் சிவபாலன். அவரை ரொம்பப் பாராட்டணும். ஏன்னா டப்பாங்குத்து, கும்மாங்குத்துன்னு படம் எடுத்துக்கிட்டிருக்குற இந்த நேரத்துல இப்படியொரு கதையை தேர்வு செய்ததுக்கு.. இளம் இயக்குநர் ஆரோக்கியதாஸ்.. ரொம்ப முற்போக்கான வசனங்களையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிக்கணும்..
மியூஸிக் டைரக்டர் கே. அவர் பெயர் மாதிரியே கேக்குற மாதிரி மியூஸிக் போட்டிருக்காரு. பாடலாசிரியர் யுகபாரதி இந்த யுகத்துக்கு என்ன எழுதணுமோ அதை எழுதியிருக்காரு. அதை தேனிசா செல்லப்பா பாடியிருக்காரு. கேமிராமேன் கருப்பையா.. பேருதான் கருப்பையா.. ஆனால் படத்தை கலர்புல்லா எடுத்திருக்காரு.
டான்ஸ் மாஸ்டர் சங்கர்ன்னு ஒருத்தர். எனக்கெல்லாம் ஆடவே வராது. ஆடிட்டிருக்கும்போது பக்கத்துல ஆடுற பொம்பளைங்க மேல விழுந்து கைய, காலை மிதிச்சிருவேன். ‘ஸாரி’ சொல்வேன். ‘பரவாயில்லை’ன்னுவாங்க. ‘நீங்க போய் கொஞ்சம் உக்காருங்க. நான் ஆடிப் பார்த்துக்குறேன்’னுவேன்.
‘இல்ல ஸார். வேணாம்’னுவாங்க. ‘இல்லம்மா.. திரும்ப நின்னீங்கன்னா மறுபடியும் காலை மிதிச்சிருவேன்’னு சொல்வேன்.. அப்படிப்பட்ட என்னையே எப்படியோ ஆட வைச்சிருக்காங்க.
அப்புறம் என் கூட நடிச்ச திருமுருகன், மூணாறு ரமேஷ், விசாலினி, வைதேகி எல்லாருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். தயாரிப்பாளர் கவுன்சில்ல இருக்குற மொத்தப் பேருக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். ஏன்னா அத்தனை பேருக்கும் பெயர் சொல்லி தேங்க்ஸ் சொல்லணும்னா விடிஞ்சிரும்.
பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. இங்க வந்திருக்கிற எல்லாருக்கும் ஒரே முறைல வணக்கம் சொல்லிக்கிறேன்..!
எனக்கு முன்னாடி நம்ம சத்யராஜ் ரொம்ப நேரமா பேசி பிச்சி எடுத்துட்டாரு. அப்புறம் சிவகார்த்திகேயனும் நல்லா பேசிட்டாரு. இதுக்கு மேல நான் பேசினா அது எடுபடாது. படத்துல வேண்ணா காமெடி பண்ணிக்கலாம்.
இந்தப் படத்தோட கதையைப் பத்தி சொல்லணும்னா.. 2 மணி நேர படத்தை யுகபாரதி இரண்டு வரிகளில் சொல்லியிருக்கார். ‘விவசாயம் இல்லைன்னா.. உலகம் ஏதுடா..? உயிர் ஏதுடா..? பல கட்டடங்கள் கட்ட வயல்காட்டை அழிச்சாங்க’ன்னு.! அதான் கதை.
விவசாயமும், விவசாயிகளும் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லைன்னா நாம உயிர் வாழ முடியாது. நாம சாப்பிடுற சாப்பாட்டை யார் தர்றது..? விவசாயிகள் அழியக் கூடாதுன்ற புரட்சிகரமான கதையை எழுதியிருக்காங்க.
ஆனால், அந்த விவசாயிக்கு அந்த நிலம்தான் மானம், புகழ், உயிர், பெயர், புகழ் எல்லாம். அந்த நிலத்தை விட்டுறக் கூடாது. அது கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி.. அதுலதான் அவங்க வாழ்க்கை. அதுலதான் விவசாயம் பண்ணணும்..
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அடுத்த வருஷம் விளையும். ‘நல்லா விளையலை.. அதுனால நிலத்தை வித்துட்டேன்’னு சொல்லக் கூடாது.. ஒரு வியாபாரி, தன் வியாபாரத்துல நஷ்டமானாலும் அடுத்து வேற வியாபாரத்துல ஈடுபட்டு ஜெயிக்கிறான்ல.. அது மாதிரிதான்.
அந்த விவசாயிகளைத் தேடி யார், யாரெல்லாம் வர்றாங்க.. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிக்காரங்க. எதுக்கு வர்றாங்க.. துக்கம் விசாரிக்கவா..? இல்ல சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கவா? அந்த நிலத்துல கால் ஏக்கராவது வாங்கிரலாம்னுதான்..
சில பேர் வித்துர்றாங்க. அந்த இடத்துல கட்ட்டம் கட்டிர்றாங்க. அப்புறம் விளை நிலம் எங்க இருக்கும்..? அப்புறம் எப்படி நாம சாப்பிடுறது..? அப்படியிருக்கக் கூடாது. ‘விவசாயிகள் விவசாயிகளாத்தான் இருக்கணும்’னு சொல்றதுதான் இந்த 49-ஓ திரைப்படம்.
இந்தத் திரைப்படம் விவசாயிகளைப் பத்தி சொல்ற கதை. நம்மூர் விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல.. எல்லா ஊர் விவசாயிகளைப் பத்தியும் சொல்ற கதை. இந்திய விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல.. அமெரிக்க விவசாயி, இங்கிலாந்து விவசாயி, ஆப்பிரிக்க விவசாயியாக இருந்தாலும் சரி.. விவசாயி விவசாயிதான்.
இதுல என்ன சேஞ்சு..? அமெரிக்கால ஜீன்ஸ் பேண்ட் போட்டு விவசாயம் பண்றான். நம்மூர்ல வேட்டி கட்டிட்டு விவசாயம் பண்றான். அதான் சேஞ்ச். அது நெல்லு விளைக்கிறவனா இருந்தாலும் சரி.. கொள்ளு விளைக்கிறவனா இருந்தாலும் சரி.. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் சரி, ஒரு விவசாயியோட நிலத்தைக் காப்பாத்தணும். அப்பத்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும். இதுதான் 49-ஓ திரைப்படம்.
பலதரப்பட்ட மக்கள் சொல்வாங்க.. இது ஏ கிளாஸ் படம்.. இது பிளாஸ் படம்ன்னு.. ஆனா இந்த ‘49-ஓ’ திரைப்படம் A, B, C, D, E, F-ல இருந்து Z-வரைக்குமான அனைவருக்கும் பொதுவான திரைப்படம். இது கிராமத்துக்கும் பிடிக்கும். சிட்டிக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட படம்தான் ‘49-ஓ’. ‘49-ஓ’ மூவி இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.
அப்புறம் ‘49-ஓ’-ன்னா என்ன..? நோட்டோன்னா என்ன..? நாம யாருக்கு ஓட்டுப் போடணும்..? ஏன் போடணும்..? எதுக்குப் போடணும்..? ஓட்டுப் போடறதால நமக்கு என்ன நன்மை..? இல்ல போடலாமா? வேண்டாமா..? இதுக்கெல்லாம் இந்தப் படத்துல அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கேன். இதுதான் ‘49-ஓ’. திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம்..! இது எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். ‘49-ஓ’ படத்தைப் பத்தி மட்டுமே சொல்றேன். . நான் மறுக்கா மறுக்கா சொல்றேன். மவுன்ட் ரோடு தர்க்கா முன்னாடி வந்து நின்னு கூட சொல்றேன்.திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். இந்தப் படத்தை தயவு செய்து யாரும் மிஸ் பண்ணிராதீங்க. நீங்க பேமிலியோட அவசியம் பார்க்கணும்.
ஏன்னா அனைத்து அம்சங்களும் கொண்ட படம் இது. இதுவொரு மினி மீல்ஸ் மாதிரியான படம். ஹோட்டலுக்கு போயி மினி மீல்ஸ் சாப்பிட்டீங்கன்னா புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், அப்பளம், கூட்டு, பொரியல், ஸ்வீட், காரம், பாயாசம்ன்னு இது அத்தனையும் சாப்பிட்டால் என்ன டேஸ்ட் வருமோ.. அது இந்த 49-ஓபடத்துல இருக்கு.
நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். அதிகமா பேச விரும்பலை. 49-ஓ திஸ் இஸ் பெஸ்ட் மூவி. எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க.. வந்த எல்லாருக்கும் நன்றி. வணக்கம்..!” என்றார்.
நிகழ்ச்சி முடிந்த போது ஒன்று உறுதியாகத் தெரிந்தது . 49-ஓ படத்துக்கு பக்காவான ஒப்பனிங் உறுதி . படம் நன்றாக இருந்தால் வெற்றியும் உறுதி .