பரம்வாஹ் ஸ்டுடியோஸ் சார்பில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா தயாரிக்க, சார்லி என்ற லாப்ரடார் நாய், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, பாபி சிம்ஹா , ராஜ் பி ஷெட்டி , டானிஷ் சைத் ஆகியோர் நடிப்பில் கிரண் ராஜ் கன்னடத்தில் இயக்கியும், தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மொழிகளில் மொழி மாற்றமும் செய்யப்பட்டு வந்திருக்கும் படம் 777 சார்லி.
தமிழில் வெளியிடுகிறது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்.
அம்மா , அப்பா , தங்கை ஆகியோரை சிறு வயதிலேயே விபத்தில் இழந்து தனிமரமாக வளர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிற கரடு முரடான நபரிடம், விரைவாக வளர்வதற்காக ஊசி போடப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் லாப்ரடார் நாய் ஒன்று தப்பி வந்து தஞ்சம் அடைகிறது. ஆரம்பத்தில் அந்த நாயை வெறுக்கும் அவன் ஒரு நிலையில் பாசம் காட்ட ஆரம்பிக்கிறான். ஊசி போடப்பட்டதால் அந்த நாய்க்கு கேன்சர் வந்திருப்பதையும் அந்த நாய்க்கு பனி மலையைப் பார்க்கும் ஆசை இருப்பதையும் அறிகிறான் . நாய் சாவதற்கும் அதற்கு இமாச்சலப் பிரதேசப் பனிமலையைக் காட்டி விட, நாயோடு கிளம்புகிறான் .
அந்த பயணம் தரும் நெகிழ்வு, மகிழ்வு , இழப்பு, திருப்தி, பக்குவம் , ஞானம் இதுவே படம் .
நாயை நடிக்க வைப்பதில் இப்போது சி ஜி உட்பட எவ்வளவோ வசதிகள் வந்து இருந்தாலும் அதையும் மீறி மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் . நாயிடம் இருந்து வெளிக் கொணரப்பட்டு அல்லது உருவாக்கப்பட்டு இருக்கும் எக்ஸ்பிரசன்கள் , உடல் மொழிகள் , எல்லாம் ஆசம் அட்டகாசம்.
நாயகனாக நடித்து இருக்கும் தயாரிப்பாளர் ரக்ஷித் ஷெட்டி மிக சிறப்பாக நடித்துள்ளார் . கெஸ்ட் ரோலில் பாராட்டுப் பெறுகிறார் பாபி சிம்ஹா.
சிருங்காரத்துக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் நாயகி சங்கீதா சிருங்கேரியின் அழகும் நடிப்பும் அருமை . ஓட்டல்கார தாத்தா பாட்டி செண்டிமெண்ட், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தின் வாழ்க்கை எல்லாம் அபாரம்.
பத்தடிக்குப் பத்தடி அறை, பனி மலையின் விஸ்தீரணம் எதுவானாலும் அற்புதம் புரிகிறது அரவிந்த் காஷ்யபின் ஒளிப்பதிவு . படத்துக்கு ஒட்டு மொத்தமாகக் கொடுத்து இருக்கும் ஈர நிழல் டோன் படத்தின் பெரும்பலம்.
நோபின் பால் இசை , பிரதீக் ஷெட்டியின் எடிட்டிங் இரண்டும் நேர்த்தி
பயண நிகழ்வுகள், இமாச்சலப் பிரதேசத்தில் நிகழும் சம்பவங்கள் யாவும் நெகிழ்வு . ளோக்கேசன்கள் அழகு . சார்லிக்கு நாயகன் தாயுமானவனாக மாறும் நிகழ்வுகள் நெகிழ்வுகள் .
கிளைமாக்ஸ் காவியம் .
சம்பவங்களைக் குறைத்து முக்கிய சம்பவங்களை இன்னும் நெகிழ்வாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம் . தவற விட்டு இருக்கிறார்கள் .
எனினும் திரைக்கதை , மேக்கிங் இரண்டின் சரி பாதி ஈர்ப்பால் மனம் கவர்கிறது 777 சார்லி