டீம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அமீர் தயாரித்து முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, ,அவரது உதவியாளரான முத்து கோபால் கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கும் படம் அச்சமில்லை அச்சமில்லை .
இன்னொரு நாயகனாக ஹரீஸ் ஜலே என்பவர் நடிக்க , நாயகிகளாக தருஷி, சாந்தினி தமிழரசன் , இவர்களோடு துளசி ஜெயப் பிரகாஷ், அருள்தாஸ் , முனீஸ் ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள் .
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வழக்கமான நிகழ்ச்சியாக நடத்தாமல் பயனுள்ள வித்தியாசம் காட்டி இருந்தார் அமீர்.
சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் நேர்மைக்கு இழைக்கப்படும் அநீதிகளை ‘ அச்சமில்லை அச்சமில்லை ‘ என்ற உள்ள உரத்தோடு தட்டிக் கேட்ட சில நிஜமான சமூகப் போராளிகளை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார் .
அந்த வகையில் கந்து வட்டிக் கொடுமையால் தங்களை எரித்துக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு நீதி வழங்காத எடப்பாடி அரசைக் கண்டித்து கார்ட்டூன் போட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட தம்பி, கார்ட்டூனிஸ்ட் பாலா , மீத்தேன் கொடுமையை எதிர்த்து துண்டுப் பிரசுரம் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய குற்றத்துக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட தங்கை வளர்மதி ,
தனது சட்டப் போராட்டத்தால் ஊழல்களுக்கு சவுக்கடி கொடுக்கும் டிராபிக் ராமசாமி அய்யா ,
தன் உயிர்க் கூடே நொறுங்கினாலும் கவலை இல்லை என , கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக போராடி வரும் அண்ணன் சுப. உதயகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இவர்களின் மகுடமாக , பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைப் படுத்தி கொடுமைப் படுத்திய நிலச்சுவாந்தார்கள் போன்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து தண்டித்து அதற்காக இந்திய அரசால் 1970களின் இறுதியிலேயே தலைக்கு இரண்டு லட்ச ரூபாய் விலை வைக்கப்பட்டு ,
ஒரு நிலையில் போலீசாரால் கல்லால் அடித்துக் கொல்லப் பட்ட , தமிழ் தேசிய விடுதலைப்படை அமைப்பின் தலைவர் தமிழரசனின் தாயாரான 105 வயது வீரத்தாய் பதூசு அம்மாள் என்கிற பசுபதி அம்மாளும் இந்த நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
நிகழ்ச்சியில் பேசிய தம்பி பாலா ” கந்து வட்டிக் கொடுமையால் வேடிக்கை பார்த்த அரசு நியாயம் என்ற விசயத்தில் அம்மணமாய் நின்றது . அப்போது நான் அதை அப்படித்தானே கார்ட்டூனில் பதிவு செய்ய முடியும் . அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
தங்கள் அம்மணத்தை மறைத்து இருக்க வேண்டும் . ஆனால் என்னை கைது செய்தார்கள் ” என்றவர் , ” சினிமாக் கவர்ச்சியை வைத்து ரஜினி , கமல் , விஷால் எல்லாம் ஆட்சிக்கு வர நினைப்பது அநியாயமானது . மக்கள் முன்பு போல இல்லை ” என்றார் .
தங்கை வளர்மதி தன் பேச்சில் ” பழைசை எல்லாம் விடுவோம் . பஸ் கட்டண உயர்வையே எடுத்துக்குவோம் . முந்தைய பஸ் கட்டணத்தை விடவுமே ரயில் கட்டணம் கம்மி . ஆனால் இப்போதைய பஸ் கட்டணம் முந்தைய பஸ் கட்டணத்தை விட இரண்டு மடங்கு .
இப்போ ஓட்டை உடைசல் அரசு பேருந்து டிக்கட்டை விட , தனியார் பேருந்துகளில் டிக்கட் கட்டணம் கம்மி . அப்போ மக்கள் என்ன பண்ணுவாங்க . ரயில்லையோ அல்லது தனியார் பஸ்சுக்கோதான் போவாங்க. ஆனா , நிதியை பெருக்கத்தான் பஸ் கட்டணம் ஏத்தினோம்னு சொல்றீங்க . இது என்ன லாஜிக் ?
இப்படிப்பட்ட நிலையில்தான் , அரசு செய்யும் கொடுமைகளை எதிர்த்து போராடும் எல்லோரையும் அடித்து நொறுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது போலீஸ் . இப்போது போலீஸ் தாக்கி பலர் காயம் என்ற செய்தி வந்து கொண்டு உள்ளது . போலீஸ் இப்படியே செய்தால் மக்கள் தாக்கி போலீஸ் காயம் என்ற செய்திகள் இனி அதிகம் ஆகும் ” என்றார் .
தனது பல்வேறு அனுபவங்களை தனக்கே உரிய பாணியில் பேசிய டிராபிக் ராமசாமி அய்யா , ” இந்த அச்சமில்லை அச்சமில்லை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தமிழக மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் வரும் என்று நம்புகிறேன் .
பெரிய பெரிய அரசியல்வாதிகள் , நீதிபதிகளை எல்லாம் என் சட்டப் போராட்டத்தால் நடுங்க வைத்தவன் நான் . இடையில் வந்த இந்த பாடி எல்லாம் எம்மாத்திரம் ? இவனுங்க எல்லாம் மகா பாவிங்க .
ரஜினி , கமல் எல்லாம் சினிமாவுல ஒழுங்கா வேலைய பாக்கணும். அரசியல் எல்லாம் இனி நல்லவங்க வர வேண்டிய நேரம் வந்துடுச்சு.
கவர்னர்னு வந்த ஒருத்தர் பக்கத்துல ரெண்டு பெண்களை நிக்க வச்சுகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் . ஏண்டா தெருக் கூட்டறதா கவர்னர் வேலை ? இருந்த இடத்துல இருந்து வேலை வாங்கினாதான் கவர்னர் . என்ன கேவலம் இதெல்லாம் ?
எதற்காக சொல்கிறேன் என்றால். பொது மக்கள் பயப்படக் கூடாது . நீங்க பயப்படாதீங்க . எங்காவது நியாயம் நீதி மறுக்கப் பட்டால் எதிர்த்துக் குரல் கொடுங்க . அதுக்கு எதிர்ப்பு வந்தா என் பெயரை சொல்லுங்க .
அப்பவும் பலன் இல்லியா ? என் கிட்ட வாங்க . இந்த எண்பத்தைந்து வயது இளைஞன் உங்க பின்னால் நிற்கிறேன் ” என்றார் .
அண்ணன் சுப உதயகுமாரன், தன் பேச்சில் , ” வல்லரசுக் கனவு காணும் ஒரு நாடு , தொழில் நுட்பத்தில் வளர்ந்ததாக மார் தட்டிக் கொள்ளூம் நாடு நம் நாடு உலகின் ஏழாவது பெரிய கப்பற்படை .
ஆனால் ஒரு புயல் கடலில் இருந்து கரைக்கு வந்து கன்யாகுமரி மாவட்டத்தை சூறையாடி விட்டு திருவனந்தபுரம் மாவட்டத்தை கடந்து போன பிறகுதான் அதற்கு ஓகி புயல் என்று பெயரே வைக்கிறார்கள் . இதுதான் தொழில் நுட்ப அறிவா ?
இரண்டாயிரம் மீனவர்கள் இருக்கிறார்களா செத்தார்களா என்று தெரியவில்லை . இதுதான் ஏழாவது பெரிய கடற்படையின் லட்சணம் . புயல் வந்து உயிர்கள் போய் ஒருவாரம் கழித்துதான் கலெக்டர் வருகிறார் . இரண்டு வாரம் கழித்து முதல்வர் வருகிறார். மூன்று வாரம் கழித்து பிரதமர் வருகிறார் . இதுதான் ஆட்சிகளின் லட்சணம் .
வெளிநாடுகளுக்கு போய் நம்ம பிரதமர் வாங்கும் கடன்களின் அநியாயம் தெரியுமா ?
அவர்கள் கொடுக்கும் கடனை நாம் பெற்றுக் கொண்டு முதல் தவணையை வாங்கிய உடனேயே முழு தொகைக்குமான வட்டி கணக்கில் ஏறி விடும் . அடுத்த தவணைத் தொகையை நாம் வாங்காவிட்டாலும் வட்டி கட்டிதான் ஆக வேண்டும் .
கந்து வட்டியில் கூட வாங்கிய கடனுக்குத்தான் வட்டி . ஆனால் இங்கே வாங்காத கடனுக்கே வட்டி . இப்படிப்பட்ட கடன்களை வாங்கி நாட்டை அழிக்கிறார் பிரதமர்
கூடங்குளத்தில் தரமற்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று நான் சொன்னதற்காக என் மேல் பல தேச துரோக வழக்குகள் போட்டார்கள் . ஆனால் இன்று பல ஆய்வறிக்கைகளே அதைதான் சொல்கின்றன .
நியூட்ரினோ துகள்கள் பற்றிய அமெரிக்காவின் ஆராய்ச்சிக்கு ஒரு ஆய்வு அறிக்கை தருவதற்காக , நமது தேனி மாவட்டத்தில் மலைகளைக் குடைந்து நம் மாநிலத்தை அழிக்கிறார்கள் எனில் இது யாருக்கான ஆட்சி ?
எங்களால் அடிமை அரசியலை ஏற்க முடியாது . ஆனால் நாங்கள் விடுதலை அரசியல் கூட கேட்கவில்லை . எல்லா மக்களையும் சமமாக நடத்தும் உரிமை அரசியல்தான் கேட்கிறோம் ” என்றார் .
தமிழ் தேசிய விடுதலைப் படை இயக்கத்தின் தலைவர் தமிழரசன் கொல்லப் பட்டது பற்றி விளக்கமாகப் பேசிய- நிகழ்ச்சித் தொகுப்பாளர் சகோதரர் பால முரளிவர்மன் ,
” உலக இலக்கியங்கள் உருவகப்படுத்துகிற தாய் எனும் சித்திரத்திலிருந்து இன்னும் மேம்பட்ட தாய் உங்கள் முன் இருக்கிறார்.
1945 ல் இவர் ஒரு விடுதலை வேங்கையை ஈன்றெடுத்தார்.பொறியியல் படித்து முடித்த அவர் ஒரு நாள் இந்த தாயிடம் சொல்லியிருக்கிறார்
“அம்மா நான் மக்களுக்காக போகிறேன்.உனக்கு ஆயிரமாயிரம் மகன்கள் துணையாக வருவார்கள்.”
என்று கூறி விடைபெற்று தனது பள்ளி ஆசிரியர் புலவர் கலியபெருமாளுடன் இணைந்து போராட்டக்களம் புகுந்தார்.
ஆசிரியரும் மாணவரும் எளியோரை கொடுமைப்படுத்திய மக்கள் எதிரிகளுக்கும் அரசுக்கும் கொடுங்காவல் அதிகாரிகளுக்கு பாடம் புகட்டினார்.
பண்ணையார்கள் நிலச்சுவாந்தார்கள் மக்களை சுரண்டிய முதலைகள் என அழித்தொழிப்பு செய்தார்.1975 ல் தமிழரசன் தலைக்கு 2லட்சரூபாய் என்று அரசு அறிவித்தது.
நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்ட அவர் சிறையிலிருந்து தப்பினார்.
பிடிபடும்போதெல்லாம் சிறை அதிகாரிகள் இனி தப்ப மாட்டேன் என்று எழுதிக்கொடுங்கள் என்றபோது, ” தடுப்புவது உங்கள் கடமை தப்புவது என் கடமை” என்றார் தமிழரசன்
தோழர்கள் அவரிடம் , “இப்படி பதில் சொல்றீங்களே?ஆபத்தில்லயா?”
என்று கேட்க,
“என்னை பொய் சொல்லச் சொல்றீங்களா?”என்று கேட்ட உண்மையான தலைவன் அவர் .
நீங்கள் பொறியாளர். வசதியாகவும் பதவியோடும் வாழலாம் ஏன் இப்படி துன்பப்படறீங்க?என்ற சிறை அதிகாரியின் கேள்விக்கு
“என் நாட்டு மக்கள் கண்ணெதிரே வறுமையிலும் பட்டினியிலும் சாகும்போது நான் எப்படி வசதியாக வாழமுடியும்?”என்று கேட்ட மக்கள் தலைவர் தமிழரசன்.
அவரை காவல் துறை மக்களோடு மக்களாக கலந்து நின்று கல்லால் அடித்துக்கொன்றது. பழியை மக்கள் மீது போட்டது.
அப்போது தமிழரசன் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.காவல்துறை மக்களை கேடயமாக பயன்படுத்தியதால் எந்த மக்களுக்காக போராட வந்தேனோ அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்தமாட்டேன் என்று,
கல்லடிகளை உடலில் தாங்கி மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சொந்த மண்ணில் தன் ரத்தத்தையும் உயிரை சிந்தினார்.
அப்படிப்பட்ட உண்மையான புரட்சித்தலைவனை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவிட்ட ஒருவரைத்தான் சமூகம் புரட்சித்தலைவர் என்று கொண்டாடியது.
கலையை நேசிப்பவனால் சக மனிதனையும் சமூகத்தையும்
நேசிக்கமுடியும்.
கலை நேசர்கள் நீங்கள் அனைவரும. எழுந்து நின்று கைத்தட்டலால் நன்றி தெரிவியுங்கள்.”
என்றதும் மொத்த அரங்கமும் எழுந்து நின்று கண்ணில் நீர் துளிர்க்க கரகோஷம் எழுப்பியது
படம் பற்றிப் பேசிய தம்பி இயக்குனர் முத்து கோபால்,
“திருப்பூர் , கோவை பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடு, நன்னீர் விஷம் ஆவது,
நதிகளின் அழிவு, உடல் நலச் சீர்கேடு, விவசாயத்தின் வீழ்ச்சி … இது பற்றிப் பேசும் படம் இது
பாதிப்புகளை மட்டும் சொல்லாமல் சாயப் பட்டறைகள் எப்படி எல்லாம் செயல்படுகின்றன , சாயக் கழிவை நீர் நிலைகளில் கலக்கின்றன என்பதை எல்லாம் அந்தப் பகுதிகளிலேயே போய் படமாக்கினோம் .
இதனால் பல மிரட்டல்களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளானோம் . படக் குழுவில் இருந்த எல்லோருமே ஆபத்துகளுக்கு ஆளானோம் .
அதை எல்லாம் மீறி இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இப்படிப்பட்ட பெரிய ஆளுமைகள் முன்னிலையில் என் படத்தின் ஆடியோ விழா நடப்பது பெருமையாக இருக்கிறது ” என்றார் .
தமிழ்த் திரை உலகின் காரல் மார்க்ஸ் (பட்டம் வழங்கியது சகோதரர் பாலமுரளிவர்மன்) சகோதரர் இயக்குனர் ஜனநாதன் “படத்தைப் பற்றி பேசும் பொறுப்பு என்னுடையது . நான் முழு படத்தையும் பார்த்து விட்டேன் . படம் மிக சிறப்பாக வந்துள்ளது .
அறம் படம் முடிந்து ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் ஒரு விநியோகஸ்தர் படம் மீது ஆர்வம் காட்டினர் . மற்ற சிலர் அதில் கமர்ஷியல் இல்லை என அவரை பின்னுக்கு இழுத்தனர் . ஆனால் அதை மீறி அவர் வாங்கி வெளியிட்டார் .
படம் வென்றது . அது போல நம்பி வாங்கி வெற்றியும் பெற்று மக்களுக்கு நல்ல தரமான படம் கொடுத்தோம் என்ற பெருமையையும் தரும் படம் இந்த அச்சமில்லை அச்சமில்லை ” என்று முத்திரை பதித்தார் .
விரிவாகப் பேசிய சகோதார் இயக்குனர் அமீர் , ” முத்து கோபால் என்னிடம் வேலை செய்யும்போது அதிகம் திட்டு வாங்கிய உதவி இயக்குனர்களில் ஒருவர்
திடீரென்று ஒரு நாள் வந்து ‘நான் ஒரு படம் எடுத்து இருக்கேன் . முக்கால் வாசி முடிச்சுட்டேன் படத்தை முடிக்க பணம் பத்தல’ என்றார் .
சரி எவ்வளவு காசு கடன் வேண்டும் .அஞ்சு லட்சமா ? பத்து லட்சமா ? என்றேன். ‘‘இல்ல நீங்க படத்தை எடுத்து முடிச்சுத் தரணும் ” என்றார் .
‘ ஏம்ப்பா… நீ என்ன எடுத்து இருக்கன்னு தெரியல . நான் எப்படி பணம் போட்டு முடிக்கிறதுன்னு கேட்டேன் .”முதல்ல படத்தைப் பாருங்க ” என்றார்படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது . சரி பண்ணுவோம்னு முடிவு பண்ணேன் . அப்போதான் படத்துல ஒரு விவசாயி கேரக்டர் இருக்கு . கெஸ்ட் ரோல் அதை நீங்கதான் பண்ணனும்னு சொன்னார் . நடிச்சு முடிச்சேன் .
முத்து கோபால் படத்துல வக்கீலா வர்றார் .
இது மாதிரி படங்கள் தொடர்ந்து தயாரிப்பேன். இப்பவே என் அசிஸ்டன்ட் ரெண்டு பேர் அடுத்த கதையோட ரெடியா இருக்காங்க ” என்றவர் ,
தொடர்ந்து நிகழ்ச்சியின் நிகழ் தன்மைக்கு வந்தார் .
” சினிமாவில் இருந்து யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை . இதை நான் சினிமாக்காரனாக சொல்லவில்லை . ஒரு குடிமகனாகவே சொல்கிறேன் . இங்கே பேசிய பலரும் சமூகத்துக்கு போராடுகிறார்கள் .
ஆனால் இவங்க யாரும் கட்சி ஆரம்பிக்கல . அப்போ நான் யாருக்கு ஓட்டுப் போடுவது ? ஐ ஏ எஸ் சகாயம் கட்சி ஆரம்பிச்சா அவருக்கு போடலாம் . ஆனா அவரு வரமாட்டேன்னு சொல்றார் கட்சி ஆரம்பிக்கிறவங்களுக்குதான் நாம ஓட்டுப் போட முடியும் . சினிமாக்காரங்கதான் ஆரம்பிக்கறாங்க. . அதனால சினிமாக்காரங்க அரசியலுக்கு வரக்கூ டாது என்பது அல்ல.. அவங்க நல்லவங்களா இருந்தா ஓட்டுப் போடலாம் .
அப்படி இருக்காங்களா என்பதுதான் கேள்வி .
ஒரு மடாதிபதி தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கல. கேட்டா தியானத்துல இருந்தாராம் . தேசிய கீதம் பாடும்போது மட்டும் கரெக்டா எழுந்து நிற்கிறார் . இது என்ன நியாயம் ?
நான் என்னிக்கு ஹெச் ராஜாவை ஹரிஹர ராஜா சர்மா என்று சொன்னேனோ அதுல இருந்து நான் என் தமிழுக்கும் , தமிழ் நாட்டு மக்களுக்கும் ஆதரவா பேசினா எப்போ பேசினாலும் .. உடனே நீ பாகிஸ்தான் போயிடு னு குரல் வருது . அவன் என்னமோ நான் போன உடனே வான்னு கூப்பிட்டுக்கற மாதிரி . இதான்டா என் மண் . இதை விட்டு நான் எங்கே போவேன் ?
ஒண்ணு புரிஞ்சிக்கணும் பிஜேபி ஆட்சி ஆனாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி ஆனாலும் சரி .. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல ..இரண்டுமே தமிழர் விரோத இயக்கங்கள்தான் . இதை உணராதவரை தமிழனுக்கு விடிவு இல்லை ” என்று முடித்தார் .
இப்படியாக பொருள்பொதிந்த – உணர்வும் அறிவும் ஒன்றிணைந்த — தமிழ் சினிமா நிகழ்ச்சிகளில் ஒரு குறிஞ்சிப் பூவாக அமைந்தது ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் இசை வெளியீடு .