ஒலியும் மொழியும் இசையும் , குரலும் செவியும் ரசனையும் உள்ளவரை அழிக்க முடியாத திரைப்படப் பாடல்களைத் தந்தவர் மெல்லிசை மாமன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.
. / Namma Exclusive / Promotions / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / ரகளை பக்கம் / விமர்சனம்
வியத்தகு சாதனைகள் செய்த போதும் அதற்கான எந்த இறுமாப்பையும் தலைக்குக் கொண்டு போகாமல் கடைசிவரை எளிமையாக வாழ்ந்த மாமனிதர் .
பெரியோரிடத்தில் பணிவு , சிறியோரிடத்தில் கனிவு , சமமானவர்களிடையே அன்பு என்று போற்றத் தக்க வாழ்வு வாழ்ந்து இசையாக காற்றில் கலந்து மக்கள் மனங்களில் நிலைத்தவர்.
அவர் மனசுக்குள் ஓர் ஆசை இருந்திருக்கிறது.
காலகாலமாகத் தன்னுடன் பணி புரிந்து ஒரு நிலைக்குப் பிறகு வறுமையிலும் தேவையிலும் இருக்கும் இசைக் கலைஞர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி பொருள் ஈட்டித் தர வேண்டும் என்ற ஆசைதான் அது
அதற்கான ஏற்பாடுகள் செய்ய நினைத்த போது அவர் மறைந்தார்.
தந்தையின் விருப்பத்தை செயல்படுத்தி அதையே தன் தந்தைக்கான அஞ்சலியாக செலுத்திக் கொண்டிருக்கிறார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் தவப்புதல்வர் ஹரிதாஸ் .
எம் எஸ் வி நினைவு அறக்கட்டளை என்ற அமைப்பு மூலம்
திரையிசை மற்றும் நாடக இசைக் கலைஞர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் மருத்துவ உதவிகள் கல்வி உதவிகள் வழங்குவது , பண முடிப்பு மற்றும் வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்குவது , மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் அநாதை இல்லம் ஆகியவற்றுக்கு பண உதவிகள் செய்வது ஆகியவற்றை செய்கிறார் .
அதன் ஓர் முக்கிய அங்கமான மெல்லிசை மன்னரின் பாடல்கள் மட்டும் கொண்ட மாபெரும் இசைத் திருவிழாவை விஸ்வ ஸ்வரங்கள் என்ற பெயரில்
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ST.BEDE’S மேல்நிலைப் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடத்துகிறார் ஹரிதாஸ் .
பிரபல பாடகர்கள் பாடகிகள் , மறைந்த மாபெரும் பாடகர்களின் வாரிசுப் பாடகர்கள் கலந்து கொண்டு பாடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் ரசிப்பதற்கான நன்கொடையாளர் நுழைவுச் சீட்டு ரூ. 1000 மற்றும் 500 மட்டுமே . இது வணிக ரீதியான நிகழ்ச்சி அல்ல . இன்றும் நாம் ரசிக்கும் பல பாடல்களுக்கு இசை மீட்டிய கலைஞர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நாம் தரும் காணிக்கையே . கூடவே நல்ல இசை விருந்தும் நமக்கு .
“நன்கொடை நுழைவுச் சீட்டு மட்டுமின்றி மேற்கொண்டு இசைக் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்க விரும்புவோரும் தரலாம்” என்கிறார், எம் எஸ் வியின் புதல்வர் ஹரிதாஸ்
நன்கொடைச் சீட்டுகள் பெறவும் மற்ற விவரங்களுக்கும் ஹரிதாஸை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 88070 21678.
எம் எஸ் வியின் புதல்வரை பார்க்கிற பேசுகிற சந்தோஷமும் கிடைக்கும் .
பெறுக! வருக! மகிழ்க !