தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 10வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ,
இந்த நேரத்தில் தமிழ்நாடு, கேரளா , மற்றும் கர்நாடகாவில் தனது நேரடித் தெலுங்கு படங்கள் மூலமே ரசிகர்களை சம்பாதித்து,
தெலுங்கில் கலக்கிக் கொண்டு இருக்கும் பிரபல ஹீரோவான ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்க
இயக்குநர் லிங்குசாமி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கும் புதிய படத்தை ,
தங்களது 12 ஆவது தயாரிப்பாகத் துவங்கி இருக்கிறது ஸ்டுடியோ கிரீன்.
இப்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி, டிசம்பர் 3 ஆம் தேதி வெளிவரவிருக்கும் சிங்கம் 3, மற்றும் விக்னேஷ் சிவர் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் தானா சேர்ந்த கூட்டம்,
ஆகிய படங்களைத் தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், தங்களின் அடுத்த படைப்பாக இந்த புதிய படத்தைத் துவங்குகிறது.
2017 பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது .
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்ல்பில் நடிகர் அல்லு அர்ஜுன் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் சிவகுமார் ,
அல்லு அர்ஜுனின் சகோதரர் நடிகர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவகுமார் பேசியபோது, ” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர் , அவர் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார்.
சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
அவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படங்களைத் தயாரிப்பார் என்று நான் நினைத்ததில்லை.
இப்போது அவரைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை தயாரித்த அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கும் , தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது.
எம். ஜி .ஆர் , சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் என்.டி.ஆர் , நாகேஸ்வர ராவ் ஆகியோரும்,
இங்கேயும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இங்கும் வெற்றி படங்களைக் கொடுத்து வந்தனர்.
அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார் , அவருக்கு கண் , காது மூக்கு என அனைத்தும் அழகாக உள்ளது. நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்குப் போட்டியாக வந்திருப்பார்.
முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னைத் தேர்வு செய்தனர். இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.
அவர் தமிழில் அறிமுகம் ஆகும் இந்த படம் வெற்றி பெறும்” என்றார்
நடிகர் அல்லு அர்ஜுன் தன் பேச்சில் ” நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில்தான் , 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னைதான்.
நான் மேடைக்கு வந்து தமிழில் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன்.
நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை.
அதற்குக் காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடித் தமிழ் படம் நடிக்க வேண்டும் என்பதால்தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது.
நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன்” என்றார்
இயக்குநர் லிங்கு சாமி பேசும்போது “நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது
அவர்களில் சிலர் என்னிடம் ” நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் ” என்றனர்.
அவருக்கு தமிழிலிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து நான் தமிழில் இயக்கும் நேரடித் தமிழ் படம் இருக்கும்.
சண்டக் கோழி திரைப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தை துவங்கவுள்ளேன்” என்றார் .
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது ” அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிகர் . அவரை தமிழில் கொண்டு வருவது சந்தோஷமான விஷயம் .
லிங்குசாமியின் திறமை இந்த இருமொழிப் படத்தின் மூலம் ஜொலிக்கும் .
எங்களை வாழ்த்த வந்து இருக்கும் சிவகுமார் சாருக்கு மிக்க நன்றி . எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இந்தப் படத்தைக் கொண்டு வருவோம் ” என்றார்
வாழ்த்துகள் !