பிகே பிலிம்ஸ் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிக்க, சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதா ஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு , மாணிக்கம் நடிப்பில்
துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் என்ற படைப்பைத் தழுவி, ஜி ராஜாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் .
ஆண்ட சாதிக் குழுக்கள் இரண்டு.
இரண்டு பக்கமும் அடிமைப் படுத்தப்பட்டு இருக்கும் நாவிதர் , துணி துவைக்கும் சமூகம்,
அதற்கும் கீழ் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகம்.

‘ஆண்ட சாதிக்கு அடிமைப் பட்டுக் கிடப்பதே சுகம், அதில் முக்க்க்கியத்துவம் கிடைப்பதில் பெருமை’ என்று பல தலைமுறை மனிதர்கள் வாழ்ந்து விட்டுப் போய்விட, அந்த நிலையை மாற்ற முயலும் இன்றைய தலைமுறை .
அதில் நன்றாகப் படிக்கும் ஓர் இளைஞன் . அவனைப் படிக்க வைக்க கஷ்டப்படும் ஏழை அப்பா, அம்மா .
கோவில் திருவிழாவுக்கு அந்த இளைஞனின் நண்பர்கள் ,அத்தைப் பெண் எல்லாம் வந்திருக்க, பூசாரியின் தட்டில் இருந்து அவன் விபூதி எடுக்க,
தாழ்த்தப்பட்டவன் பூசைத் தட்டைத் தொடுவதா என்று பூசாரியும் ஆண்ட சமூகமும் கொதிக்க,

அந்த மாணவனுக்கு தண்டனை தர, பூசாரி, ஆண்ட சமூகங்கள் எல்லோரும் ஒன்று திரள, கட்டைப் பஞ்சாயத்து நடக்கவிருக்க, கோபத்தில் அப்பா மகனை அடிக்க, அப்புறம் உருக,
நடந்தது என்ன என்பதே படம் .
எளிய படம்.
அதுவே பலம்
தாழ்த்தபட்டவராய் ஒரு கிராமத்தில் பிறப்பவர்களின் வலி, அவர்கள் வாழ்வியல், அந்த வாழ்வியலில் அவ்வப்போது வரும் சந்தோசங்கள் , பிரச்னைகள் அடிமைத்தனம் , என்று உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறது படம்

பலரும் செயற்கையாக நடித்து இருந்தாலும் இளைஞனின் அப்பாவாக வரும் சங்ககிரி மாணிக்கம், (இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரின் தந்தை) அற்புதமாக நடித்துள்ளார் .
காட்சிகளில் மண் வாசனை மிக சிறப்பு
அந்தோணி தாசனின் பாடல் இசை , ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை சிறப்பு. பாடல் வரிகள் உருக்கம்
இதை ஒரு வணிக வெற்றிப் படமாக்க, இன்னும் நல்ல திரைக்கதை, நடிக நடிகையர், நல்ல நேர்த்தியான இயக்கம் தேவை
என்றாலும் தாழ்த்தப்பட்டவனாகப் பிறந்து சுயமரியாதையோடு வாழ முயல்வதன் ரண வேதனையைப் பதிவு செய்கிற வகையில் உயர்ந்து நிற்கிறது படம்