சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி ஜி தியாகராஜன் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி, நெப்போலியன், விதார்த், சாய்குமார், தீனா, ஆஷா சரத், காஷ்மிரா, ஷிவானி ராஜசேகர், ஆடுகளம் நரேன் நடிப்பில் அஸ்வின் ராம் இயக்கி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் .
மதுரைப் பகுதி கிராமம் ஒன்றில் குலப் பெருமை- சாதிப் பெருமை கொண்ட முனியாண்டியின் ( நெப்போலியன்) மகளை (ஆஷா சரத்) காதலித்துக் கல்யாணம் செய்த காரணத்தால் மாமனாரின் கோபத்துக்கும் மனைவியின் புறக்கணிப்புக்கும் ஆளான ஒருவர் ( சாய்குமார்), தனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு கனடா போய் பெரும் தொழில் அதிபர் ஆகி விடுகிறார்.
மதுரையில் வளரும் பையனின் பெயர் அன்பு ( ஹிப் ஆதி ) என்று இருந்தாலும் அவன் தாத்தா பாணியில் அறிவற்ற அடாவடிக்காரனாக வளர்கிறான் .
அமெரிக்காவில் அப்பா வளர்க்கும் பையனின் பெயர் அறிவு (ஹாப் ஆதி ) இருந்தாலும் அவன் தாயின் அன்புக்காக ஏங்குகிறான் .
இருபத்தி நான்கு வருடங்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஒரு நாள் பட்டிக்காட்டு எம்ஜிஆர் பட்டணத்துக்கும் பட்டணத்து எம் ஜி ஆர் பட்டிக்காட்டுக்கும் … இல்ல இல்ல .. கிராமத்து ஆதி கனடாவுக்கும் கனடா ஆதி கிராமத்துக்கும் வர ,
இந்தப் பகைக்கும் எல்லாம் காரணமான வஞ்சகம் பிடித்த முன்னாள் வேலைக்காரன் பசுபதி ( விதார்த்) எம் எல் ஏ வாக வளர்ந்து நிற்க அப்புறம் என்ன நடந்தது என்பதே அன்பறிவு .
படத்தின் கதை சத்யஜோதி கதை இலாகா என்று போடுகிறார்கள் . பேசாமல் சத்யா மூவீஸ் கதை இலாகா என்றே போட்டு இருக்கலாம்.
ஆனால் படத்தை இயக்கி இருப்பவர் – நடிகர் ஜீவா ரவியின் மகனான,- இளம் இயக்குனர் அஸ்வின் ராம் என்பதுதான் அடடே சொல்ல வைக்கும் ஆச்சர்யம்.
தாத்தா, அம்மா, அப்பா , நண்பன், தாத்தாவின் நண்பர், தாத்தாவின் வேலைக்காரன், அப்பாவின் சகோதரி , அந்த சகோதரியின் கணவர் , அவர்களின் மகள், அந்த மகளின் அப்பா வழி முறைமாமன், சொந்தம் பந்தம் என்று ஏகப்பட்ட கேரக்டர்கள் கொண்ட திரைக்கதையையும் காட்சிகளையும் உணர்வுகளையும் குழப்பம் இல்லாமல் கையாண்டு பாராட்டுப் பெறுகிறார் .
அதுவும் ஜல்லிக்கட்டுக் காளையை வைத்து இவர் அமைத்திருக்கும் ஒரு காட்சி அற்புதம் .சபாஷ் தம்பி . வாழ்த்துகள் .
இரட்டை வேடப் படங்களில் நடித்த நடிகர்கள் பட்டியலில் புது வரவு ஹிப் ஹாப் ஆதி, இரண்டு வேடத்துக்கும் கூந்தல் அளவில் வித்தியாசம் காட்டுகிறார் . மற்றபடி குறும்பான குரல் , மனதின் உணர்வுகளை உடல் மொழிகளால் உணர்த்தும் அந்த துறுதுறு துள்ளல் நடிப்பு , சிரிப்பு எல்லாம் இருக்கிறது.
பிக்னிக் போன கணக்காக நாயகிகள் ஒகே . நெப்போலியன் தோற்றப் பொருத்தத்தில் ஜொலிக்கிறார் . அட்டகாசமான நடிப்பில் அசத்தி இருக்கிறார் வில்லனாக விஸ்வ ரூபம் எடுத்திருக்கும் விதார்த் . அபாரம் .
கொரோனா வந்து குணமான உண்மையை நடிகை ஆஷா சரத் வெளியே யாருக்கும் சொல்லாமல் மறைத்து விட்டார் போலிருக்கிறது.
தீனா மீது இயக்குனருக்கு என்ன கோபம் ? அவர் நடிக்கும்போது மட்டும் கேமரா அருகில் சிங்கத்தையும் புலியையும் உலவ விட்டு ஆக்ஷன் சொன்னால் என்ன நியாயம்? ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் முகத்தில் அவ்வளவு பதட்டம் படபடப்பு .
பாடல்கள் பின்னணி இசை இரண்டும் பலம். இசை மற்றும் பின்னணி இசை ஹிப் ஹாப் ஆதி என்று டைட்டிலில் போடுகிறார் . ஒரே நபர் செய்திருக்கும்போது ஏன் பிரித்துப் போடணும்? குழப்பமா? இரட்டை வேடமா ?
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கிராமிய சூழலை உணர வைக்கிறது . கனடாவையும் நம்ப வைக்கிறது . ஜல்லிகட்டுக் காட்சிகளை சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார்கள் .
பிரதீப் ராகவின் படத் தொகுப்பு சிறப்பு .
ஆண்டியாபுரம் என்பதை ஆன்டியாபுரம் என்று எழுதி இருக்கிறார்கள் . பேசாமல் ஆன்ட்ரியாபுரம் ஆக்கி இருக்கலாம் . கிளுகிளுப்பு ஏறி இருக்கும்.
அப்பா மகளைப் பார்த்து கேட்கிறார் , ” அப்போ நீ இத்தன வருஷமா என் கூட வாழ்ந்தது விருப்பம் இல்லாமதானா ?” . வசனகர்த்தா(க்கள்) எழுதிக் கொடுத்த துணிகரமா? இல்லை படப்பிடிப்பில் யாரும் செய்த பயங்கரமா? தப்பு சார் ரொம்பத் தப்பு .
முதல் பாதி விட்டேத்தியாக நீந்தி இரண்டாம் பாதியில் சுதாரித்து கடைசியில் கஷ்டப்பட்டுக் கரையேறிக் கை குலுக்குகிறது படம்.
கிளைமாக்ஸ் பகுதி அருமை .
உறவுகளை சுயநலவாதிகள் பிரித்தாள விடக் கூடாது என்ற கருத்து சிறப்பு .
அன்பு , அறிவு எது பெரிது என்றால் அன்பாக இருப்பதே அறிவு என்ற விளக்கம் அருமை .
அன்பறிவு …. முதலில் போங்கு; அப்புறம் குடும்பப் பாங்கு