ரெயின்போ புரடக்ஷன்ஸ் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்க ராஜ் கமல், சாண்ட்ரியா, ஸ்வேதா பண்டிட், மது , ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் .
;;அழகான பொண்ணை நிர்வாணமா படம் எடுத்தா ஆயிரக் கணக்கில் கிடைக்கும் . அதே ஒரு சுமாரான பெண்ணை நிர்வாணப் படம் எடுத்து (ஒரு பென் ட்ரைவ்ல?) கொடுத்தா 999 ரூபாய் கொடுப்பாங்க” என்று படத்தில் வரும் வசனமே படத்துக்கான பெயர்க் காரணம் ( என்று தோன்றுகிறது).
இல்லை என்றால் தலைப்பிலேயே தமிழைச் சரியாக எழுதாத படம் என்றே இதைச் சொல்ல வேண்டும்.
பெண்களை அவர்கள் அறியாமல் குளிக்கும் போதோ அல்லது பாலியல் உறவின் போதோ படம் எடுத்து அதை இணைய தளங்களில் ஏற்றியும் விற்றும் அந்தப் படத்தை வைத்து பிளக் மெயில் செய்தும் அநியாயம் செய்யும் கும்பலைப் பற்றிய படம் .
வீட்டுக்குள் பிளம்பர் வேலை எலக்ட்ரீசியன் வேலை செய்ய வரும் ஆட்கள் எப்படி வீடுகளில் கேமரா பிக்ஸ் செய்து வீட்டில் இருக்கும் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பிடித்து மீண்டும் வந்து கேமராவை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்; வாடகைக்கோ சொந்தமாகவோ மக்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட் வாட்ச் மேன் உட்பட பலருக்கு அதில் எப்படி எல்லாம் தொடர்பு இருக்கக் கூடும் ; தனியாகவோ அல்லது பெண்கள் மட்டுமோ இருக்கும் வீடுகளில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது பற்றி எல்லாம் சொல்கிறார்கள் .
இதை இன்னும் அழுத்தமாக தெளிவாக பதைபதைக்கும்படி சொல்லி இருக்கலாம் .
இதற்கிடையில் ஒரு காதல் ஜோடி , அதில் பெண் மீது அன்பான ஒரு போலீஸ்கார அண்ணன், பெண்ணின் தோழி ஒருத்தியின் தற்கொலை , காதலன் பற்றி காதலிக்கு தெரிய வரும் ஓர் உண்மை என்று ஒரு கதைத் தடம் போகிறது .
அது எந்த வகையிலும் ஈர்ப்பாக இல்லை.
கொடைக்கானல், கடப்பா என்று படத்தின் லொக்கேஷன் பிரம்மாதமாக இருக்கிறது . சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும் சிறப்பு
ராஜ்கமல் , ஸ்வேதா இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் .
சிச்சுவேசன் பற்றிக் கவலையே படாமல் பின்னணி இசை என்று எதையோ வாசிக்கிறார் விவேக் சக்கரவர்த்தி
எனினும் ஆபாச வீடியோ வலையில் பெண்கள் விழாமல் இருப்பதற்கான விழிப்புணர்வைத் தரும் வகையில் படத்தைப் பாராட்டலாம்.