ஸ்டார் மூவீஸ் சார்பில் பிரீத்தி தியாகராஜன் வழங்க, சாந்தி தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த், பிரியா ஆனந்த், கார்த்திக், சிம்ரன், யோகிபாபு, ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், லீலா தாம்சன் நடிப்பில் தியாகராஜன் இயக்கி இருக்கும் படம்.
ஸ்ரீராம் ராகவனின் இயக்கம் மற்றும் இணை எழுத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த அந்தாதூன் (குருட்டு மெட்டு) படத்தின் அட்சரம் பிசகாத ரீமேக் .
அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்று பொருள் .
பார்வையில்லாதவன் என்றால் அனுதாபம் காரணமாக அதிகப் பாராட்டும் வாயப்பும் கிடைக்கும் என்பதற்காக பார்வையில்லாதவன் போல நடிக்கும் பியானிஸ்ட் ஒருவனுக்கு ( பிரசாந்த்), மதுபான விடுதி வைத்திருக்கும் உரிமையாளரின் மகளோடு ( பிரியா ஆனந்த்) சிநேகம் ஏற்படுகிறது . அவளது பாரிலேயே பியானோ வாசிக்கும் வேலையில் அவன் சேர்கிறான் .
பிரபல முன்னாள் நடிகர் நவரச நாயகன் கார்த்திக் ( அவரே) அங்கே வரும்போது இசைக் கலைஞனின் இசையை கேட்டுப் பாராட்டுகிறார் . தனது இரண்டாவது மனைவியின் (சிம்ரன்) பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சிப் பரிசாக , பியானிஸ்ட்டை வீட்டுக்கு வரவழைத்துப் பாட வைக்க ஏற்பாடு செய்கிறார்.
அதன்படி அவன் போக , அங்கே கார்த்திக் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடக்கிறார். தவிர அவர் மனைவியின் கள்ளக்காதலன் (சமுத்திரக்கனி) உள்ளே இருக்கிறான் .
தொடர்ந்து கண்ணில்லாதவன் போலவே நடித்து விட்டு , வெளியே வந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போனால் , அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்தான் அந்தக் கள்ளக்காதலனே.
இந்த நிலையில் அந்த இன்ஸ்பெக்டருக்கும் கள்ளக்காதலிக்கும் இசைக் கலைஞன் உண்மையில் பார்வையற்றவன்தானா என்ற சந்தேகம் வர , ஒரு நிலையில்,அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொய் உண்மையாக .. அப்புறம் நடந்தது என்ன என்பதே அந்தகன் .
மிக இளம் வயதிலேயே முக்கிய நாயகனாக உயர்ந்து , ஒரு நிலையில் பின்னடைவைச் சந்தித்தாலும் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டு விடாமல் போராடிக் கொண்டிருந்த பிரசாந்த் ,மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும் .
அதற்கு ஏற்ப இந்தப் படம் பிரசாந்துக்கு சரியான கம் பேக் . ஒரிஜினல் பட நாயகன் ஆயுஷ்மான் குரானாவை விட சிறப்பாக பொருத்தமாக நடித்துள்ளார் . (குறிப்பாக ஒரு பக்கம் விஷம் இன்னொரு பக்கம் துப்பாக்கி இடையில் தடுமாறும் காட்சி ). இன்னும் நாயகனுக்கு உரிய பொருத்தமான தோற்றத்துடன் ஜொலிக்கிறார். படம் முடிந்த நிலையில் வரும் புரமோஷன் பாடலில் அழகாக ஆடியும் கவர்கிறார். வாழ்த்துகள் பிரசாந்த் .
பிரசாந்த் மட்டுமல்ல தபுவை ஜஸ்ட் லைக் தட் தூக்கிச் சாப்பிட்டு இருக்கிறார் சிம்ரன் . மிரட்டலான வில்லத்தனம் மட்டுமல்ல, தனக்கும் இசைக் கலைஞனுக்கும் இடையில் உறவு இருப்பதாக அவன் காதலியை நம்ப வைக்கும் காட்சியில் கதவைத் திறந்து நின்று கொண்டு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார் பாருங்கள்… அசத்தல் .
ஆகா நவரச நாயகன் கார்த்திக்.! பிரேமில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அவர்தான் ஜொலிக்கிறார். இன்னும் குறையாத அவரது கரிஷ்மா வசீகரிக்கிறது. (கொஞ்சம் வாயை மட்டும் கட்டி விட்டிருக்கலாம் தியாகராஜன் ) .
இவர்கள் செய்திருக்கும் மேஜிக் ஒரிஜினல் இந்திப் படத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று
பிரியா ஆனந்த் சிறப்பாகவே நடித்துள்ளார் என்றாலும் இப்போதும் ஒரிஜினல் ராதிகா ஆப்தேவின் கொடிதான் உயரப் பறக்கிறது .
ஊர்வசி வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார் . யோகி பாபு , கே எஸ் ரவிகுமாரும் ஒகே .
அதே போல ரவியாதவின் ஒளிப்பதிவு சந்தோஷ் நாராயணன் இசை இவையும் ஒரிஜினல் இந்திப் படத்தை விட சிறப்பு
அதே நேரம் தமிழுக்கு என்று பார்க்கும்போது படத்தில் வரும் நைட் லைப் வாழ்க்கை நமக்கு (அல்லது நமது பேர்வாதி சினிமா ரசிகர்களுக்கு) அன்னியமாக இருப்பது , எந்த கேரக்டரையும் தொடர்ந்து பின் தொடர முடியாத அளவுக்கு , இசைக் கலைஞனை பாதித்த அனைவரின் வில்லத்தனத்தையும் முனை மழுக்கி , ஓர் ரெண்டுங்கெட்டான் கெட்ட நிலையை உருவாக்குவது போன்றவை இங்கே குறைபாடாகத்தான் இருக்கும் .
தான் பார்வையற்றவனாக நடிப்பதற்கு இசைக் கலைஞன் சொல்லும் காரணம் வெகு ஜன லாஜிக்படி பொருத்தமானது அல்ல . தவிர பிரசாந்த கேரக்டர் ஒரு நிலையில் சினிமா எம் ஜி ஆரை விட நல்லவனாக இருப்பதும் ஏற்புடையதாக இல்லை
எனினும் படம் ஓர் வித்தியாசமான அனுபவத்தைத் தர முயல்வதில் வெற்றி பெறுகிறது .
பல காட்சிகளில் அதே மாதிரி உடை , லொக்கேஷன், செட் புராப்பர்ட்டீஸ் வசனம் , என்று படத்தின் ஃபினிஷிங் ஷாட் வரை பிரதி எடுத்திருந்தாலும் இன்னொரு பக்கம் விஷம் கலந்த இனிப்பை சாப்பிடும் பூனை உள்ளிட்ட ஒரு விசயங்களை நீக்கி எதை நீக்குவது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்
எனவே ஒட்டுமொத்த படமும் ஒரிஜினலை விட சிறப்பாக வந்துள்ளது . தொழில்நுட்பத் தரத்திலும் ஜொலிக்கிறது
மொத்தத்தில் அந்தகன் … பிரசாந்துக்கு வெளிச்சம்