சிவகார்த்திகேயனின் எஸ் கே புரடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூரி , மலையாள நடிகை அன்னா பென், நடிப்பில் வினோத் ராஜ் இயக்கி இருக்கும் படம் கொட்டுக்காளி.
கொட்டுக்காளி யாருக்கும் அடங்காத பிடிவாதம் பிடித்த ஆள் என்று பொருள்.
இந்த வினோத்ராஜ் இதற்கு முன்பு இயக்கிய படம் கூழாங்கல். இந்த படத்தை நயன்தாரா கையில் எடுக்க, உரிய வெளிச்சம் பெற்று பல விருதுகளை வென்றது அந்தப் படம். இப்போது இவரது இரண்டாவது படம் சிவகார்த்திகேயன் மூலம்.
விடுதலை , கருடன் படங்களுக்குப் பிறகு சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் இது .
அன்னா பென் கும்பளாங்கி நைட்ஸ், ஹெலன் படங்களில் மட்டுமல்லாது கல்கி ஏ டி படத்தில் ஒரு பெண் போராளியாக நடித்து அசத்தியவர்

இப்போதே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்று விட்ட கொட்டுக்காளி, வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் சூரி, அன்னா பென், வினோத் ராஜ் ஆகியோர்
சூரி பேசும்போது, ” விடுதலை , கருடன் படங்களில் இருந்து மாறுபட்ட படம். இதில் நடித்த எல்லோருக்குமே இது புது அனுபவம். நம்ம பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவத்தில் நாமும் ஒரு பங்காக இருந்தால் எப்படி இருக்கும் . அப்படி ஓர் உணர்வை இந்தப் படம் தரும்.இதுவரை வராத கதை. வரவேண்டிய கதை. வினோத் ராஜ் இந்தக் கதையை சொன்ன உடன் , இதை விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன்.
குடும்பத்தோடு படம் பார்த்த சிவகார்த்திகேயன் அதிகாலை ஐந்து மணிக்கு போன் செய்து ‘உங்களைப் பார்த்தால் பயமாக இருக்கு. விடுதலை, கருடன் படங்களை விட இந்தப்படம் உங்களை அதிக உயரத்துக்குக் கொண்டு செல்லும் . என் குடும்பத்தில் எல்லோருக்கும் படம் பிடித்து இருக்கிறது . பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் வினோத் ராஜ் இப்படி ஒரு படம் பண்ணி விட்டாரே’ என்று பாராட்டினார்.

ஒரு காமெடி நடிகனாக இருந்து சீரியஸ் படங்களுக்கு வந்து இப்படி விருது பெறும் படங்களின் நாயகனாக இருப்பது மகிழ்வாக இருக்கிறது . சினிமாவில் நேர்மையாக பயணித்தால் வெல்லலாம் என்பதற்கு நானே ஆதாரம் .”என்றார்
படத்தில் அன்னா பென்னுக்கு படத்தில் வசனமே இல்லை. தனது கதாபாத்திரம் பற்றிக் கூறும் அவர் , ” வசனமே இல்லை என்றாலும் கதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது . படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தனித்துவமும் முக்கியத்துவமும் இருக்கிறது . பொதுவாக நான் கதை கேட்டால் ஒரு நாள் கழித்துதான் நான் நடிப்பேனா இல்லையா என்பதைச் சொல்வேன். ஆனால் இந்தக் கதையை வினோத் ராஜ் சொன்ன உடனேயே ஒத்துக் கொண்டேன்.
வசனம் இல்லை என்பது மட்டுமின்றி முக பாவனைகள் உடல் மொழிகளை எப்படி செய்வது என்பதில் இந்தப் படத்தில் எனக்கு ஒரு சவால் இருந்தது அது பிடித்து இருந்தது ” என்றார் .

“கூழாங்கல் , கொட்டுக்காளி என்று இந்தத் தலைமுறை பெரிதும் அறியாத பெயர்களையே வைப்பது ஏன்/” என்றேன் வினோத் ராஜிடம்
“அப்படித்தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் எல்லாம் இல்லை . கதைக்கு பொருத்தமாக இருப்பதால் வைக்கிறேன் ” என்றார்.
அப்பச் சரி .