
நேமிசந்த் ஜெபக் புரடக்ஷன் சார்பில் ஹிதேஷ் ஜெபக் தயாரிக்க, ஆர்யா — ஹன்சிகா இணையராக நடிக்க, (முன்தினம் பார்த்தேனே தடையறத் தாக்க போன்ற படங்களை இன்றைய தினமும் தடையின்றி பார்க்க வைக்கிற) இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும்…….
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். சதீஷ் குமார், இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன், ஒலிப்பதிவாளர் ஃபோர் ஃபிரேம்ஸ் உதய குமார், கலை இயக்குனர் மோகன மகேந்திரன் , படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த் ஆகியோரின் பங்களிப்பிலும் உருவாகிய மீகாமன் திரைப்படம்……
கலை நுட்பம் மற்றும் தொழில் நுட்ப ரீதியாக நல்ல பேர் வாங்கி இருப்பதோடு சிறப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது .
ரசிக்கிறமாதிரி ஒரு சீன் கூட படங்களுக்கு எல்லாம் சிலர் மூக்குக்குள் நாக்கு நுனியை விட்டுக் கொண்டு மூச்சுத் திணறத் திணற விமர்சனம் என்ற பெயரில் சொம்பு அடிப்பதற்கும் அப்பாற்பட்டு, நிஜமாகவே இந்தப் படத்தின் தொழில் நுட்ப சிறப்பை எல்லோரும்பாராட்டுகிறார்கள்.
விளைவு? படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
நிகழ்ச்சியில் எல்லோரும் கொண்டாடியது மகிழ் திருமேனியையும் ஆர்யாவையும் .
இசையமைப்பாளர் எஸ் தமன் பேசும்போது “இந்தப் படத்தில் பாடலுக்கு அதிகம் வேலை இல்லை என்பது எனக்கு கதை சொல்லும்போதே தெரிந்து விட்டது . ஆனால் பின்னணி இசைக்கு மிக அற்புதமான வாய்ப்பு கொடுத்து இருந்தார் இயக்குனர் மகிழ் திருமேனி . என் நண்பர் ஆர்யாவுக்கும் எனது நன்றி ” என்றார் .
மிகுந்த மகிழ்வோடும் நெகிழ்வோடும் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி “இந்த வெற்றிக்காக முதலில் ரசிகர்களுக்கும் அடுத்து ஊடகத்தினருக்கும் மூன்றாவதாக என் தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜெபக்குக்கும் நன்றி. ஆர்யா இந்தப் படம் வெளிவருவதற்கு மிக உதவியாக இருந்தார் . என்னை மட்டுமல்லாது என் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் வேலையும் இந்தப் படத்தில் பத்திரிக்கையாளர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி ” என்றார் .
அதையே ஒட்டி பேசி ஆரம்பித்த ஆர்யா “இந்தப் படத்தின் எடிட்டிங் பேட்டர்ன் மிக வித்தியாசமாக இருந்தது என்று எல்லோரும் பாராட்டினார்கள் . படப்பிடிப்பில் நடிக்கும்போது எனக்கு நடிக்கிற மாதிரியே இல்ல. நான் கூட டைரக்டர் கிட்ட ‘நான் ஒண்ணுமே பண்ணாத மாதிரியே இருக்கே …’ன்னு சொன்னேன் . ஆனா அவர் ‘இது போதும் . நீங்க சிம்பிளாவே பண்ணுங்க’ன்னு சொன்னார். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருந்ததால அப்படியே பண்ணினேன் . படத்துல பாக்கும்போதுதான் அந்த கேரக்டருக்கு அது எவ்வளவு பொருத்தமா சூப்பரா இருக்குன்னு புரிஞ்சது . ” என்றவர் …
தொடர்ந்து ” எங்க படத்தோட கதாநாயகி ஹன்சிகா . ஆனா சஞ்சனா சிங் ஒரு நல்ல கேரக்டர் பண்ணினாங்க . படம் சம்மந்தப்பட்ட எந்த விழாவுக்கும் ஹன்சிகா வரல . ஆனா சஞ்சனா சிங் வந்தாங்க . இதோ இந்த நிகழ்ச்சி வரை வந்து இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப நன்றி ” கூறி…
சஞ்சனா சிங்கை வாயெல்லாம் பல்லாக்கினார் .
பிரியாணி பிளேட் டேபிள் மாறுமோ ?