கன்யாகுமரியை நெருங்கும்போது ஆரல்வாய் மொழி என்ற ஊரில் , திருட்டுக் கல்யாணம் செய்துகொள்ள ஓடும் ஒரு ஜோடி தவற விடும் பையை அகஸ்மாத்தாக எடுத்துக் கொடுக்கிறான் .
அதை வைத்து அவர்கள்தான் காதல் ஜோடியை ஊரை விட்டு அனுப்பி விட்டார்கள் என்று எண்ணும் அந்த பெண்ணின் ஜமீன்தார் குடும்பம் அந்த இளைஞனையும் அவனது நண்பனையும் கட்டி வைத்து உரிக்கிறது .
நல்லதொரு பெண்ணை காதலித்து மணக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அந்த இளைஞனுக்கு அந்த சூழ்நிலையிலும் அங்கு இருக்கும் கயல் என்ற வேலைக்காரப் பெண் மீது காதல் வருகிறது . அதை எல்லோரும் கேட்கும்படியாக சொல்கிறான் .
இந்நிலையில்ஓடிப் போன பெண் திரும்ப வர, இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் . எனினும் ஜாதி வேற்றுமை காரணமாக நண்பர்கள் விரட்டப்பட , அங்கிருந்து வந்து விடுகின்றனர்.
ஆனால் அங்கே காதல் பற்றிக் கொண்ட கயல் இவர்களை தேடி கன்யாகுமரி வர, இருவரும் சந்திக்க முயல, அப்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி வர, அவர்கள் சேர்ந்த கதைதான் இந்தக் கயல் .
தமிழகத்தில் நிஜமான சுனாமி வந்த அன்று படத்தின் கிளைமாக்ஸ் நிகழ்வது போல அமைக்கப்பட்டிருக்கும் படம் இது .
முதல் பதினைந்து நிமிடம் வியக்க வைக்கிறது படம் . குறிப்பாக இயக்குனர் பிரபு சாலமனின் சிந்தனைகளும் அவற்றை வெளிப்படுத்தும் வசனங்களும் அருமை . ஆனால் அதற்குப் பிறகு அலைகளுக்குள் பாதங்களுக்கு கீழே நழுவும் மணல் போல படம் நழுவுகிறது .
பிரபு சாலமனின் இயக்க திறமையால் காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன . அனால் அந்தக் கதைப் போக்கிலும் காட்சி சொல்லும் விஷயங்களில் அழுத்தமோ சிறப்போ இல்லை . விளைவு ? கன்யாகுமரி கடலில் காகிதக் கப்பல் விட்ட கதையாகப் போய்விட்டது படம் .
நாயகன் காதலை சொன்னான் என்பதற்காகவும் அதை மற்றவர்கள் சிலாகிக்கிறார்கள் என்பதற்காகவும் கயலுக்கு காதல் வருவது என்பது, அரைவேக்காடு மீன் குழம்பு மாதிரி உறுத்துகிறது .
தவிர கயலின் உருவம் மற்றும் உடையில் இருக்கும் சிறுமி தோற்றம் காதல் உணர்ச்சியை தரவில்லை. தலைப் பிரட்டையை மீன் என்று சொல்லி கூறு கட்டி விற்பது போல ஒரு பிரம்மை .
நாயகன் சந்திரன் நடிப்பு நன்றாக இருக்கிறது . ஆனந்தியும் நடிப்பில் பரவாயில்லை.
தேவராஜ் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் . வசனங்களை பேசும் விதம் நிதானமாக உணர்ந்து நடிப்பது என்று அசத்தி இருக்கிறார் தேவராஜ் .
ஜமீன்தாராக வரும் ஃபெரைராவும் அருமை
இமானின் இசையில் பல பழைய பாடல்களின் சரணங்களின் மெட்டுகள் பின்னணி இசையாக ஆங்காங்கே உருமாறி வருகிறாது .
கிராஃபிக்ஸ் புண்ணியத்தில் சுனாமி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன . அதனால் கிளைமாக்ஸ் கொஞ்சம் ஈர்க்கிறது.
நிஜ சுனாமியின் போது கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலை மூழ்கவில்லை என்பது உண்மை நிகழ்வு . ஆனால் இந்தப் படத்தில் அதை மூழ்கடித்துக் காட்டுகிறார் பிரபு சாலமன் . திருவள்ளுவர சிலை மீது பிரபு சாலமனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை . ( Oh god ! Forgive him . he did not know what he did )
கயல்…….. தொட்டி மீன் .