அயலி @ விமர்சனம்

எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ் பட நிறுவனம் சார்பில் எஸ் . குஸ்மாவதி தயாரிக்க, அபி நக்ஷத்ரா, அனு மோள், முத்துப் பாண்டி, லவ்லின், அருவி மதன், சிங்கம் புலி, காயத்ரி , லிங்கேஸ் நடிப்பில் முத்துக் குமார் கதை எழுதி இயக்கி zee 5  தளத்தில் ஜனவரி 26 முதல் காணக் கிடைக்கும் எட்டு பகுதிகள் கொண்ட வலைத் தொடர் அயலி . 

அயலி என்பது வெளியே இருந்து வந்தவள் என்ற பொருள் படும் ஒரு சாமியின் பெயர் . 
 
பெண் என்பவள் ஆணுக்கான போகப் பொருள் மற்றும்  சேவகம் செய்யும் அடிமை என்ற ஆணாதிக்க புத்தியின் வெளிப்பாடாக,  ஒரு பெண் பூப்படைந்த சில மாதத்தில் அவளை  வீட்டு வேலை செய்யும் இயந்திரமாக மாற்றி படிப்பை நிறுத்தி கல்யாணம் செய்து கொடுத்து உடனே பிள்ளைகளுக்குத் தாயாக்கி முடக்கிப் போடும் கொடுமையை கலாச்சாரம் என்ற பெயரில் கட்டிக் காத்து வரும் ஒரு ஊரில் அதை உடைத்து படிக்கப் போன ஒரு  பெண்ணின் போராட்டத்தை 1990 ஆண்டு காலகட்டத்தில் சொல்லும் படமே இது 
 
இருபாலர் பள்ளியாக இருந்தாலும் எட்டாம் வகுப்புக்கு மேல் பெண்கள் யாருமே இல்லாத பள்ளிக்கூடத்தைக் கொண்ட ஒரு ஊர் அது. காரணம் அதற்குள் பெண்கள்  வயதுக்கு வந்து விடுவார்கள் . 
 
அப்படிப்பட்ட ஊரில் இரு மாணவிகள் படிக்க ஆசைப்பட அவர்களில் ஒரு மாணவியின்  (லவ்லின்) லட்சியம் தகர்க்கப்படுகிறது . அவள் பூப்படைந்த உடன் பள்ளி நிறுத்தப்பட்டு , ஒரு குடிகாரனுக்கு மனைவியாகி, இரண்டு குழந்தைகளுக்குத்  தாயாகி விதவையாகிறாள் . 
 
 பாசமுள்ள  அதே நேரம் கோபக்கார வசதியான அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளையான மகள் என்றாலும்  ‘நாம் பூப்படைந்த உடன் நமக்கும் இதே நிலைதான்’ என்பதை உணர்ந்த இன்னொரு சிறுமி ( அபி நக்ஷத்ரா) அந்த சிறிய கிராமத்தில் தான் பெரிய மனுஷி ஆனதை, தனது தலைமை ஆசிரியை தவிர   யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாள் .
 
 நடந்தது என்ன ?அவளது கல்விக் கணக்கு என்ன ஆனது என்பதை  வீணை மைந்தன் , முத்துகுமார் இணைந்து எழுதிய அட்டகாசமான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்கள் .  வசனத்தில் இவர்களோடு ஆனந்த் இணைத்திருக்கிறார் கொஞ்சம் கூட போரடிக்காமல்,  அடுத்தடுத்த திருப்பங்களோடு அதே நேரம் கதைக் களத்தில் இருந்து விலகாமல் நோக்கம் சிதறாமல் எழுதப்பட்ட திரைக்கதை. 
 
பெண் பருவத்துக்கு வருவது என்பது எல்லா உயிரிகளுக்கும் உள்ள இயல்பு. ஆனால் ஆறறிவு கொண்ட மனித சமூகத்தில் அது எப்படி பெண்களை எல்லா வகையிலும் அடிமையாய் அனாதையாய் ஆக்குகிறது என்பதை எண்ணி, பார்ப்பவர்கள்  திகைக்கும்படி படத்தை  இயக்கி இருக்கிறார் முத்துகுமார்.  அற்புதம் 
 
நடிக நடிகையர் தேர்வு , அவர்களிடம் வேலை வாங்கிய விதம், சிறப்பான படமாக்கல் என்று முத்துக்குமாரை கொண்டாட பல விஷயங்கள் உண்டு . 
 
ஒரு தாய்க்கும் மகளுக்குமான நட்பை உரிமையை  அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் . பிரச்னைகளை அழுத்தமாக விளக்கி இருக்கிறார்கள் . தீர்வுகளை பம்மாத்து இல்லாமல் சிரத்தையோடு சொல்லி இருக்கிறார்கள். 
 
நாயகியாக அபி நக்ஷ்தரா . எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி அற்புதமாக நடித்துள்ளார் . லவ்லின் ஒகே . 
 
நாயகியின் அம்மாவாக அனு மோள் . பேச்சில் மலையாள வாசனை கொஞ்சம் அன்னியப்படுத்தினாலும் நுண்ணிய உணர்வுகளைக் கூட அழகாகக் காட்டும் சிறந்த நடிப்பு . 
 
லவ்லின் அம்மாவாக வரும் காயத்ரி பண்பட்ட நடிப்பில் ஜொலிக்கிறார் . அப்பாவாக வரும் மதன் சிறப்பு . 
 
காமெடியும் வில்லத்தனமும் கலந்த பாத்திரத்தில் விளையாடி இருக்கிறார் தர்மராஜன் 
 
சிறு கதாபாத்திரம் என்றாலும் வில்லன் நடிப்பில் ஜொலிக்கிறார் முத்துப் பாண்டி. 
 
லக்ஷ்மி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள் ஆகியோரின் சிறப்பு. 
 
அற்புதங்கள் செய்திருக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு . நிஜக் களத்தில் நம்மையும் இறக்கி விடும் ஒளிப்பதிவு . 
 
பெண்  இசை அமைப்பளர் ரேவாவின் இசை காட்சிகளின் உணர்வுகளுக்கு தரக் கூட்டம் செய்கிறது. 
 
படத்தில்  ஒரு குறை வரலாறு  தெரியாமல் எழுதப்பட்ட வசனங்கள் ..  ரெண்டயிராம் மூவாயிரம் வருஷம்  பாராம்பரியம் கொண்டது  தமிழ்ச் சமுதாயம் என்பதை வசனத்தால் அடிக்கடி கிண்டல் செய்கிறார்கள் . தப்பு. 
 
ரெண்டாயிரம் வரும் முன்பு தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்தது . பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது . சம உரிமை இருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்கள்  தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றார்கள் . ஒரு பெண் அதுவும் கிழவியால் இரண்டு அரசர்களுக்குள் நடக்க இருந்த போரை நிறுத்த முடிந்தது . ஒரு அரசனின் இரண்டு மகள்களைக் காப்பாற்ற முடிந்தது .  சோழ நாட்டுப் பெண்ணால் பாண்டிய நாட்டுக்குள் நுழைந்து அரசனை  கேள்வி கேட்டு கலங்கடித்து மரணம் அடைய வைக்க முடிந்தது. மதுரையை எரிக்க முடிந்தது . ‘ஒரு பெண்ணால் கணவனுக்கு நீ விரைவில் நாடு திரும்பாவிட்டால் நான் இன்னொரு  ஆணைத் திருமணம் செய்து கொள்வேன்’ என்று கவிதை மூலம்  தகவல் அனுப்ப முடிந்தது . 
 
நாம் அப்படியே இருந்து இருந்தால்  அயலி எடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது . 
 
அயலியில் நடக்கும் கொடுமை எல்லாம் பின்னாளில் இங்கு ஆரியம் அதிகாரத்துக்கு வந்த போது ஆண்கள் மனதில் புகுத்தப்பட்ட விஷம் . இந்த வரலாற்றுப் புரிதல் படைப்பாளிகளுக்கு வேண்டும் . 
 
மற்றபடி அயலி அற்புதமான படைப்பு . அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. 
 
இப்படி ஒரு படைப்பை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் குஸ்மாவதி பாராட்டுக்குரியவர் .   இவரும் இந்தப் படைப்பும்  இன்னும் நிறைய பெண் தயாரிப்பாளர்கள் வந்தால் இன்னும் நல்ல படைப்புகள் வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது . 
 
அயலி … நம்மவள் 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *