நீதா பின்டோ, பிரியா வேணு தயாரிப்பில் உன்னி முகுந்தன், தேவானந்தா, ஸ்ரீபத், சைஜூ குரூப் நடிப்பில், அபிலாஷ் பிள்ளை எழுத்தில் விஷ்ணு சசி சங்கரின் எடிட்டின் மற்றும் இயக்கத்தில் வந்து , தமிழில் பிரபாகரின் வசனத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் படம் .
சபரிமலையில் உள்ள பெண் தெய்வமான மாளிகப்புரத்தின் வம்சத்தில் வந்த மலையாளச் சிறுமி ஒருத்தி (தேவானந்தா) ஐயப்பனின் மேல் பக்தி பெருவழியில் நடந்து அவனைப் பார்க்க ஆசைப்படுகிறாள் . எட்டு வயதுக்கு மேல் நாற்பத்தி எட்டு வயது வரை போக முடியாது என்பதால் இதுதான் அவளுக்கு சிறுமியாக சபரிமலைக்குப் போவதற்கு வாய்ப்புள்ள கடைசி வருடம் . எனவே மாலை போடுகிறாள்
இந்த நிலையில் கேரளாவில் வாழும் தமிழன் ஒருவர் கந்து வட்டி கொடுத்து திருப்பிக் கேட்ட வகையில் சிறுமியின் தகப்பனை (சிசு குரூப்) நடுரோட்டில் அடித்து அவமானப்படுத்துகிறானாம் . அதை அங்குள்ள மலையாளிகள் எல்லாம் சும்மா கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களாம் . இது கேரளாவில் நடக்குதாம்..
தவிர அதே கேரளாவில் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை செய்வானாம் இன்னொரு தமிழன் (சம்பத் ராம்) அது மட்டுமின்றி அங்கு உள்ள சிறுமிகளை கடத்தி மதுரையில் இருக்கும் இன்னொரு தமிழனுக்கு விற்கிறானாம்.
அவமானப்பட்டதால் சிறுமியின் அப்பன் செத்துப் போக, சிறுமி தன் பள்ளித் தோழன் ஒருவனோடு பெருவழிப் பாதையில் சபரிமலை செல்கிறாளாம். அவளை கடத்த சிறுமி விற்பனை செய்பவன் முயல, அவள் கனவில் ஐயப்பன் உருவில் கண்ட நபர் (உன்னி முகுந்தன்) அவளை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படம் . அவர் உண்மையில் ஒரு போலீஸ்காரர் .
சிறுமி தேவானந்தா, உன்னி முகுந்தன், சபரிமலையில் பணியாற்றும் இஸ்லாமிய போலீசாக வரும் மனோஜ் கே ஜெயன் சிறப்பாக நடித்துள்ளனர் .
ரஞ்சின் ராஜ் இசை, விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பு .
மாளிகப்புரம் அம்மன் என்பதே மதுரை மீனாட்சி அம்மனின் மறு உருவாக்கம் என்பதை காட்சிகளோடு விலாவாரியாகப் படத்தில் சொல்கிறார்கள் . ஆனால் ஐயப்பன் பாண்டியர்கள் உருவாக்கிய பந்தள வம்சத்தின் அரசன் என்பதை மட்டும் போகிற போக்கில் பின்னணியில் ஒரே வார்த்தையில் ”கேட்டா கேட்டுக்கோ கேக்காட்டி போய்க்கோ” என்ற ரீதியில் சொல்கிறார்கள் . அந்த இன்டலக்சுவல் அரகன்ஸ் கூட ஒகே
ஆனால் இது அதையும் மீறி தமிழர்களை வேண்டுமென்றே அநியாயமாக தவறாக சித்தரிக்க வந்திருக்கும் படம் இது . நல்லவன் கெட்டவன் எல்லா மொழி இனத்திலும் உண்டு . அது நமக்கு பிரச்னை இல்லை. ஆனால் இந்தப் படத்தில் இந்த சூழலில் தமிழர்களை திட்டமிட்டு மோசமாக சித்தரிப்பது எவ்வளவு அநியாயம் அக்கிரமம் அராஜகம் மற்றும் அண்டப் புளுகு என்பதற்கான சில விசயங்களை பார்ப்போம் .
தமிழ் நாட்டுக்குள் ஒரு மலையாளி திராவிட , தேசிய , கம்யூனிச முகமூடிகள் மூலம் வந்து கந்து வட்டி கொடுத்து தமிழ்நாட்டில் நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒரு தமிழனை அடித்துக் கொல்ல முடியும். மேலே சொன்ன மூன்று கூட்டமும் அந்தக் கொலைகாரனைக் காப்பாற்ற முயலும் . ஆனால் கேரளாவில் ஒரு தமிழன் மலையாளியிடம் தான் நியாயமாக கொடுத்த காசை திருப்பிக் கேட்டால் கூட அந்த தமிழனைக் கொன்று விடுவார்கள். யாரும் நியாய அநியாயம் பார்க்க மாட்டார்கள் .
தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது மட்டுமல்ல…. பழனி தைப்பூசம் திருவிழா சமயத்தில் சிறுமிகளைக் கடத்திக் கொண்டு போய் தங்கள் கேரளா முதலாளிகள் மூலம் உலகம் எங்கும் விற்பனை செய்ய மலையாளிகள் திண்டுக்கல் மாவட்டம் முழுக்க அலைவது உண்டு . ஆனால் கேரளத்தில் அப்படி ஒரு வேலையை தமிழன் செய்தால் இன உணர்வுள்ள மலையாளிகள் கூண்டோடு கொளுத்தி விடுவார்கள் . எனவே இந்தப் படத்தில் காட்டுவது தலை கீழ் பொய். அதுவும் சபரி மலையில் தமிழன் அப்படி செய்கிறான் என்பது அய்யப்பன் என்ற கடவுளுக்கு சக்தி இருந்தால் அவனுக்கே பொறுக்காத அநியாயம் .
ஏனென்றால் சபரிமலையை அந்த அளவுக்கு பயபக்தியோடு வணங்குவதும் தூக்கிப் பிடிப்பதும் தமிழர்கள்தான் . தமிழர்கள் இல்லை என்றால் சபரிமலை இல்லை .
மலையாளிகளைப் பொறுத்தவரை சபரிமலை ஒரு சாதாரண கோவில் . ரெண்டு நாள் முன்பு வரை தண்ணி தம் அடித்து , தம் கட்டி மற்ற வேலைகளையும் செய்து விட்டு, காலையில் குளித்து விட்டு மாலையைப் போட்டுக் கொண்டு நேரே சபரிமலைக்கு போய் பதினெட்டாம் படி ஏறாமல் கேரள போலீஸ் இன பாசத்தோடு உதவ, பின் வழியாகப் போய் ஐயப்பனை இலகுவாக நிதானமாக தரிசித்து விட்டு அடுத்த நாள் காலையில் வேலையைப் பார்க்கப் போய்விடுவது மலையாளிகளின் பழக்கம் .
காரணம் ஐயப்பன் தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவன் என்பதால் அதற்கு மேல் அவர்கள் ஐயப்பனுக்கு மரியாதை தருவது இல்லை . அவர்களுக்கு குருவாயூர் என்றால்தான் சின்சியர் பக்தியே வரும் .
மூன்று தலைமுறைகள் முன்பு வரை மலையாளிகள் பழனி முருகனையே குல தெய்வமாக வணங்கிய நிலையில் , மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது , இனி மலையாளிகளின் காசு தமிழ் நாட்டுக்கு போவதா என்ற வெறுப்புணர்வால் , தமிழர்கள் உருவாக்கி கேரளாவுக்குள் சிக்கிய சபரிமலையை மலையளிகளான நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது மலையாளிகளுக்கு நன்றாகவே தெரியும் .
ஆனால் தமிழர்களுக்கு ஐயப்பன் அப்படி அல்ல .
நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து, கடன் வாங்கி ஐயப்ப பூஜை போட்டு அன்னதானம் செய்து , கஷ்டப்பட்டு பயணம் செய்து கேரள போலீஸ் மற்றும் அதிகாரிகளின் எரிச்சல் எதிர்ப்பில் நொந்து நைந்து, எருமேலியில் பேட்டை துள்ளி, வாவர் எனப்படும் பாபரை வணங்கி , காளைகட்டி கோவில் வணங்கி, கருங்குழி மாரியம்மனை கும்பிட்டு, அழுதா நதியில் முங்கி கல்லெடுத்துச் சென்று அழுதா மேட்டில் போட்டு இறங்கி பின்னர் கரிமலை ஏறி பகவதியை வணங்கி , வழுக்குப் பாறைகள் நிறைந்த கஷ்டமான கரிமலை இறக்கத்தில் இறங்கி, வலியானை வட்டத்தில் ‘ சாமி .. கஞ்சா வேணுமோ ?” என்று ரகசியமாக குரல் கொடுக்கும் மலையாளிகளுக்கு மயங்காமல் சிறியானை வட்டம் கடந்து , பம்பா நதியில் முங்கி, கன்னி மூல கணபதியை வணங்கி , நீலிமலை ஏறி , புலிக்கு மாவு உருண்டை வீசி , வெடி வழிபாடு செய்து, சரங்குத்தியில் சரம் குத்தி , சபரி பீடத்தை வணங்கி , சந்நிதானத்தை அடைந்து பாலத்தில் ஏறி இறங்கும்போது , மலையாள போலீஸ் சட்டென்று இனத் துவேஷத்தோடு ஐயப்பனை பார்க்க விடாமல் இழுத்துத் தள்ளும் அவலத்துக்கு ஆளாகக் கூடாது என்று அதற்கும் ஐயப்பனையே வணங்கி, அதையும் மீறி போலீசிடம் சிக்கி அவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு வெறியோடு இழுத்து வெளியே தள்ளும்போது, கால்கள் உடைந்தாலும் பரவாயில்லை இருமுடி கீழே விழுந்து விடக் கூடாது என்று போராடி , இருமுடி ஈரமாகும் வரை அழுது , போலீஸ் காலில் விழுந்து கதறி , மீண்டும் பாலத்தில் ஏறி நெரிசலில் சிக்கி, ஒரு வழியாக கருவறையை அடைந்து, ‘மலையாளி அல்ல’ என்று தெரியும் நிலையில் நம்பூதிரிகள் தூக்கிப் போடும் சந்தணத்தை சிந்தாமல் சிதறாமல் கேட்ச் பிடித்து , நொடி நேர மட்டும் ஐயப்பனை பார்த்து விட்டு, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசை கேரளாவுக்கு கப்பம் கட்டிவிட்டு சன்னிதானத்திலோ, பம்பாவிலோ, புலி மேடு எனப்படும் புல் மேட்டிலோ நின்று ஜோதி பார்த்து விட்டு, அடித்துப் பிடித்து நெரிசலில் சிக்கி, கேரள வாகனங்கள் எல்லாம் போகும் வரை திட்டமிட்டு காத்திருக்க வைக்கும் கேரள போலீசின் ஓரவஞ்சனையில் உடைந்து நொறுங்கி, பஸ்ஸில் வேனில் லாரியில் நின்றபடி தூங்கியும் தூங்காமலும் உண்ணும் உண்ணாமலும் வீடு வந்து சேர்வதற்குள் ஒரு வழி ஆகி , அடித்துப் போட்டது போல அடுத்த மூன்று நாள் தூங்கி எழுந்து அடுத்த நாள் சகஜ நிலைக்கு வருவதுதான் தமிழனின் ஐயப்பன் வழிபாடு .
ஆனால் இந்தப் படத்தில் ஒரு மலையாளி , அதுவும் பெண் , அதிலும் சிறுமி யார் துணையும் இன்றி பெருவழிப்பாதை போகிறாளாம்.. மாலை போட்ட ஒரு தமிழன் அந்த சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மதுரையில் இருக்கும் முதலாளிக்கு விற்கப் பார்க்கிறானாம்.
நன்றி உணர்ச்சி காட்ட வேண்டிய விசயத்தில் நயவஞ்சகம் .