
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தான் ஒரு மாஸ் ஹீரோதான் என்று நிரூபித்து இருக்கிறார் விஜய். அவர் நடிப்பில் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டிநேசன் இயக்கத்தில் உருவான ‘ஜில்லா’ தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
அப்புறம் என்ன ?‘சக்சஸ் மீட் நடத்திக் கொண்டாடி விட்டார் தயாரிப்பாளர் ஆ.பி.சவுத்ரி. தெலுங்கு விநியோகஸ்தர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்.டி.நேசன், “தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான விஜய்யும், கேரளாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலும் இணைந்து நடித்து, தமிழகத்திலும், கேரளாவிலும் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஆந்திராவிலும் பெரிய ஓப்பனிங் மற்றும் வசூலை உருவாக்கியிருக்கிறது.
முதலில் 350 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலேயே மேலும் 50 தியேட்டர்கள் அதிகரித்தது . மிக முக்கியமாக பாகுபலி மிக சிறப்பாக ஓடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் ஜில்லா படத்திற்கும் இத்தனை திரையரங்குகள் ஒதுக்கி ரசிகர்களை மகிழ்வித்த தியேட்டர் அதிபர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி ” என்றார்.

தமிழிலிருந்து தெலுங்குக்கு செல்லும் டப்பிங் படங்கள் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் விஜய்யின் ஜில்லா ஒரு வாரத்தை தாண்டியும் ஓடும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆர்.டி.நேசன். அதற்கேற்ப, ஆந்திராவில் நேரடி திரைப்படத்திற்கு எந்தளவுக்கு விளம்பரம் செய்வார்களோ, அந்தளவுக்கு விளம்பரமும் ஜில்லாவுக்கு செய்யப்பட்டு வருகிறது.
ஜில்லா படப்பிடிப்பு நேரத்திலேயே விஜய்க்கு மேலும் ஒரு கதையை சொல்லி இருக்கும் ஆர்.டி.நேசனுக்கு, ஜில்லாவின் தெலுங்கு டப்பிங் படத்தின் வெற்றி ஆந்திராவிலும் முன்னணி ஹீரோக்களின் கதவை திறந்து விட்டிருக்கிறது .