ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைமென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்க, ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் , நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம்.
சென்னை வாழ் கோபக்கார அப்பா (அச்யுத் குமார்) பாசமான அம்மா (சீதா) ஆகியோரின் மகள் (பூமிகா ) ஊட்டியில் வசிக்கும் நீலகிரி கலெக்டரின் (ராவ் ரமேஷ்) மகனான பாரஸ்ட் ஆபீசருக்கு ( நட்டி நடராஜ்) மனைவியாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
அவளின் தம்பி (ஜெயம் ரவி) சிறுவயது முதலே தனது நீதி நியாய நேர்மை குணத்தால் பல பிரச்னைகளை சந்திப்பவன். ஆனால் வேலை வெட்டி பார்க்காதவன் ( அது எப்படி வேலைக்குப் போய் குடும்பத்துக்கு சம்பாதிப்பதுதான் நீதி நியாய நேர்மை என்று அவனுக்குப் புரியவில்லை ? டைரக்டருக்கே தெரியாது போல)
ஒரு நிலையில் அவனால் அப்பாவின் நிம்மதி போக , அக்கா அவனை ஊட்டிக்கு சில மாதம் தங்க வைக்க அழைத்துப் போகிறார்.எஸ் அதேதான் .. அங்கே அண்ணியின் டாக்டர் தங்கை (பிரியங்கா மோகன்) இவனுடன் டான்ஸ் ஆட ஃபுல் மேக்கப்பில் காத்திருக்கிறார்.
அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் நடக்கும் தவறுகள், கலெக்டரின் கடமை உணர்ச்சி இன்மை ஆகியவற்றிலும் இவன் நீதி நியாய நேர்மையை நிறுவ முயல ,
ஒரு நிலையில் அக்கா தன் கணவர் மாமனார் மேல் கோபப்பட்டு குழந்தைகளோடு புகுந்த வீட்டைப் பிரிய நேரிடுகிறது .
“இங்க என் நிம்மதியை கெடுத்தது போதாதுன்னு அங்க போய் அக்கா வாழ்க்கையையும் கெடுத்திட்டியே….” என்று கொந்தளிக்கும் கோபக்கார அப்பா, அவனிடம் ஓர் உண்ண்ண்ண்மையை சொல்கிறார் ( என்ன உண்மையா? வேணாம் தாங்க மாட்டீங்க. ஹீரோ தாங்கிக்கிட்டார். உங்களால முடியாது )
அதன் பிறகு அவன் அக்காவின் குடும்பத்தை அவன் சேர்த்து வைக்க முயல என்ன நடந்தது என்பதே படம் . (என்ன நடக்கும்னு நான் சொல்லாட்டி உங்களுக்குப் புரியாதாக்கும்.நீங்க ஒண்ணும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போல அவ்வளவு அப்பாவி எல்லாம் இல்லை)
உதயகீதம் படத்தில் ஜெயிலில் இருந்து வரும் கவுண்டமணி வெளிய வந்து தேங்காய் வாங்கப் போவார் . தேங்காய் விலை ஐந்து ரூபாய் என்று கடைக்காரர் சொல்ல, இவர் “ஏங்க … ஒரு ரூபா ரெண்டு ரூபாய்க்கு தேங்கா கிடையாதா?” என்பார்.
அதற்கு கடைக்காரர் , “ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்கு தேங்காயா..யோவ்…. நீ உள்ள இருந்துட்டு வர்றியா?”என்பார் .
இந்தப் படத்தின் இயக்குனர் ராஜேஷிடம் அதே கேள்வ்யைக் கேட்கலாம்
எண்பதுகளில் வந்த ரொம்ப சுமாரான படம் போல கதை , காட்சிகள் , வசனங்கள் , நடிப்பு … எல்லாம் . சொல்லப் போனால் அவை கூடப் பரவாயில்லை.
ஜெயம் ரவி வெக்கேஷன் போயிருக்கிறார் .
பிரியங்கா மோகன் எடை என்ன இருக்கும்? அறுபது கிலோ ? ஆனால் அவர் முகத்தில் போட்டு இருக்கும் மேக்கப் மட்டும் எண்பது கிலோ. பாவம் எப்படித்தான் படம் முழுக்க தூக்கிச் சுமந்தாரோ .
சும்மா முகத்தைக் கழுவிட்டு வந்து கேமரா முன்னால் நின்னாலே அவர் கொஞ்சம் அழகாத்தான் இருப்பார் ஆனால் தயாரிப்பாளர் செலவில் அந்தப் புள்ளையை கோரப்படுத்தி இருக்கிறார்கள். அது போதாது என்று அவர் தூர்தர்ஷன் நாடக பாணியில் எக்ஸ்பிரசன் கொடுக்கிறேன் என்று , முகத்தை வளைத்து நெளித்து சுளித்து , சுழித்து படுத்தி எடுக்கிறார்
சீதாவும் அப்படியே. உண்மையில் அவர் விவசாயம் பார்க்கும் வயலில் இருந்து அவர் போடும் ரீல்ஸ்களில் அவர் வியர்க்க விறுவிறுக்க பேசுவார். அதில் கூட அவர் அழகாகத்தான் இருக்கிறார் . ஆனால் இங்கே ஏதோ பேய்ப்பட ஷூட்டிங்கில் பேக்கப் சொன்ன உடனே ஓடி வந்து அப்படியே இந்தப் படத்தில் நடித்த மாதிரி இருக்கிறார்.
பூமிகா சாவ்லாவுக்குஅக்கான்னா என்னன்னு புரிஞ்ச மாதிரியே தெரியல. ஷாட்டில் அவர் என்னத்தையோ பேசி இருக்கிறார் , கொஞ்சம் முகம் அசைந்தாலும் மூக்கு கழன்று விழுந்து விடப் போகிறது என்ற பயமோ என்னவோ…. அப்படி அசையாமல் பேசுகிறார் . அவருக்கு டப்பிங் பேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாவம். பாவம் .. ரொம்பப் பாவம்.
சரண்யாவின் கேரக்டரும் நடிப்பும் சகிக்கல
படத்தில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் விவேகானந் சந்தோசம், நடன இயக்குனர் சாண்டி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் படத் தொகுப்பாளர் ஆஷிஷ் ஜோசப், கொஞ்சம் ஜெயம் ரவி … இவர்களைத் தவிர யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை
ஒரு டவுட் ….. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்தில் வசித்துக் கொண்டு பணத்தை மட்டும் ராக்கெட்டில் அனுப்புகிறார்களா … இல்ல… புரியல…