எஸ் எஸ் பி பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, சாத்விக், நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜ கோபால் நடிப்பில் முத்து எழுதி இயக்கும் படம்.
மூன்று பெண்கள் நவீன நவ நாகரிக இளம் பெண்கள் … நட்பு , காதல், செக்ஸ் ஜாலி எல்லாம் பெரிய விசயம் இல்லை என்ற மன நிலை உள்ளவர்கள் . ஆனால் அவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக வாழ்பவர்கள். பிள்ளைகளுக்காக தியாகம் செய்தவர்கள் .. பிள்ளைகளின் மேல் அக்கறை உள்ளவர்கள் . பெற்றோர்களை ஏமாற்றி ஜாலி, பார்ட்டி, டேட்டிங், செக்ஸ் என்று பாய அந்தப் பெண்கள் கிளம்ப, ஒரு நிலையில் பிள்ளைகளின் ‘எதற்கும் துணிந்த பயணம்’ பெற்றோருக்கு தெரிய வர , நடந்தது என்ன என்பதே படம்
உடம்பின் மேல் தோல் இருக்கும் போது, அதற்கு மேல் நூல் எதற்கு என்ற தோரணையில் ஆடைக் குறிப்பில் அசத்தும் பெண்கள் படம் முழுக்க வருகிறார்கள் . ‘அப்படிப்பட்ட’ வசனங்கள் திரைக்கும் வெளியே வந்து தெறித்து விழுகின்றன. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு வண்ணமயத்தை அள்ளிக் கொட்டுகிறது.
ஓட வேண்டிய தூரம் வரை அப்படி ஓடி விட்டு, இரண்டாம் பகுதியில் பெற்றோரின் அன்பு , தியாகம் என்று சென்டிமென்ட் பேசுகிறார்கள். இரண்டாம் பகுதிக் கதை இதுதான் எனும்போது, முதல் பாதியில் ஆபாசத்தின் அளவைக் குறைத்து இருக்கலாம் . இல்லை அதுதான் நோக்கம் என்றால் இரண்டாம் பகுதியில் இவ்வளவு நெஞ்சை நக்காமல் இருந்திருக்கலாம் .
எனவே இளைஞர்கள் பெற்றோர்கள் இரண்டு தரப்பும் முழுமையாக ஏற்க முடியாத படமாக வந்திருக்கிறது
என்றாலும் சொல்ல வரும் சேதியால் பாராட்டுக்குரிய படமாகிறது சிக்லெட்.