ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் இளங்கோ ராம் என்பவர் இயக்கி இருக்கும் படம் ‘பெருசு’.
வாத்தியார் வேலை பார்க்கும் மூத்த மகன் (சுனில்), எப்போதும் மது போதையில் இருக்கும் இளைய மகன் (வைபவ்), மூத்த மருமகள் (சாந்தினி தமிழரசன்) , இளைய மருமகள் (நிஹாரிகா) , மனைவி (நக்கலைட்ஸ் தனம்) , மைத்துனி (தீபா ) , தன் வயசுக்கும் குணத்துக்கும் ஏற்ற நண்பர்கள் (சுவாமிநாதன் அண்ட் கோ ), பெண் சபலம், அதற்கு என்று வயாகரா போன்ற மாத்திரைகள்… என்று வாழும் பெருசு ஒருவர் , வீட்டில் ஈசி சேரில் உட்கார்ந்த நிலையில் செத்துப் போகிறார்.
மாத்திரை போட்டதன் விளைவாக அவரது ஆண் உறுப்பு, விரைத்த நிலையில் நின்று விடுகிறது . , அப்படியே பிணத்தைக் கொண்டு போனால் அவமானம் என்பதால் ஆணுறுப்பை அடக்க உலக்கை கொண்டு உருட்டியும் அடங்கவில்லை(யாம்). செல்லோ டேப் பிளாஸ்திரி போட்டு ஒட்டியும் கூட (காமெடி காமெடி )
உதவிக்கு வரும் வாத்தியாரின் நண்பனான ஆட்டோ ஓட்டுனர் (ரெடின் கிங்ஸ்லி ) , குளிர்சாதனப் பெட்டி நிறுவன உரிமையாளர் ( கருணாகரன்) , தகவல் தெரிந்து வரும் உறவினர்கள் (கஜராஜ், முனீஷ்காந்த்), என்று உதவிக்கு வரும் நபர்கள் எல்லோரும் ஒரு நிலையில் உபத்திரவமாக ஆக, பிணவடக்கத்துக்கு குடும்பம் முயல என்ன நடந்தது என்பதே படம்.
இதே இயக்குனர் இளங்கோ ராம் சிங்களத்தில் எழுதி இயக்கி, பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட tentigo என்ற சிங்களப் படத்தின் ரீமேக் இது . அங்கும் இதே நாளில்தான் ரிலீஸ்
சிங்களப்படம் வெகு யதார்த்தமாக இருக்கும் என்று சொல்கிறர்கள் .
sweet heart போன்ற படங்களில் காதலையே காமக் கூடாரம் ஆக்கும் போது, கதையிலேயே வில்லங்கம் இருந்தாலும் காட்சி அமைப்பில் விரசம் இல்லாமல் படத்தை எடுத்து இருக்கிறார் இளங்கோ ராம் .
இதை சாக்காக வைத்தே இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்று சொல்வார்கள். யார் குடும்பத்தோடு என்று மட்டும் ஒரு கேள்வி கேட்டு விடுங்கள் .
காரணம், காட்சியில் விரசம் இல்லாத ‘நிறையை’ (ஆம் குறையை அல்ல) இரட்டை அர்த்த வசனங்களால் குழி தோண்டிப் புதைத்து இருக்கிறார்கள் . இருக்கட்டும் அடல்ட் காமெடி என்ற ஒரு ஜானரில் வந்திருக்கும் படம்தானே என்று யோசித்தால் மேக்கிங்கிலும் ரொம்ப சிறுசாக இருக்கிறது படம் .
‘கல்லை எடுத்து வீசுவோம்… விழுந்தால் மாங்கா . இல்லன்னா மறுபடியும் வீச கல்..’ என்ற ரீதியில் பாலாஜி எழுதி இருக்கும் வசனங்களில், கதைச் சூழல் காரணமாக காமெடியும் காம நெடியும் அறுவை வசனங்களும் மாறி மாறி வந்து போகின்றன. ஆங்காங்கே வாய் விட்டு சிரிக்கும் ஐந்தாறு இடங்கள் இருக்கின்றன
ஆனால் அவற்றின் வலுவையும் குறைக்கும் அளவுக்கு தான்தோன்றித்தனமான திரைக்கதை. . ஆணுறுப்பு விரைத்த நிலையில் ஒரு பிணம் வெளியே போவது அவமானம் என்றால் அந்த நபர் எப்படிப்பட்ட கேரக்டராக இருக்க வேண்டும் . ஆனால் அம்மணமாக பிணத்தை கொண்டு போனால் கூடத் தப்பில்லை என்னும் அளவுக்கு கேவலமாக கேரக்டராக இருக்கிறது அந்தப் பெருசு.
”அட அவரை விடுங்கள் … மற்ற குடும்ப உறுப்பினருக்கு அவமானம் அல்லவா/” என்றால் … குடிகார மகன் , செத்துப் போன அக்கா புருஷன் மீது பூடக உரிமை கொண்டாடும் மைத்துனி என்று…. குடும்பமும் மான அவமானத்துக்கு அஞ்சும் குடும்பமாக இல்லை. அப்புறம் என்ன அவமானம்?
காமெடிக்கு லாஜிக் தேவை இல்லைதான். ஆனால் சூழலில் லாஜிக் மாதிரி ஒரு மேஜிக் இருந்தால்தான் சிச்சுவேஷன் காமெடியில் சிக்சர் அடிக்க முடியும் . இல்லனா பேட்டை சுத்த சுத்த, பந்து காலடியில் சுழன்று ஸ்டம்ப்பை கிஸ் அடிக்கும்.
பெருசு மேல் சிறுவன் காட்டும் கோபம் , குளிர்சாதனப் பெட்டி ஓனர், ஆட்டோ ஓட்டுனர் , எல்லாம் சும்மா நேர நிரப்பலாக இருக்கிறதே ஒழிய , பலன் இல்லை.
பால சரவணன் முனீஷ்காந்த் காட்சிகள் மட்டும் கொஞ்ச்ச்ச்ச்ச்சம் பரவாயில்லை.
கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் சுனில்.
சிச்சுவேசன், குடிபோதை என்று நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர் என்றாலும் தேமே என்று இருக்கிறார் வைபவ். அவர் முகத்தைப் பார்த்தாலே தூக்கமா வருது .
பாம்பே புல் மீல்ஸ் அப்போதுதான் சாப்பிட்டு முடித்து விட்டு வந்து நிற்கும் ஆள் போல எல்லா காட்சிகளிலும் நிற்கிறார் சாந்தினி தமிழரசன் .
தல்லி தெலுங்கானா அரசாங்கப் பள்ளிக் கூடத்தில் பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில், புதிதாக வந்த வீடியோ கேமராவைப் பார்த்துப் பேசும்படி மிரட்டி வைக்கப்பட்ட அஞ்சாம் வகுப்பு அம்மாயி மாதிரி நிற்கிறார் பேசுகிறார் நிஹாரிகா .
தீபாவைக் குரல் நடிப்பு காப்பாற்றுகிறது . பக்கத்து வீட்டுப் பெண்ணாக வரும் ரமாவுக்கு அது கூட இல்லை என்பதால் முழு செயற்கை.
நக்கலலைட்ஸ் தனம் கோயம்புத்தூர் பாஷை பேசுகிறார் . தீபா மதுரை பாஷை பேசுகிறார் . நிஹாரிகா தெலுங்கு வாடையில் பேசுகிறார் . ரெடின் கிங்க்ஸ்லி சென்னை பாஷையில் பேசுகிறார். ஒரே குஷ்டமப்பா… !
சத்ய திலகத்தின் ஒளிப்பதிவு, சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை இரண்டும் படத்தை ஜாக்கி போட்டுத் தூக்க முயல்கின்றன. பாராட்டுகள் .
படம் சொல்லும் கதை சினிமாவுக்குத்தான் புதுசு . யதார்த்தத்துக்கு இல்லை.
முதுகுக்குப் பின்னால் முட்டுக் கொடுத்து தூக்கி , இடுப்பு அண்ட் கோ பகுதியை சற்றே இறக்கி வைத்து , ‘செங்குத்தை’ சுற்றி நாலு மாலை போட்டு , அதன் மேல் பூவைக் கொட்டி மேலே துணியைப் போட்டு விட்டால் போச்சு .
இதுக்கு எதுக்கு ஒரு படம் எடுக்கணும்?
வர்றவன் காலைத் தொட்டு தானே, கும்பிடப் போறான்? இல்ல…… ?
ஒருவேளை சிங்கள ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ .
பெருசு …. பொடுசு