டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், பூஜா காந்தி, சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில்
டைகர் வெங்கட் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி தயாரித்து இருப்பதோடு, கே டி நாயக் என்பவருடன் சேர்ந்து இயக்கியும் இருக்க, கன்னடத்தில் வந்த படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து ஒரு சில காட்சிகளை தமிழுக்காகச் சேர்த்து உருவாகி இருக்கும் படம் .
கர்நாடகாவில் ஹோஸ்கோட் தாலுக்காவில் உள்ள கிராமம் தண்டுபாளையம். கர்நாடகத்தில் வாழ்ந்து கன்னடம் பேசினாலும் இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் . பரம்பரை பரம்பரையாக கொலை கொள்ளை செய்பவர்கள். தங்களது வறுமையை அடுத்தவரிடம் பறிப்பதற்கான நியாயமாக எடுத்துக் கொண்டவர்கள். ஆனால் அதில் எந்த தர்மமும் இல்லாத கொடூரர்கள் . குழந்தைகள், முதியோர்களை கொடூரமாக கொலை செய்யவும், பெண்களை கூட்டுக் கற்பழிப்பு செய்து கொல்லவும் தயங்காதவர்கள் .
1996 முதல் 2001 வரை இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் நாற்பது பேர் அடங்கிய குழு கர்நாடகத்தில் செய்த கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள், கேட்டாலே எவ்வளவு தைரிய மனதையும் நடுங்க வைப்பவை .

தமிழ்நாடு திருச்சி ராம்ஜி நகர் கொள்ளைக்காரர்கள் புத்திசாலித்தனமாகக் கொள்ளை அடித்து , கொள்ளையடிக்கப்பட்டவர்களையே வாய் பிளக்க வைப்பதில் வல்லவர்கள் என்றால் இந்த தண்டுபாளையம் ஆட்களின் மிருகத்தனம் மிருகங்களையே நடுங்க வைக்கும் .
வேலை கேட்பது, குடிக்கத் தண்ணீர் கேட்பது , கைக் குழந்தையை அழ வைத்துப் பால் கேட்பது போன்று பரிதாபம் காட்டி… வீடுகளை அணுகி வீட்டில் உள்ளோரின் இரக்கத்தைச் சம்பாதித்து வீட்டுக்குள் நுழைந்து இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் வீட்டில் உள்ளோரை அடித்துக் கொன்று, பெண்களைக் கற்பழித்து விட்டு வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை நிதானமாக சாப்பிட்டு விட்டு, இருக்கும் நகை பணம் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துக் கொண்டு சற்றும் இரக்கமின்றிப் போகும் கொடிய மிருகங்கள் .
அந்தக் கூட்டத்தில் ஒரு சிலரை ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்ய , அவர்களை விடுவிக்க, நியாயம் இல்லாத கிரிமனல் லாயர் ஒருவரும் பெரிய கை ஒருவரும் பல லட்சங்கள் பணம் கேட்க,
அதற்காக மற்ற கொள்ளைக்காரர்கள் இன்னும் கொலை கொள்ளை கற்பழிப்பு என்று செயல்பட அவர்களை பிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு ( டைகர் வெங்கட்) என்ன ஆச்சு என்பதே இந்தப் படம்

உண்மைக்கு நெருக்கமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் . கொள்ளைக்காரர்களாக வரும் நடிகர்களின் தோற்றமும் கெட்டப்பும் நடிப்பும் அவர்களைப் பயன்படுத்திய விதமும் மிரள வைக்கிறது
முக்கியமாக அதில் வரும் கொடூரப் பெண்களாக சுமா ரங்கநாத், பூஜா காந்தி ஆகியோர் பிரம்மிக்க வைக்கிறார்கள் .
கொலை கற்பழிப்பு ஆகியவை கொடூரமாக எடுக்கப்பட்டு உள்ளன . ஹீரோ டைகர் வெங்கத சீரியசாக நடிப்பது சில இடங்களில் காமெடியாக உள்ளது .
தண்டுபாளையம் கூட்டத்தின் அடுத்த தலைமுறை ஆட்களாக சோனியா அகர்வாலும் வனிதா விஜயகுமாரும் கொடூரம் காட்டுகிறார்கள்
இதே கதை இதே காட்சிகளை இப்படி கொடூரமாக எடுக்காமல் இன்னும் கொஞ்சம் மென்மையாக எடுத்து அனைத்து தரப்பினரும் பார்க்கும்படி செய்து இருந்தால்,
முன் பின் தெரியாதவர்கள் உதவி என்று வீட்டு வாசலில் வந்து நின்றால், மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைக் கொடுக்கும் படமாக மாறி வணிக ரீதியாகப் பெரும் பலன் தரும் படமாக இருந்திருக்கும் .