
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்க,
சந்தானம் , ஷனாயா, கருணாஸ் , ஆனந்த ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க ,
லொள்ளு சபா புகழ் ராம் பாலா கதை எழுதி இயக்கி இருக்கும் படம் தில்லுக்கு துட்டு .
இந்த துட்டு லட்டா இல்லை வேஸ்ட்டா ? பார்க்கலாம் .
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் திண்டுக்கல் பிராந்தியம் மேகமலைப் பகுதியில் உள்ள சிவன் கொண்டை மலையில் , திபெத்திய அரசர் ஒருவருக்கு பங்களா கட்டிக் கொடுக்கிறது ஆங்கிலேய அரசு .
அங்கே ஒரு ‘சின்ன அரண்மனையை ‘ செட்டப் பண்ணுகிறார் மன்னர்.
அவர் அப்போது நீண்ட ‘விடுப்பில்’ திபெத் போய் விட, தன் கள்ளக் காதலனோடு குடும்பம் நடத்தி , குழந்தை ஒன்றையும் பெற்று எடுக்கிறது சின்ன அரண்மனை .
(அடேங்கப்பா .. என்னமா யோசிக்கிறாய்ங்க. நன்றி கார்டு எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜனுக்கு போடப் படுகிறது)
விஷயம் தெரிந்த மன்னர் , சின்ன அரண்மனையையும் அந்தக் குழந்தையையும் கொலை செய்து விட்டு திபெத் போய் புத்தி பேதலித்து செத்துப் போகிறார் .
அவரது வம்சமே பாதிக்கப்பட , இங்கே அலையும் அந்த சின்ன அரண்மனை மற்றும் அவளது மகன் ஆவிகளை பிடித்துப் போக ,
ஒரு சாமியார் குழு திபெத்தில் இருந்து வருகிறது . ஆவியை அடைக்கும் முயற்சியில் தலைமை சாமியார் நீண்ட மயக்கத்துக்கு போகிறார் .
இது இப்படி இருக்க , சென்னையில் குறைந்த வருவாய் பிரிவுப் பகுதியில் வாழும் முருக பக்தனான ஓர் இளைஞனுக்கும் (சந்தானம்),
சின்ன வயதில் அவனோடு ஒன்றாக படித்த சேட்டுப் பெண்ணுக்கும் (ஷனாயா) காதல் .
அதில் சேட்டுக்கு (சவுரவ் சுக்லா) உடன்பாடு இல்லை . எனவே மகளின் காதலனை போட்டுத்தள்ள திட்டமிட்டு அந்த வேலையை ஒரு ரவுடியிடம் (நான் கடவுள் ராஜேந்திரன்) கொடுக்கிறார் .
சிம்பிளாக திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்லி எதாவது காட்டு பங்களாவுக்கு கொண்டு சென்று குடும்பத்தோடு தீர்த்து விடலாம் என்று ரவுடி திட்டம் தருகிறான் .
மகளுக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதால் மலை வாசஸ்தலத்தில் சிம்பிள் திருமணம் சென்று சொல்கிறார் சேட்டு
திருமணத்துக்காக காதலன் , அவனது ஸ்டன்ட் மாஸ்டர் அப்பா ( ஆனந்தராஜ்) , அம்மா , அம்மாவின் தம்பி (கருணாஸ் ) ஆகியோர் போக,
பெண் வீட்டுத் தரப்பில் காதலி, சேட்டு, சேட்டின் மூத்த மகள் , மருமகன் (டி எம் கார்த்திக்) அவர்களது மகன் , மற்றும் ரவுடி அவனது அடியாட்கள் வர,
அவர்கள் தேர்ந்தெடுக்கும் பங்களா , சிவன் கொண்டை மலை — திபெத்திய மன்னர்– ‘சின்ன அரண்மனை மற்றும் அவளது மகன் ஆவிகள் இருக்கும் அதே பங்களா .
அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் தில்லுக்கு துட்டு .
படம் பார்த்து முடித்த உடன் ஒரு ஸ்வீட் பீடாவாவது போடணும் போல இருக்கும்
அந்த அளவுக்கு பேய், திரில் , திகில் , காதல் , கவர்ச்சி, பக்தி , கடவுள் , சண்டை , பாட்டு என்று சகலமும் உள்ளேன் அய்யா சொல்லும் முழு சாப்பாடாக இருக்கிறது படம் .
ஒரு இடைவெளிக்குப் பிறகு முருகக் கடவுளை வணங்கும் பாட்டு வருவது மனசுக்கு நிறைவு . காமெடியன் தோற்றத்தில் இருந்து ஹீரோ தோற்றத்துக்கு வந்திருக்கும் சந்தானம் , சமர்த்தாக ஆடிப் பாடுகிறார் .
அதே நேரம் தனது ஸ்டைல் காமெடி வசனங்களை படம் முழுக்கத் தூவி சிரிக்க வைக்கிறார் . சந்தானத்தின் கிண்டலில் இருந்து சாமிகளையும் சாமியார்களையும் தவிர படத்தில் வரும் எந்த மனிதரும் யாரும் தப்பவில்லை
அவை எல்லாம் சிரிப்பூ பூப்பதால் கலகலகலப்புக்கும் பஞ்சம் இல்லை .
ஆனால் அது மட்டும் இல்லாமல் , கட்டுமஸ்தான உடம்பு , சண்டைக் காட்சிகள் , ஹீரோயிசம் என்று அதற்கும் நிறைய ஏரியாக்களை திட்டமிட்டே கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம்பாலா (நண்பேன்டா !)
உமா ரியாஸ்கானின் ஒண்ணு விட்ட தங்கச்சி போல இருக்கும் ஷனாயா கவர்ச்சிக்கு என்றே நேர்ந்து விடப்பட்டு இருக்கிறார் .
படத்தில் நடித்து இருக்கும் எந்த ஒரு நடிகரையும் மிச்சம் வைக்காமல் எல்லாரையும் காமெடி பண்ண விடுகிறார்கள் .
குறிப்பாக , ஆனந்தராஜ் சீரியசாக பேசும்போது எல்லாம் சந்தானம் காமெடி கவுண்ட்டர் அடிக்க,,
ஆனந்தராஜ் மனைவி கதாபாத்திரத்திடம் “நான் சீரியஸா ஒரு வாக்கியம் பேச விடமாட்டானா உன் மகன் ?” என்று புலம்புவதும்…
காதலியை நம்ப வைப்பதற்காக காதலனுக்கு பேய் பயம் காட்டி கொல்ல முடிவு செய்யும் ரவுடி, பேய் உருவத்தில் ஆட்களை செட் பண்ணி பங்களா முழுக்க உலவவிட, அப்புறம் நிஜ பேய்கள் வருவதும்…
நடக்கிற ரணகளம் தெரியாமல் சேட்டின் பெரிய மருமகன் மசாலாபால் கேட்டு அலைவதும் , எக்ஸ்ட்ரா கல கல ஏரியாக்கள்.
மல்லிகா டீ ஸ்டால் காட்சிகள் செம திகில் !
அது சரி… பேய்ப்படம் என்றாலே பின்னால் முன்னால் மின்னல் போல உருவங்கள் பறப்பதும் , வாயைப் பிளந்து மிரட்டுவதும் , பாழடைந்த பங்களாக்களும்தானா ?
ஒரு ரன் தேவைப்படும்போது உள்ளே வந்து சிக்சர் அடித்து ஆட்டத்தை முடிப்பது போல , வேலைப் பயன்படுத்துவது நியாயமா?
இன்னும் அழுத்தமாக விளக்கமான விஸ்தாரமாக சொல்லி சூரிசம்ஹாரம் காட்டி இருந்தால், நேட்டிவிட்டி பக்தி இன்னும் எகிறி படத்துக்கு இன்னும் பலமாக இருந்து இருக்குமே .
திபெத்திய அரசாங்கம் வழக்குப் போடவா போகிறது ?
ஆனாலும் என்ன… தொடர்ந்து திடுக்கிடவும் சிரிக்கவும் வைக்கிறது படம் .
தில்லுக்கு துட்டு … திகில் — நகைச்சுவைக் கூட்டு