விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா, ஆர்யன் ரமேஷ் , விஷ்ணு விஷால் ஆகியோர் தயாரிக்க, விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் , ரைசா வில்சன், ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடிப்பில் மனு ஆனந்த் எழுதி இயக்கி இருக்கும் வித்தியாசமான திரைக்கதை அட்டகாசமான மேக்கிங் அமைந்த படம் .
இஸ்லாமியர்கள் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு தீவிரவதியாகப் பார்க்கும் தவறை எதிர்த்து வெற்றி பெற்ற மாநாடு படத்தை அடுத்து அதே நோக்கத்தில், வந்திருக்கும் படம் .
கெமிக்கல் எஞ்சினியரிங் படிப்பில் கோல்டு மெடல் வாங்கியும் சரியான வேலை கிடைக்காத காரணத்தால் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் மார்கெட்டிங் வேலை பார்க்கிற – பெண் போலீஸ் இன்ஸ்பெகடர் ஒருவரின் மகனான இர்பான் என்ற இளைஞனை ( விஷ்ணுவிஷால்) , பல கொடூர குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான அபூபக்கர் அலி என்ற சர்வதேச தீவிரவாதி என்று நினைத்து தூக்கிக் கொண்டு வந்து பிரித்து மேய்கிறது தேசிய புலனாய்வு முகமை. முகமையின் பல சந்தேகங்களில் முக்கியமான ஒன்று அவன் ஒரு முஸ்லிம் குறிப்பாக மதப்பற்றுள்ள முஸ்லிம் என்பதுதான்
அதனால் அவனது அம்மா இறக்கிறார் . அப்புறம் என்ன நடக்கிறது என்ற ரீதியில் ஒரு கதை சொல்லி வந்து கடைசியில் மாத்தி யோசி பாணியில் அட என்று ஆச்சரியமும் பின் நெகிழ்வும் அடையும்படி ஒரு கதை சொல்லி முடிக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த். டைட்டிலிலேயே துவங்குகிறது அட்டகாசமான மேக்கிங் . ஒரு அப்பாவி குற்றவாளியாகப்படும் கதையை உண்மைக்கு மிக நெருக்கமான காட்சிகளோடு எழுதி படமாக்கி அசத்துகிறார் இயக்குனர்
மிக அட்டகாசமாக நடித்தும் சண்டைக் காட்சிகளில் பிரம்மாதப்படுத்தியும் , தோற்றப் பொலிவிலும் கவர்கிறார் விஷ்ணு விஷால். ஆனால் தான் ஒரு ஆக்ஷன் ஹீரோ மட்டுமல்ல, படத்தின் தயாரிப்பாளர் என்ற நிலையில் இருந்தும் கூட மற்ற கதாபாத்திரங்களுக்கு நிறைய காட்சிகள் கொடுக்க சம்மதித்து இருக்கிறாரே .. அங்கே மேலும் பெரிய ஹீரோவாக அவாதாரம் எடுக்கிறார் விஷ்ணு சபாஷ் .
தேசிய புலனாய்வு முகமையின் உயர் அதிகாரியாக கெத்துக் காட்டுகிறார் கவுதம் மேனன் . படத்துக்குப் படம் மியூட் போடும்படியாக ஒரு கெட்ட வார்த்தை பேசுவது இதிலும் தொடர்கிறது மஞ்சிமா, ரைசா வில்சன், ரெபா மோனிக்கா ஜான் ., அமான், மாலா பார்வதி, கவுரவ் நாராயணன் , பிரவீன் குமார், ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளார்
ஆனால் பிரவீன் குமார் உயிர்த்தெழுதல் என்பதை கடைசிவரை உயர்த்தெழுதல் என்றே சொல்கிறார்
அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு எலைட் லுக் தருகிறது
அஸ்வத்தின் இசையும் சுரேன் மற்றும் அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பும் மிகப் பிரமாதம் .
சித்திரவதை, மற்றும் விசாரணைக் காட்சிகளில் . கலை இயக்குனர் இந்துலால் கவிக் கவனிக்க வைக்கிறார் பிரசன்னா ஜி கே யின் படத் தொகுப்பு சரியான வேகத்தில் படத்தை நகர வைக்கிறது
அங்கீகாரம் கிடைக்காது என்பது தெரிந்தும் நாட்டுக்காகத் தியாகம் செய்யும் நபர்களை நினைவு படுத்திய வகையில் மனம் கனக்க வைக்கிறது படம்
மொத்தத்தில் F.I.R…. ரசிகர்களை தரத்தால் அரஸ்ட் செய்யும்