டிரைபல் ஆர்ட்ஸ் சார்பில் காக்காமுட்டை மணிகண்டன் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி உடை அலங்காரம் மற்றும் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்க, அமரர் நல்லாண்டி , விஜய் சேதுபதி, யோகிபாபு, மற்றும் பாலர் நடித்து வந்திருக்கும் அற்புதமான படம் கடைசி விவசாயி
அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பழினி மலை தெரியும் பகுதியில் உள்ள – முருக வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட ஒரு கிராமத்தில், மற்ற எல்லா விவசாயிகளும் வயலை மேடு காடாய் போட்டிருக்க, தீவிரமாக உழைத்து விவசாயம் செய்து நெல் பயிர் வேளாண்மை செய்திருக்கும், எண்பது வயதைக் கடந்த – விவசாயமும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வும் தவிர வேறு எதையும் அறியாத விவசாயி மாயாண்டி ( அமரர் நல்லாண்டி)
மயில்கள் அதிகம் இருக்கும் அந்தப் பகுதியில் இரண்டு மயில்கள் மாயாண்டியின் நிலத்தில் இறந்து கிடக்க, மனம் கலங்கி அவற்றை அடக்கம் செய்கிறார் மாயாண்டி . ஆனால் அவர் மயிலைக் கொன்றதாக கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி ஜெயிலில் அடைக்கிறது காவல் துறை . அதனால் அவரது நஞ்சை வயல் பாதிக்கப்பட அதன் விளைவே இந்தப் படம்
– என்று சட்டென்று முடித்து விட முடியாத அற்புதப்படம் கடைசி விவசாயி .
சினிமாவாக எடுக்காமல் ஒரு நாமும் ஒருவராக உள்ளே நின்று உணரும் அளவுக்கு கலைப்படைப்பாக எடுத்துள்ளார் மணிகண்டன் . குறிப்பாக படம் சொல்லும் உண்மையான தமிழர் ஆன்மீக அடையாளங்கள் போற்றுதலுக்கு உரியவை .
வித்தியாசமான கதை- ஆரவாரம் இல்லாத ஆழமான திரைக்கதை – எளிய பொருள் பொதிந்த வசனங்கள் உயிரூட்டும் ஒளிப்பதிவு மேட்டிமைத்தன்மை மிகுந்த இயக்கம் என்று சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் மணிகண்டன்.
சினிமா பற்றி அதிகம் அறியாத ஒரு பெரியவரை அவர் பாணியிலேயே பேச விட்டு – அதை நேரடி ஒலிப்பதிவு செய்து யதார்த்தத்தின் உயரம் தொடுகிறார்.
இக்கால சித்தன் போன்ற ஒரு முருக பக்தனும் அதீத உணர்வுக் கொந்தளிப்பு செயல்பாடு கொண்டவனுமான ராமையா என்ற பாத்திரத்தில் கவுரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி,விவசாய நிலத்தை விற்று யானை வாங்கி ஆசீர்வாதம் செய்ய வைப்பதன் மூலம் சம்பாதிக்கும் நபராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் யோகிபாபு
இந்த இருவர் தவிர மற்ற எல்லோருமே புது முகங்கள் . ஆனால் அவர்களும் அற்புதமாக நடித்துள்ளனர் இளம் மாஜிஸ்ட்ரேட் மங்கையர்க்கரசியாக வரும் ரைச்சல் ரெபக்கா தனித்துத் தெரிகிறார் .
சந்தோஷ் நாராயணன் – ரிச்சர்டு ஹார்வே அமைத்திருக்கும் இசை , அஜித் குமாரின் படத் தொகுப்பு, ராஜா கிருஷ்ணனின் ஆடியோகிராபி, அஜயா ஆதத் மற்றும் ராதாகிருஷ்ணனின் ஒலி அமைப்பு ஆகியவை அற்புதம் புரிந்துள்ளன.
மாயாண்டி குற்றமற்றவர் என்று தெரிந்த நிலையில் அவரை உடனே விடுவிக்க வாய்ப்பு இருந்தும் விடுவிக்காமல் விட்டு விட்ட பெண் மாஜிஸ்ட்ரேட் கடைசியில் அநியாயத்துக்கு உருகுவது மட்டும் முரண் .
மற்றபடி கதையில் கருத்தில் திரை மொழியில் படமாக்கலில் வாழ்வியலை வெளிப்படுத்திய வகையில் சிகரம் தொடுகிறது படம்
கடைசி விவசாயி …. முதல்தரமான படம் .
மகுடம் சூடும் கலைஞர்
*********************************
மணிகண்டன்