ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் .பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், கிட்டு, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா, செல்வராகவன் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும்.
சென்னை திருவல்லிக்கேணியில் கட்டுப்பெட்டியான ஓர் உருது முஸ்லீம் குடும்பத்தில்… மூன்று பிள்ளைகள், கணவன் , மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோரோடு வாழ்கிற – ஐந்து வேளை தொழுகை மட்டுமல்லாது – தூக்கம் தொலைக்கும் பின்னிரவு ஆறாவது வேளைத் தொழுகையான தகஜத் தொழுகையும் செய்யும் வழக்கம் உள்ள – அல்லாவுக்கு கட்டுப்பட்ட பெண் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்) .
(B)பிராண்ட் மோகம் பெருகி விட்ட நிலையில் கணவனும் மாமனாரும் நடத்தி வருகிற – செருப்புத் தைத்து விற்கும்- கடையில் இருந்து வரும் வருமானம் போதவில்லை. எனவே மாமனாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கணவனின் ஆதரவில் வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசும் டெலிகாலர் நிறுவனத்துக்கு வேலைக்குப் போகிறாள் ஃபர்ஹானா.

நல்ல வருமானம் வந்தாலும் அதுவும் போதாத நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் சாட் என்ற பெயரில் போன் மூலம் வாடிக்கையாளர்களின் ஆபாசப் பேச்
சுக்கு இணக்கமாக செக்சியாகப் பதில் சொல்லும் வேலைக்கும் போகிறாள் . ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் சக ஊழியை நித்யா (அனு மோல்) வின் உதவியால் போகப் போக பழகி விடுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் ஆபாசமாகப் பேசும் நபர்களுக்கு இடையே இசைக் கலைஞன் ஒருவன் (செல்வராகவன்) கண்ணியமாக அன்பாகப் பேச , இவளும் மனம் இளகுகிறாள். ஒரு நாள் அவன் பேசாமல் போனாலும் துடித்துப் போகிறாள். ஒரு நிலையில் நிறுவன விதிகளுக்கு அப்பாற்பட்டு அவனிடம் தன்னைப் பற்றிய விவரங்களை சொல்வதோடு அவனை சந்திக்கவும் முடிவு செய்கிறாள் .
சந்திக்கப் போகும்போது கணவனின் சந்தேகத்துக்கும் ஆளாகிறாள். சந்திக்க இருக்கும் மணித்துளிகளில் வந்த ஒரு போன் கால் மூலம், இது போல சந்திக்கப் போன – பாலியல் ரீதியாகவும் நெருங்கிய – இன்னொரு பெண் ( ஐஸ்வர்யா தத்தா) கொல்லப்பட்ட தகவல் வர, பயந்து போய் சந்திக்காமல் திரும்பி வந்து விடுகிறாள். கொல்லப் பட்ட தோழி விசயமாக போலீஸ் வீட்டுக்கு வந்து விசாரிக்கையில் ,அதையே அவமானமாகக் கருதும் குடும்பம், காறி உமிழ்கிறது.

இன்னொரு பக்கம் காத்திருந்து ஏமாந்து போன அந்த நபர் அவமானப்பட்டு கோபப்பட்டு சுய ரூபம் காட்டி ஃபர்ஹானாவை படுக்கைக்கு அழைக்க, இவள் மறுக்க, அவன் சகலவித பிளாக் மெயில் உத்திகளையும் செய்ய,
நடந்தது என்ன என்பதுதான் படம்.
படத்தின் மிகப் பெரிய பலம் கதை நிகழும் இடமும் , நடிக நடிகையரின் நடிப்பும் .
திருவல்லிக்கேணியின் நெரிசலான பரபரப்பான வீதிகள், ஃபர்ஹானா குடும்பத்தின் பழங்கால பாணிப் பூட்டு போடும் கடை, குறைந்த இடத்தில் அதிகம் பேர் வாழும்- , வெளிச்சம் கூட குறைவாகக் கொண்ட வீடு இவை சிறப்பு
ஐஸ்வர்யா முஸ்லீம் பெண்மணியாக உருமாறி இருக்கிறார். மத நம்பிக்கையில் உறுதியாக நின்று, அல்லாவின் ஆணைப்படி கடன் வாங்கக் கூடாது என்று வாழ்ந்து வறுமையில் வாடும் ஒரு இஸ்லாமியப் பெரியவரை அப்படியே உரித்து வைக்கிறார் கிட்டி. ஆனால் மத நம்பிக்கை, தான் கையாலாகாதவன் என்ற கழிவிரக்கம், சூழல் சந்தேகப்படச் சொன்னாலும் மனைவியை தவறாக நினைக்க மறுக்கும் அன்பு, இவற்றோடு கூடிய அந்தக் கணவன் கதாபாத்திரத்தில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் ஜித்தன் ரமேஷ் . அருமை.
இருள் ஒளிப் பயன்பாடு, வண்ணக் குழைவு , உணர்வுக் கூட்டல் ஆகியவற்றில் அசத்தி இருக்கிறது கோகுல்பினாயின் ஒளிப்பதிவு . ஆரம்பத்தில் கோடைக் கால ஆற்றில் ஓடும் குளுகுளு நீர்போல சுகம தரும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை, பிளாக் மெயில் காட்சிகளில் அமேசன் போலப் பாய்ந்து இதயத்தை தடதடக்க வைக்கிறது .

சிறு சிறு காட்சிகளை கோர்த்த விதமாகட்டும்…. பிளாக் மெயில் காட்சிகளில் இசைக் கருவிகளின் இயக்கத்தை சரியான கட் ஷாட்களில் போட்டு, அதில் இசையை ஏற்றி தடதடக்க வைக்கும் விதமாகட்டும் சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு அருமை .
மேலே சொன்ன எல்லாமும் சிறப்பாக வந்திருப்பதில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுக்கும் பங்கு உண்டு . ”கால் மி புருஷ் …. ” …. ரகளை !
இந்தப் படத்துக்கு மூன்று பேர் திரைக்கதை, மூன்று பேர் வசனம் எழுதியும் இரண்டுமே பெரிதாக ஈர்க்கவில்லை . செல்வராகவனும் ஐஸ்வர்யாவும் போனில் பேசும் காட்சிகள் தவிர சிறப்பான வசனம் என்று பெரிதாக இல்லை . அவ்வப்போது வசனத்தில் பொருத்தமாக உறுத்தாத அளவுக்கு உருது வார்த்தைகளை கலந்து விட்ட நபரைப் பாராட்டலாம்.
படத்தின் ஆரம்பக் காட்சியான கார் ஓட்டிக் கொண்டே கலவி என்பது, பெண்களை டார்கெட் ஆடியன்சாகக் கொண்ட இந்தப் படத்துக்கு தேவை இல்லாத ஆணி. அது ஓரளவுக்கு நடக்கிற விஷயம்தான் என்றாலும் இதைப் பார்த்து நாளைக்கு வேறு யாரும் கூட மகாபலிபுரம் 14 கிலோ மீட்டர் எல்லைக்கல் வருவதற்குள், இந்த எல்லை வரை முயற்சி செய்து, இதனாலும் விபத்து பெருகாமல் இருக்க வேண்டும் .

என்றைக்கு காசு அனுப்பினால் வீடியோ காலில் நிர்வாணமாக உடலைக் காட்டி தனி நபர்களே செக்சியாகப் பேசும் – இயங்கும் – வழக்கம் வந்ததோ , அன்றைக்கே இந்த, நிறுவன ரீதியிலான 56565 ஃப்ரெண்ட்ஷிப் சாட் செக்ஸ் எல்லாம் ‘நலிந்து போன நற்கலைகள்’ வரிசையில் சேர்ந்து விட்டது. இந்தக் காலகட்டத்தில் இதை முக்கிய விசயமாக வைத்து ஒரு கதை விட்டிருப்பதும் ஒருவகையில் போ
தாமைதான்.
இப்படி முடியும் ஒரு திரைக்கதையில் என்ன சூஸ்பரிக்கு அவ்வளவு நேரம் செல்வராகவனின் , காது, கண், மூக்கு, வாய் இவற்றை மட்டும் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரியவில்லை . ஒரு வேளை கடைசிவரை அப்படியே முகமே காட்டாமல் கொண்டு போய் இருந்தால் கூட நாவல்டியாக வித்தியாசமாக இருந்திருக்கும்.
எப்படிப் பார்த்தாலும் நாம் சந்திக்காலாமா என்று முதன் முதலில் ஃபர்ஹானாதான் கேட்கிறாள் என்பது அவள் தரப்பு நியாயத்தை பலவீனப்படுத்துகிறது. குரல் வழி உறவுக்கு மட்டும் என்று இருந்தவனை இவளே சந்திக்கலாமா என்று ஆசை காட்டி , கடைசியில் போகாமல் விட்டு விட்டு அதற்கான காரணத்தையும் சொல்லாமல் புறக்கணித்தால், புத்தனுக்கும் கோபம் வரத்தான் செய்யும் . ‘சந்திக்க வேண்டும் என்று முதலில் அவன் சொன்னான். கெஞ்சினான் . பிறகு இவள் ஏற்றுக் கொண்டாள்’ என்று இந்தக் கதை போயிருக்க வேண்டும்.

ஆழ்ந்து யோசித்தால் இந்தப் படத்துக்கு ஒரு மதப் பின்னணி எதுக்கு என்ற கேள்வியே எழுகிறது.
ஒரு ஒழுக்கமான குடும்பப் பெண் என்று பொதுப்படையாக சொல்லி இருந்தால் இந்தப் படம் எல்லாத் தரப்பு மக்களையும் நெருங்கி இருக்கும்.
பாய் கடையில் வந்து ஒரு பெண் போலீஸ் அதிகாரி ஷூ வாங்கும் காட்சியிலயே ,” என்ன பாஸ்? கிளைமாக்ஸ் ஓரளவுக்குப் புரியுதா ஆ.. ஆ. ஆ… ஆ.. ?”என்று காதருகே வந்து கத்திக் கேட்கிறார்கள். இயல்பாகப் போகும் கதையில் அந்த கடைசி நேரத் திருப்பம் சினிமாத்தனம்.
எனினும் காட்சிகளை எடுத்த விதம், எளிய குடும்பச் சூழல் மூலமே ஃ பார்ஹானாவுக்கு என்ன நடக்குமோ என்று பயத்தை ஏற்படுத்திய விதம் … ஒரு நிலையில் பரபரப்பு படபடப்பு இவற்றின் மூலம் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிப்பது, கணவன் மனைவி உறவின் புரிதலைப் பெருந்தன்மையை காட்டிய விதம் இவற்றால் ஃபர்ஹானா மனம் கவர்கிறாள் .