ஃபிலிம் ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் விஜய சந்தர் தயாரிக்க, ஹன்சிகா , பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா நடிப்பில் குரு சரவணன் கதை திரைக்கதை வசனம் எழுதி சபரியோடு சேர்ந்து இயக்கி இருக்கும் படம்.
இரண்டு பச்சை நிறக் கற்களை இணைத்து அதில் ஒரு ஆவியை கட்டி வைக்கிறது ஒரு மந்திரவாதிகள் குழு, ‘கல்லை வைத்து இருப்பவர் நினைத்தது எல்லாம் நடக்கும்; கல் உடைந்து ஆவி வெளியே வந்தால் மரணங்கள் நிகழும்’ என்ற எச்சரிக்கையோடு !
சிறுவயது முதலே அதிர்ஷ்டம் இல்லாதவராகத் தன்னை உணரும் ஒரு பேரிளம்பெண் ( ஹன்சிகா) கையில் அது கிடைக்கிறது . அவர் ஆசைப்படுவது எல்லாம் நடந்தாலும் அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் யாருக்கோ கெடுதல் நடப்பதை உணர்ந்த அவர் அதை உடைக்க, ஒரு பெண்ணின் ஆக்ரோஷமான ஆவி வெளிப்படுகிறது .
தமிழ்நாட்டு இளைஞனைக் காதலித்து மணந்து அவனால் ஏமாற்றப்பட்டு ஒரு பெண் குழந்தையோடு (பேபி க்ரிஷிதா) வாழும் ஒரு பெண் ஆடிட்டரை (ஷோபனா பிரனேஷ்?) அவரது முதலாளிகள் (சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி) பொய்க் கணக்குக் காட்டச் சொல்ல அவர் மறுக்க, அவரை அவர்கள் கொல்ல, ( யாருடைய தாய்மொழி தெலுங்கு? தயாரிப்பாளரா? இயக்குனர்களா?)
மிச்சக் கதையை பச்சைப் பிள்ளை சொல்லும்
நடிப்பு நடை உடை பாவனைகள் யாவற்றிலும் இருபது வருடத்துக்கு முந்தைய நிலையில் இருக்கிறார் ஹன்சிகா . அந்தக் கொணட்டல்கள்…. முடியல. ஆனால் பேயாக ஆன பிறகு சபாஷ் வாங்குகிறார் .
மற்ற எல்லாரும் பார்த்துச் சலித்த காட்சிகளில் பார்த்துச் சலித்த கேரக்டர்களில் பார்த்துச் சலித்த பாணியில் நடித்து இருக்கிறார்கள் .
இரைச்சலை இசையாக்கி இருக்கிறார் சாம் சி எஸ் .
நகைச்சுவை என்ற பெயரில் ஓட விட்டு அடிக்கிறார்கள் மொட்டை ராஜேந்திரனும் , தங்கதுரையும். இந்தப் பாவம் எல்லாம் சும்மா விடாது ஆமா !
அதிர்ஷ்டம் இல்லாத பெண் – அநியாயமாகக் கொல்லப் பட்ட பெண்ணின் ஆவி என்பது அட்டகாசமான காம்பினேஷன் . உருப்படியாக எழுதி இருந்தால் பட்டையைக் கிளப்பி இருக்கலாம் .
கோட்டை விட்டு விட்டார்கள்