அது என்ன சூதனம் ?
கவனமாக இரு என்பதை தென் மாவட்டப் பேச்சு வழக்கில் சூதானமாக இரு என்பார்கள் . “அந்த சூதானம் என்ற வார்த்தையை வட தமிழகத்தில் சூதனம் என்று சொல்வார்கள். (அப்படியா?)அதையே படத்துக்கு பேராக வைத்தோம்” என்கிறார் இயக்குனர் சுகன்
“அப்படி என்ன கதை ?” என்று கேட்டால் , “மூன்று பெண்கள் ஒரு செல்போன் கடைக்கு போய் ஒரே கம்பெனியை சேர்ந்த ஒரே மாதிரியான மொபைல் போன்களை வாங்கி வருகிறார்கள் . அதன் பின்னர் அவர்களுக்கு ராங் கால்கள் வருகிறது . அதைத் தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகள்தான் இந்தப் படம். சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது . புரியாத புதிர், ராம் , தெகிடி ஆகிய படங்களின் வரிசையில் கிரைம் படமாக இது வரும் ” ” என்கிறார் சுகன்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள் . குட்லக் ரவி, பரமேஷ் , பத்ரி என்று மூன்று இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் வெரைட்டி இருந்தது . நடனம் நன்றாக இருந்தது .
அடுத்துப் பேசிய வி சி குகநாதன் “நடிப்புத் திறமைக்கும் நடனம் ரொம்ப உதவும் . நாட்டியப் பேரொளி பத்மினியின் நடிப்புத் திறமைக்கு அவரது நடனத் திறமையே அடிப்படை ” என்றவர் , ஒரு பாடலில் சிறப்பாக ஆடிய நடனக் கலைஞரை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார் .
விழாவுக்கு வந்தவர்களை படத்தின் பத்திரிகை தொடர்பாளர் பெரு . துளசி பழனிவேல் வரவேற்றார் .