கணேஷ் வெங்கட் ராமன், ஸ்வேதா மேனன் , ஈரோடு மகேஷ் , சுகன்யா ஆகியோர் நடிக்க,
ஷங்கர் மற்றும் சுரேஷ் இணைந்து இயக்கி இருக்கும் படம் இணையதளம் .
ரசிகர்களை திரையரங்கோடு இணைக்கும் தளமாக இது இருக்குமா? பார்க்கலாம் .
ஏ டி எம்மில் ஒருவர் பணம் எடுத்துக் கொண்டு இருக்க, ஒரு டிவைஸ் மூலம் அவரது பாஸ் வேர்டை அப்போதே அருகாமையில் காரில் உட்கார்ந்தபடி கண்டு பிடித்து,
சம்மந்தப்பட்ட நபர் போன பின்பு அதே ஏ டி எம்முக்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடிக்கிரான் ஒருவன்
அவனை கண்டு பிடிக்கும் சைபர் கிரைம் டீமுக்கு ( கணேஷ் வெங்கட் ராமன், ஸ்வேதா மேனன் , ஈரோடு மகேஷ்) அடுத்து ஒரு சவால் . !
ஒரு நபரை சிறை பிடித்து கை கால்களை கட்டி அதை அப்படியே ஆன் லைனில் லைவ் ஆக ஒளிபரப்புகிறார்கள்.
அதை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்ப ஏதாவது ஒரு மெக்கானிக்கல் டிவைஸ் செயல்பட்டு , கட்டி வைக்கப்பட்டு இருக்கும் நபரை கொல்கிறது
உதாரணமாக சமூக வலை தளங்களில் கேலியும் கிண்டலுமான கமண்ட்களோடு அதிகம் புழங்கும் ஒரு பெரியவரை (டெல்லி கணேஷ் ) சிறை பிடித்து
அவரை மயக்கத்துக்கு ஆளாக்கி அவர் உடம்பில் ட்ரிப்ஸ் ஏறும்படி செட்டப் செய்கிறார்கள்.
அது ஆன் லைனில் லைவ் ஆக, அதைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக , ட்ரிப்ஸ் ஏறும் வேகம் அதிகமாகி அவர் செத்துப் போகிறார்
இதே வகையில், கான்ட்ரவர்சியாக கேள்விகள் கேட்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப் படுகிறார் . சைபர் கிரைம் ஆபீசர் ஒருவருக்கும் அதே நிலைமை . .
அடுத்து குறி வைக்கப் பட்டது யார் ? இதை செய்வது யார்? இப்படி கொல்லப் படுவது ஏன் ? என்பதே இந்தப் படம் .
என்னத்தச் சொல்ல ..
படத்தின் ஒழுங்கான ஒரே பகுதி எது என்றால் எப்படி எப்படி எல்லாம் ஐ பி அட்ரசை மறைத்து விட்டு இணைய தளத்தில் அதகளம் செய்ய முடியும் என்று சொல்கிற சில நிமிடங்கள்தான் .
அது வெகு ஜன மக்களுக்கு புரியப் போவது இல்லை . அவர்களுக்கு தேவையுமில்லை . சம்மந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு இதை விடவும் தெரியும் . எனவே சொல்லத் தேவை இல்லை .
இடைப்பட்ட நிலையில் ஆர்வத்தோடு உள்ளவர்களுக்கு ஒரு வெப் சைட் ஆரம்பித்து இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவ்வளவு கட்டணம் என்று,
ஆன் லைனில் சொன்னாலே போதுமே . தேவைப்படுவோர் மட்டும் பார்ப்பார் . எடுத்தவருக்கும் வருமானம் .இதுக்கு எதுக்கு , இப்படி ஒரு படம் ?
தவிர, படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட தேக்கம் (lag) .
நடித்திருக்கும் எல்லோரும் வசனத்தை புரிந்து கூட நடிக்கவில்லை. ஒழுங்காக மனப்பாடம் செய்யாமல் யோசித்து யோசித்து பேசும் படிக்காத மாணவன் போல பேசி, பொறுமையை சோதிக்கிறார்கள் .
தவிர படு செயற்கையான நடிப்பு, வசனம் பேசும் விதம் என்று … கொடுமை .
தேவையில்லாத காட்சிகள் ஷாட்கள் படம் முழுக்க .
எடிட்டர் என்று ஒருவர் இந்தப் படத்துக்கு இருக்காரா ? இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா ?
இதெல்லாம் கூட பரவாயில்லை.
ஆன் லைன் மூலம் கொல்ல ஒரு ஐடியா சொல்றாங்க பாருங்க . அபாரம் பரிமளா … அபாரம் !
ஒருவனின் கையையும் காலையும் கட்டி கழுத்தில் கயிறு மாட்டி கூரையில் தொங்க விட்டு, மேற்படி நபரை ஒரு பெரிய பனிக்கட்டி மீது நிற்க வைப்பார்களாம்
பனிக்கட்டி மீது லைட் போடுவார்களாம். இதை அப்படியே ஆன் லைனில் லைவ் ஆக காட்டுவார்களாம் .
ஆன் லைனில் அதை பார்ப்போர் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, லைட்டின் வெளிச்சம் அதிகமாகுமாம். அதனால் பனிக்கட்டி மீது வெப்ப நிலை அதிகமாகுமாம் . அ
அதனால் பனி உருகி , தொங்க விடப்பட்டு இருக்கும் நபர் தூக்கில் தொங்கி சாவாராம் . அடக் கடவுளே !
லைட்டும் வேணாம் . ஒரு மண்ணும் வேணாம் . வியூவர்சும் வேணாம் . ஒரு வெங்காயமும் வேணாம் .
அறை வெப்ப நிலையில் பனிக்கட்டி தானா உருகும் . அட ஏ சி ரூம்ல கூட பனிக்கட்டி உருகுமுங்க .
நீங்க கதை எழுதுன ஆபீசுக்கு அடுத்த அபார்ட்மென்ட்ல அஞ்சாவது படிக்கிற பையன் எவனாவது இருந்து, அவன் கிட்ட கேட்டு இருந்தா கூட அவன் அறிவோட சொல்லி இருப்பானே.
பிளாஷ் பேக்கில் சுகன்யா வேறு வந்து .. இப்படியா பயமுறுத்துவார்?
ஒண்ணு பண்ணுங்க .. பாகிஸ்தான் சீனாக்காரன்களுக்கு எல்லாம் இந்த படத்தைப் போட்டுக் காட்டுங்க. மொத்தமா பரலோகம் போயிடுவானுங்க .
நமக்கும் நல்லது . உங்க பேரும் இந்திய தேசிய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
பட்….. மீ பாவம் . ரசிகர்கள் பாவம்
மொத்தத்தில் இணைய தளம் …. 0 viewers.